Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

சிவகங்கை: `கிட்னி பெற்று தருகிறேன்... ரூ. 60 லட்சம் செலவாகும்!’ - 4 பேர் மீது வழக்கு பதிவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரிநகர் அதியமான் தெருவைச் சேர்ந்தவர் பூமலை (வயது 54). சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், காரைக்குடி சுப்பிரமணியபுரம் ஐந்தாவது தெற்குத்தெருவைச் சேர்ந்த அருளானந்த சுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர், பூமலை குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்துள்ளனர். பூமலையின் நிலையை அறிந்த அருளானந்தசுவாமி மற்றும் அவரது மனைவி புஷ்பா, மகன் நெப்போலியன், மகள் நான்சி ஆகியோர், காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ளும் படியும், அந்த மருத்துவமனையின் மருத்துவர் தங்களுக்கு குடும்ப நண்பர் என்றும் பூமலையிடம் கூறியுள்ளனர்.

பண மோசடி

பல நாட்களாக நட்புடன் பழகி வந்த அவர்களின் பேச்சை நம்பிய பூமலை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை, அறுவை சிகிச்சைக்காக ரூ.60 லட்சம் கேட்பதாக பூமலையிடம் அருளானந்தசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கூறவே, கடன் மற்றும் நகைகளை அடமானம் வைத்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் சுமார் 4 ஆண்டுகளாக பல தவணைகளாக ரூ.60 லட்சம் பணத்தை அருளானந்தசுவாமியிடம் கொடுத்துள்ளார் பூமலை. ஆனால், இப்போது வரை சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடக்கவில்லை. இதனால் மனமுடைந்த பூமலை, தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

Also Read: கோடிக்கணக்கில் பண மோசடி! - லட்சக்கணக்கில் போலி விவசாயிகள்

மோசடி

அப்போது, `பணத்தை கொடுக்கமுடியாது’ என அருளானந்தசுவாமி கூறியது மட்டுமல்லாமல், பூமலையை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் பூமலை. புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், அருளானந்தசுவாமி மற்றும் அவரது மனைவி, மகன், மகள் என நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து, அருளானந்தசுவாமியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அருளானந்தசுவாமி.

Also Read: `கன்னியாகுமரியிலும் கலெக்டர் பெயரில் இ-மெயில் மோசடி!’ தனிப்படை விசாரணை

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கும் போது, “கிட்னி பாதிக்கப்பட்ட பூமலையை, குடும்பத்தினர் சேர்ந்து ஆசை வார்த்தை கூறி பணம் பறித்துள்ளனர். கிட்னி வாங்கித்தருகிறேன். ரூ. 60 லட்சம் செலவாகும் என கூறியுள்ளனர். அதனை பூமலை நம்பியுள்ளார். கேட்கும் போதெல்லாம், கிட்னி இன்னும் கிடைக்கவில்லை என கூறு ஏமாற்றியுள்ளனர். நால்வர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதில், அருளானந்தசுவாமியின் மகள் நான்சி சிங்கப்பூரில் உள்ளார். மற்ற அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/case-registered-against-four-in-froud-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக