மழை, குளுகுளு வானிலை என இதமான சூழலுக்கு வழக்கத்திலிருந்து விலகி, வித்தியாசமாக என்ன சாப்பிடலாம்...? பலரின் தேடலும் இதுவாகவே இருக்கும் நிலையில், இப்போது சீசன் தொடங்கியுள்ள மரவள்ளிக்கிழங்கில் விதம் விதமான உணவுகளைச் செய்து ருசிக்கலாம். ஆரோக்கியம், சுவை என இரண்டுக்கும் உத்தரவாதம் தரும் மரவள்ளிக்கிழங்கில் வடை முதல் கிரேவி வரை என்னென்னவோ செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாத சேதி... முயற்சி செய்யத் தயாரா?
மரவள்ளிக்கிழங்கு மசால் வடை
தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ
ஊறவைத்த கடலைப்பருப்பு - 200 கிராம்
பச்சரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்)
பூண்டு - 10 பல்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 4
புதினா - ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கவும்)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 500 மில்லி
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி எடுக்கவும். மரவள்ளிக்கிழங்கு மசால் வடை தயார். இது தயிர் சாதத்துக்கு சுவையாக இருக்கும்.
மரவள்ளிக்கிழங்கு அல்வா
தேவையானவை:
துருவிய மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ
சர்க்கரை - 150 கிராம்
நெய் - 150 கிராம்
முந்திரி, பாதாம் - தலா 20
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
அடிகனமான கடாயில் 4 டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி, பாதாம் வறுத்தெடுத்து வைக்கவும். பின் வாணலியில் 4 டீஸ்பூன் நெய்விட்டு துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். அதே வாணலியில் சர்க்கரையைப் போட்டு, 50 மில்லி தண்ணீர்விட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். பின்பு அதில் வதக்கி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறவும். நெய் பிரிந்து வந்தவுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து கிளறி எடுக்கவும். சுவையான அல்வா தயார்.
மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை
தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ (துருவவும்)
பச்சரிசி - 250 கிராம்
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு (சேர்த்து) - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்)
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 6 பல்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்
எண்ணெய் - 500 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசி, பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பின்பு கழுவி வடித்து வைக்கவும். பின்பு அதில் இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி பின்பு எடுத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தோசை தவாவில் எண்ணெய்விட்டு கொஞ்சம் கனமான அடைகளாக வார்த்து பொன்னிறமாகத் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி ஏற்றது.
மரவள்ளிக்கிழங்கு பட்டாணி தேங்காய்ப்பால் கிரேவி
தேவையானவை:
பொடியாக நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ
ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம்
தேங்காய்ப்பால் - ஒரு டம்ளர் (அரை மூடியில் எடுத்தது)
பச்சை மிளகாய் - 4
முந்திரி - 6
வெங்காயம் - 50 கிராம்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு, ஊறவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவிடவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், முந்திரியை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, பட்டாணி சேர்க்கவும். அதில் அரைத்த பச்சை மிளகாய், முந்திரி விழுதை சேர்த்து ஒரு கொதிவிடவும். பின்பு தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்தால் மரவள்ளிக்கிழங்கு பட்டாணி தேங்காய்ப்பால் கிரேவி தயார்.
source https://www.vikatan.com/food/food/tapioca-special-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக