Ad

வியாழன், 5 நவம்பர், 2020

தடையை மீறி தொடங்குமா வேல் யாத்திரை?! - திருத்தணிக்குள் நுழைய பா.ஜ.க-வினருக்கு தடை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளையும் இணைக்கும் வகையில், வெற்றிவேல் யாத்திரை நிகழ்ச்சியை திருத்தணியில் இன்று தொடங்கி டிசம்பர் 6-ம் தேதியன்று திருச்செந்தூரில் நிறைவுசெய்ய தமிழக பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. பா.ஜ.க-வின் இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில், ‘‘வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது’’ என்று தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

திருத்தணி முருகர் கோயில்

‘‘தடையைமீறி யாத்திரையைத் தொடங்கினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறையும் எச்சரிக்கைவிடுத்தது. இப்படியானச் சூழலில், ‘‘எந்த தடை வந்தாலும் வேல் துள்ளி வரும்’’ என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி, தடையைமீறி வேல் யாத்திரையை தொடங்குவதற்காக திருத்தணியில் நேற்று இரவு முதலே பா.ஜ.க-வினர் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

இதையொட்டி, அக்கட்சியின் மாநில முன்னணி தலைவர்கள் சிலர் நேற்று மாலையே திருத்தணிக்கு வந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் திருத்தணிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். இன்று காலை வேல் யாத்திரையை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், அதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என்றும் பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பக்தர்களிடம் சோதனை

இதையடுத்து, பா.ஜ.க-வினருக்கு திருத்தணியில் நுழைய காவல்துறை தடை விதித்திருக்கிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருத்தணிக்கு வரக்கூடிய வாகனங்களை மாவட்ட எல்லைகளிலேயே தடுத்து நிறுத்துகிறார்கள். யாத்திரையில் கலந்துகொள்பவர்களாக தெரிந்தால், அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்புகிறார்கள். பொதுமக்களாக இருக்கும் பட்சத்தில், அடையாள அட்டைகளை சரிபார்த்தப் பின்னர், மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கிறார்கள். இதேபோல், திருத்தணி கோயில் முன்பும் தடுப்புகளை அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களும் அதிகளவில் கோயிலுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். பக்தர்களிடமும் விசாரணை நடத்தும் போலீஸார், ஏதாவது ஓர் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறார்கள். இதனிடையே, யாத்திரையில் கலந்துகொள்வதற்காக வரும் பா.ஜ.க தலைவர்களை சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யும் திட்டத்திலும் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/thiruthani-police-in-high-alert-because-of-bjps-vel-yatra-announcement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக