Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

ஆன்லைன் சூதாட்ட வழக்கு: `கோலி, கங்குலி, தமன்னாவுக்கு நோட்டீஸ்!’ - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ''உடனே அரசு பதில் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் நீலமேகம், வழக்கறிஞர் முகமது ரஸ்வி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், ''கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையதள சேவையை பயன்டுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இதை பயனபடுத்தி இணையதளத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட பல்வேறு சூதாட்ட விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதனால் ஏராளமான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்'' எனவும், ``ஆன்லைன் சூதாட்டத்துக்கு கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் விளம்பரம் செய்கிறார்கள். அதனால், இளைஞர்கள் அதை நம்பி ஈடுபடுகிறார்கள். இதில் பணத்தை இழந்து மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆன்லைன் சூதாட்டம் சிலர் உயிரையும் பறித்து விடுகிறது. கடந்த 2 மாதத்தில் 10 -க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் விராட்கோலி, தமன்னா உட்பட பல விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்கள்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ''தெலங்கானா, ஆந்திர மாநில அரசுகள் எடுத்ததுபோல ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

``ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்'' என்ற நீதிபதிகள் ``பிரபல நபர்கள் பொதுமக்களின் நலனைக் கருதாமல் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர், எனவே, விராட் கோலி, கங்குலி, பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்'' என்றவர்கள் வழக்கை நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/online-rummy-banned-case-hc-orders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக