Ad

புதன், 4 நவம்பர், 2020

`24 கேமரா; 6 இன்வெர்ட்டர்கள்; மூன்றரை லட்சம் ரூபாய்’ - நெகிழ வைக்கும் `சிசிடிவி' கிராமங்களின் கதை!

முதல் இரண்டு பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் தொடர்பான க்ரைம் செய்திகளைப் பார்த்தோம். இந்தப் பகுதியில் `சிசிடிவி' கிராமங்கள் குறித்தும் சிசிடிவி-யின் அவசியம் குறித்தும் அலசலாம் வாங்க!

Also Read: அதிரவைத்த `புல்லட் கும்பல்'; பாராட்டுபெற்ற அயர்லாந்து இளைஞர் - சிசிடிவி சுவாரஸ்யங்கள்! #CCTV

`சிசிடிவி' கிராமங்கள்!

நகரங்களில்தான் சிசிடிவி கேமராக்கள் அதிகம் பொருத்தப்படுகின்றன. ஆனால், சிசிடிவி கேமராக்களை பொருத்துவதன் மூலம் தங்கள் கிராமத்தில் நடக்கும் குற்றங்கள் குறையும் என்கிற நம்பிக்கையோடு செயல்பட்டிருக்கும் இரண்டு கிராமங்களைப் பற்றித் தெரியுமா?

சிசிடிவி

Also Read: `காவல்துறையின் நண்பன்; குற்றவாளிகளின் எதிரி' - சிசிடிவியும் சுவாரஸ்ய க்ரைம்களும்! #CCTV

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொம்பூதி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் குடும்பச் சூழல் காரணமாக துபாய், கத்தார், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை புரிகின்றனர். கொம்பூதி கிராமத்தில் அவ்வப்போது சில திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. சமீபத்தில், கொம்பூதி கிராமத்தில் உள்ள கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு 60,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

வெளிநாட்டில் வாழும் கொம்பூதி கிராம இளைஞர்கள் அனைவரும் இந்தச் செய்தி கேட்டுக் கவலையடைந்துள்ளனர். கவலையடைந்ததோடு மட்டுமல்லாமல் இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்திருக்கிறார்கள். அதையடுத்து கிராமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தத் திட்டமிட்டனர். இதற்காக 7 பேர் கொண்ட குழு அமைத்து 24 மணிநேரமும் இயங்கும்படி 24 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. மின்வெட்டு நேரத்திலும் கேமராக்கள் இயங்க வேண்டுமென்பதற்காக 6 இன்வெர்ட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி, இன்வெர்ட்டர் உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்துச் செலவான மூன்றரை லட்சம் ரூபாயை வெளிநாட்டில் வாழும் கொம்பூதி கிராம இளைஞர்களே ஏற்றுக் கொண்டு கொம்பூதி மக்களை நெகிழவைத்திருக்கிறார்கள்.

இதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதில் கிராமத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. சுமார் 2,000 பேர் வசித்து வரும் வடுகச்சிமதில் கிராமத்தில், தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அங்குள்ள இசக்கியம்மன் கோயிலில் 3 முறை உண்டியல் பணம் திருடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வீடுகளிலும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதையடுத்து, கிராம நிர்வாகம், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களிடம் நிதி வசூல் செய்து, லட்ச ரூபாய் செலவில் கிராமத்தின் முக்கிய இடங்களில் 8 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியது. தனியாக அறை அமைத்து கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சொந்தச் செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய வடுக்கச்சிமதில் கிராம மக்களுக்கு நாங்குநேரி காவல்துறையினர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

சிசிடிவி கேமரா

Also Read: ``கொலை, கொள்ளையைத் தடுக்க 100 சிசிடிவி கேமராக்கள்" - ஆம்பூரில் அசத்தல் முயற்சி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது, இனங்கனூர். இந்தக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில், இனங்கனூர் கிராமத்துக்குள் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வருவதையும், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காரணமின்றி வெளியே செல்வதையும் தடுப்பதற்காக, அங்குள்ள ஊராட்சி மன்றத் தலைவர், ஊர் முகப்பு மற்றும் மையப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைத்துக் கண்காணித்து வந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தது.

சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கண்காணிப்பு - இனங்கனூர்
கிராமங்களில் தொழில்நுட்பங்கள் குறித்த பெரிய விழிப்பு உணர்வு இல்லை எனச் சொல்லிக் கேள்விப்பட்ட நமக்கு, `அப்படியெல்லாம் இல்லை' என்று சொல்லும் விதமாக, மேற்கண்ட கிராமங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை விதையை விதைக்கின்றன. பிற கிராமங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன!

சிசிடிவி ஏன் அவசியம்?

சிசிடிவி கேமராக்கள் குறித்து சில கருத்துகளைப் பகிர்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள், ``இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை எனக் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதுவும் குற்றம் செய்தவர் யாரெனக் கண்டுபிடிக்க முடியாத வகையில் பல குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு ஒரு சிறிய துப்பு தேவைப்படுகிறது. அப்படித் துப்புக் கொடுக்கும் இன்ஃபார்மர் வேலையைச் செய்வதற்கு சிசிடிவி கேமராக்கள் அவசியம்'' என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

மேலும், ``எளிதாக சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து திருடுவதைப் போலத் திரைப்படங்களில் காண்பிக்கிறார்கள். ஆனால், அப்படியான சம்பங்கள் நிஜத்தில் நடப்பதில்லை. பெரிய திருட்டுச் சம்பங்களில், ஏதாவது ஒன்றிரண்டு சம்பவங்களில் அப்படி நடந்திருக்கலாம். எதிர்காலத்தில் நிச்சயம் சிசிடிவி கேமராக்களை எளிதாக ஹேக் செய்யும் முறையை கண்டுபிடிப்பார்கள். ஆனால், அப்போது எளிதாக ஹேக் செய்ய முடியாத அளவுக்கு சிசிடிவி கேமராக்களின் தரமும் உயரும். விஞ்ஞான வளர்ச்சி என்பது இதுதான்'' என்றவர்களிடம் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஏதாவது பிரச்னைகள் ஏற்படுமா என்று கேட்டோம்.

சிசிடிவி

``அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றாலே சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், சிசிடிவி கேமராக்களை பொருத்தமட்டில் பாதகங்கள் என்று சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. செல்போன் உபயோகப்படுத்தினால் யு.வி கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும், அதிக நேரம் டிவி பார்த்தால் கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புக்களில் சில பாதகங்களும் இருக்கும். ஆனால், சிசிடிவி கேமராக்கள் மூலம் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத்தான் சிசிடிவி உதவுகிறது. தவறு செய்பவர்கள்தான் சிசிடிவி கேமராக்களை கண்டு அஞ்சுவார்கள். எனவே, அப்படியானவர்களுக்கு வேண்டுமானால் சிசிடிவி கேமராக்கள் தொல்லையாக இருக்கலாம். மற்றபடி அது ஒரு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு'' என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

மேலும், ``பெருநகரங்களின் எல்லா இடங்களிலுமே சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. சிறு நகரங்களிலும் கடைவீதிகளில் கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டிருக்கின்றன. களக்காடு, கொம்பூதி கிராமங்களைப் போலவே குற்றங்கள் அதிகம் நடக்கும் கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது அவசியம். சாலை போடும் பணிகளைச் செய்வதைப் போல இதையும் அரசாங்கமே எடுத்துச் செய்ய வேண்டும்'' என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

CCTV

Also Read: அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுவது ஏன்? - சுவாரஸ்யப் பின்னணி!

என்னதான் பெரு நகரங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், பிரபலங்கள் அடிக்கடி வந்து செல்லும் சில நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அணைத்தே வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். `நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமா? நட்சத்திர மருத்துவமனைகளிலும்தான் சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்படுகின்றன' என்று உங்கள் மைண்ட் வாய்ஸில் ஓடுவது கேட்கிறது. சரி, அது குறித்து விசாரிக்க ஆணையம் இருக்கிறது... நாம் கட்டுரையின் முடிவுக்கு வருவோம்...

`` `காவல்துறை பொதுமக்களின் நண்பன்' என்பார்கள். தற்போது காவல்துறைக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் நண்பனாகத் திகழ்கிறது சிசிடிவி! `மூன்றாவது கண்' ஆகச் செயல்படும் சிசிடிவி கேமராக்களை கண்டு தவறு செய்பவர்கள் அஞ்சுவார்கள். அந்த அச்சம் காரணமாகத் தவறுகள் நிச்சயமாகக் குறையும்'' என்று சிசிடிவி குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் கடத்து வகையில் நம்பிக்கை வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறார்கள் காவல்துறையினர்.


source https://www.vikatan.com/news/crime/interesting-story-about-villages-that-installed-cctv-camera-on-their-own

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக