மத்திய அமைச்சர் (பஞ்சாயத்துராஜ்) கபில் மோரேஸ்வர் பட்டேல் பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்தந்த மாநிலங்களில் மத்திய அரசின் மூலம் நடைபெறும் திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வீட்டுப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பழங்குடியினர் குடியிருப்புக்குச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, அரசின் திட்டப்பணிகள் அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார். இதற்கிடையே இந்தியில் பேசிய அமைச்சருக்கு தமிழில் மொழி பெயர்க்க பா.ஜ.க சார்பில் நிர்வாகி ஒருவரை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆய்வுக்கூட்டத்தை முடித்தக் கையோடு மத்திய அமைச்சர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.
புதுக்கோட்டையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியதில் கோடிக்கணக்கில் முறைகேடு ஏற்பட்டிருக்கிறதே?
``இங்கு நடைபெற்ற முறைகேடு குறித்த தகவலை என் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தில் பயனாளிகள் நேரடியாக தங்களது வங்கிக் கணக்கில் மத்திய அரசிடமிருந்து பணம் பெறுவார்கள்.
பயனாளிகள் பெறாமல் அந்தப் பணத்தை வேறு யாரேனும் கையாடல் செய்திருந்தால், அது மாவட்ட ஆட்சியரின் விசாரணையில் தெரியவரும். குறிப்பாக, அரசு அலுவலர்கள் இதை செய்திருந்தால் அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை பயனாளிகளே அந்தப் பணத்தை வீடு கட்ட பயன்படுத்தாமல் வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தி இருந்தால் அவர்கள் வீடு கட்டிக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். இது குறித்து, முழுமையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியிருக்கிறேன்."
மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறதே?
``இந்தத் திட்டத்தில் எந்த ஊழலும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஆன்லைன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 40 நாள்கள்தான் வேலை கொடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவு என்றுதான், நான் நினைக்கிறேன். ஒருவேளை அப்படி நடந்திருக்கும்பட்சத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பார்."
பஞ்சாயத்துகளுக்கு போதுமான நிதி அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறதே?
``மத்திய அரசு பஞ்சாயத்துராஜ் அமைச்சரான எனது பரிந்துரையின் பேரில் நிதி ஆணையத்தின் மூலமாக நிதி ஒதுக்கப்படுகிறது. ஒதுக்கும் பணம் நேரடியாக மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாநில அரசு அந்த பணத்தை பெற்று 10 தினங்களுக்குள் பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும். தாமதப்படுத்தினால் அந்தப் பணத்தை வட்டியோடு பஞ்சாயத்துகளுக்கு செலுத்த வேண்டும். பஞ்சாயத்துகள் பணம் பெறுவதில் தாமதம் ஏதும் இருந்தால், நான் மத்திய அமைச்சக அலுவலர்களை அனுப்பி கண்டிப்பாக விசாரிக்கச் சொல்கிறேன்."
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் சரியாக நடைபெறுகிறதா?
``சில திட்டங்கள் மட்டும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளேன். தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அது அனைவரிடமும் சென்றடைகிறதா என்று அறிய வேண்டும்.
இன்று காலை நான் ஒரு விவசாயியைச் சந்தித்தேன். அவருக்கு முன்பு கிஷான் சம்மான் யோஜனா திட்டத்தில் நிதி உதவி கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது கிடைப்பதில்லை என்று கூறினார். ஆனால், அவரிடம் நிலம் அவர் பெயரில் இருக்கிறது, ஏன் அவருக்கு அந்த நிதி கிடைக்கவில்லை... அதையெல்லாம் விசாரிக்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து மாநில அரசு அதிக நிதியை பெற வேண்டும் என்றால் முதலில் மாநில அரசு, மத்திய அரசின் திட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும்.
``எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்வது என்பது 2024 தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடா? அரசியல் ஆதாயத்திற்காகவே நடத்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் சொல்கின்றனரே?"
``அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நமது பாரத பிரதமர் நம் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் ஏராளமான திட்டங்களைக் கொண்டு வருகிறார். இந்தத் திட்டங்கள் எல்லாம் நாடு முழுவதும் சரியாக சென்றடைந்துள்ளதா என்பதை மேற்பார்வையிட நாங்கள் வந்திருக்கிறோம். அரசியல் நோக்கம் என்பது எல்லாம் இல்லை. அப்படிப் பார்த்தால் மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது. அங்கே அமைச்சர் அனுராக் தாகூர், ஏன் பிரதமர்கூட நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அதேபோல் தான் தமிழ்நாட்டிலும் எங்களது வருகையைப் பார்க்க வேண்டும்."
முன்னதாக பா.ஜ.க முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பலரும் மாவட்டத்திற்குத் தேவையான, செயல்படுத்த முடியாத நீண்டநாள் திட்டங்கள் குறுத்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/central-panchayat-raj-minister-inspection-at-pudukottai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக