மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தின் ஷின்னார் (Sinnar) பகுதியைச் சேர்ந்த யோகேஷ் சிர்ஷாத் என்பவருக்குப் பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்காததால், `வரன் தேவை’ என்று அவரது பெற்றோர் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் அறிமுகமான விஜயா அம்ருதே என்பவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஷிர்ஷாத்துக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து 15 நாள்களுக்குப் பின்னர் நகை, பணத்துக்குடன் விஜயா மாயமாகியிருக்கிறார். அவரைப் பல இடங்களில் ஷிர்ஷாத் தேடியும் கிடைக்கவில்லை. விஜயா குறித்து விசாரித்த ஷிர்ஷாத்துக்கு பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இதையடுத்து, ஔரங்காபாத் நகரக் காவல்நிலையத்தில் ஷிர்ஷாத் குடும்பத்தினர் புகார் கொடுத்திருக்கிறார். விசாரணையில், விஜயா அம்ருதேவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் இருப்பது தெரியவந்திருக்கிறது. லாக்டௌன் காலத்தில் விஜயாவுக்கும் அவரது கணவருக்கும் வேலை போயிருக்கிறது. இதனால், கடும் பொருளாதார நெருக்கடிக்கு அவரது குடும்பம் உள்ளாகவே, திருமணம் என்ற பெயரில் மோசடி செய்யும் கும்பலுடன் இணைந்து மோசடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். அவர், 3 மாதங்களில் மூன்று ஆண்களைத் திருமணம் செய்து மோசடி செய்ததையும் போலீஸார் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
Also Read: `டிக்டாக் காதல்; திடீர் திருமணம்; கருக்கலைப்பு!’ -சாதியைக் காரணம் காட்டி விரட்டப்பட்ட சிறுமி
இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் பேசிய ஔரங்காபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் பாவ்கர், `ருமணம் செய்தவுடன் சில நாள்கள் அந்தக் குடும்பத்துடன் தங்கியிருக்கும் விஜயா, அங்கிருந்து பணம், நகைகளுடன் மாயமாகிவிடுவார். அவரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்று கூறியிருக்கிறார். அவர் ஷிர்ஷாத்தை முதலில் திருமணம் செய்த பிறகு, அடுத்த இரண்டு மாதங்களில் ராய்கட் பகுதியைச் சேர்ந்த சந்தீர் தராடே, மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என இருவரையும் திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறார்.
`திருமணத்துக்காகப் பெண் தேடும் குடும்பத்தினரைக் குறிவைத்து இயங்கும் அந்தக் கும்பல், வரன் தேடும் மணமகன் குடும்பத்தினரைத் தொடர்புகொள்வார்கள். பெண் குடும்பத்தினர் பேசுவதுபோல் பேசி மணமகன் குடும்பத்தினரைச் சந்தித்து முதலில் திருமணத்தை உறுதி செய்வார்கள். திருமணம் உறுதி செய்யப்பட்டவுடன், கமிஷன், திருமண செலவு என 2 முதல் 5 லட்ச ரூபாய் மணமகன் குடும்பத்தினரிடம் கறந்துவிடுவார்கள். திருமணம் முடிந்து சில நாள்கள் மணமகன் குடும்பத்துடன் தங்கியிருந்து, பின்னர் கிடைக்கும் நகை, பணத்தைச் சுருட்டிக்கொண்டு மணமகள் மாயமாகிவிடுவார். இந்த ஸ்டைலில் மேலும் சிலரிடம் இவர்கள் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று விசாரித்து வருகிறோம்’ என்கிறார்கள் ஔரங்காபாத் போலீஸார்.
source https://www.vikatan.com/social-affairs/crime/maharashtra-police-arrests-27-year-old-woman-over-duping-men-on-the-pretext-of-marriage
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக