Ad

சனி, 5 நவம்பர், 2022

விராட் கோலி: எல்லா களத்திற்குமானவன், எல்லா காலத்திற்குமானவன்; 99% பேட்ஸ்மேன்கள் செய்யாததைச் செய்பவன்!

டி20 வானொலியில் அதிரடிப் பண்பலையில் யாருமே தடம் பதிக்கா அலைவரிசையில், தனது அசகாயச் சாதனைகளை கோலி ஒலிபரப்பி வருகிறார்.

கோலியின் டெஸ்ட் களத்தின் பக்கங்கள், வெள்ளை நிறத்தால் அல்ல, வானவில்லின் வண்ணங்களால் ஆனவை. பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும், இந்திய அணியில் புதுமைகளையும், புரட்சிகளையும் புகுத்தியவர். ஒருநாள் போட்டிகளிலோ, இந்தியா தொலைத்துத் தேடிய சச்சினாகவே உருமாறி வந்தவர். அதற்கான வலுவான தரவுகளும் உண்டுதானே! ஆனால், இந்த மற்ற இரண்டு ஃபார்மேட்டின் முன்னால், கோலியின் டி20 பக்கங்கள் சற்றே மறைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், டி20-ல் கோலி தொட்டிருக்கும் உச்சம், பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிச் சிலாகிக்கப்படவேண்டிய ஒன்று!

மொத்தமாக 105 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் களம் கண்டுள்ள கோலிக்கு, அதில் 4000 ரன்களை எட்ட இன்னமும் 68 ரன்கள் மட்டுமே தேவை. இதில் 36 அரைசதங்களை அடித்துள்ளார். அதாவது சராசரியாக மூன்று போட்டிகளுக்கு ஒரு அரைசதம் வந்து சேர்ந்துள்ளது. 300+ பவுண்டரிகளையும், 100+ சிக்ஸர்களையும் அடித்துள்ள நான்கே வீரர்களில் கோலியும் ஒருவர். சர்வதேச டி20-ல் அதிக ஆட்டநாயகன் விருதை (15 முறை) வென்றிருப்பவரும் கோலி மட்டும்தான்.

விராட் கோலி, கே.எல்.ராகுல்
மற்றவர்களைவிட கோலியின் டி20 உலகத்தில் அப்படி என்ன வித்தியாசம்? எது அவரை சிறப்பு அம்சமுடையவராக மாற்றுகிறது?

பொதுவாக, டி20 என்பது ஒவ்வொரு பந்திலும் ரன்வேட்டை ஆடவேண்டிய களம். ஒவ்வொரு பந்தும் பேட்ஸ்மேனின் பங்களிப்பைக் கேட்கும். உடல் வலுவினையும், கைகள் - கண்கள் ஒருங்கிணைப்பையும் கோரும்; விக்கெட்டைப் பாதுகாப்பது அவசியமென்றாலும் ஸ்ட்ரைக்ரேட் உதை வாங்காமல் பார்ப்பது இன்னமும் அவசியம். அன்ஆர்தடாக்ஸ் ஷாட்டுகளால் இன்னிங்ஸ் நிரப்பப்படுவது, வேரியஷன்களால் வேல் தொடுக்கும் பௌலரிடமிருந்து பாதுகாப்பு வளையமிட்டுக் கொள்ள உதவும். ஆனால், கோலியின் ஆட்டம் இந்த டி20 இலக்கணங்களை மீறியதாகவே இருக்கும்.

இயான் செப்பல் ஒருமுறை, "டி20-க்கு ஏற்றாற் போன்ற ஷாட்டுகளை ஆடக் கற்றுக் கொள்ளலாமே?!", என கோலியிடம் கேட்டபோது, "அது என்னுடைய டெஸ்ட் பேட்டிங் குவாலிட்டியைக் குறைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கலாம், எனவே ஆர்தடாக்ஸ் ஷாட்டுகளைக் கொண்டே, நான் டி20-லும் ரன்களைக் குவிக்க முயல்கிறேன்" என்று கூறியிருந்தார். உண்மையில் அதீதக் காதல் கொள்ளவைக்கும் அவரது கவர் டிரைவும், பேக்ஃபுட் பன்ச்சும், மணிக்கட்டின் மாயம் காட்டும் ஃப்ளிக்கும் மனதைக் கொள்ளை அடிப்பவைதான். எனினும், ராஃபின் ஸ்லோ பாலை ஸ்கொயருக்குத் திருப்பி அங்கே இருந்த ஃபீல்டர்களுக்கு இரையாகாமல், ஸ்ட்ரெய்டில் சிக்ஸராக்கிய அந்த ஷாட் போன்ற சில அற்புதங்கள்தான் கோலியைத் தனித்துவப்படுத்துகின்றன.

இதையும் தாண்டி, டாம் மூடி சமீபத்தில் கூறியிருந்ததை போல் 99.99% பேட்ஸ்மேன்கள் செய்யத் தவறுவதை கோலி செய்கிறார். ஆட ஆரம்பித்து முதல் 20 - 25 பந்துகளில் வெறும் ரன் எ பால் கணக்கில் சரக்கு ரயில் வேகத்தில்தான் இன்னிங்ஸைத் தொடங்குவார். இது அவர் காலூன்ற எடுத்துக் கொள்ளும் நேரம். திரியில் பற்ற வைத்த தீ வெடிபொருளை எட்ட எடுக்கும் அதே கால அவகாசம்தான் அது.
விராட் கோலி

அதற்குப்பின் ஸ்ட்ரைக்ரேட் சற்றே வேகமெடுக்கும். இறுதியிலோ எக்ஸ்பிரஸ் டிரெய்னாக எங்கோ எகிறும். எவ்வளவு தவறவிட்டாரோ அவ்வளவுக்கும் சேர்த்து வசூலித்து விடுவார். ஐன்ஸ்டீன் ஒருமுறை, "எலிகள் தனக்கான பொறியை, தாங்களே தயார்ப்படுத்திக் கொள்வதில்லை. மனிதர்களோ அணுகுண்டை உருவாக்குகிறார்கள்" என்று கூறினார். இது கோலி விஷயத்திலும் பொருந்தும். அவர் செட்டிலாக எடுத்துக் கொள்ளும் நேரத்திற்குள் அவரது விக்கெட்டை வீழ்த்தாவிட்டால், அது எதிரணி, தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் பொறிதான். ஏனெனில் இந்த மைண்ட் கேமில் பெரும்பாலும் வெல்வது கோலிதான். விக்கெட்டுகளுக்கிடையே ஓடி, சிங்கிளை டபுளாக மாற்றுவது மட்டுமின்றி, பவுண்டரிகளை சூறையாடுவது வரை அவருக்கு எல்லாமே அத்துப்படிதான்.

டி20-ல் பவர்பிளே ஓவர்கள், ஸ்பின்னர்கள் கோலோச்சும் மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என எந்த நிலையென்றாலும் அவரது ஆதிக்கம் அதேபோலத்தான் இருந்திருக்கிறது. குறிப்பாக, சேஸிங் செய்யும் போட்டிகளில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பந்திலும் அணியின் வெற்றியை கோலியே பலமுறை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். அதிலும் டி20 உலகக்கோப்பைகளில், தனி ஆவர்த்தனமே நிகழ்த்தியிருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் மகிளா ஜெயவர்த்தனவைத் தாண்டி (1016 ரன்கள், 31 இன்னிங்ஸ்களில்), வெறும் 23 இன்னிங்ஸ்களில், 1065 ரன்களோடு முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த 23 இன்னிங்ஸ்களில் 7 முறை ஆட்டநாயகன் விருதை வாங்கியுள்ளார். கோலி ஆடிய 23 போட்டிகளில் 16-ல் இந்தியா வென்றுள்ளது. அதில் 783 ரன்களை 130.50 ஆவரேஜோடும், 10 அரை சதங்களோடும் கோலி அடித்துள்ளார். இந்தத் தரவு ஒன்றே சொல்லும், அணியின் வெற்றியில் அவரது பங்கு எந்தளவு முக்கியமானதாக இருத்திருக்கிறது என்பதை! மூன்றுக்கும் அதிகமான 50+ ஸ்கோரினை ஒரே சீசனில் 3 முறை அடித்த ஒரே வீரர் (2014, 2016, 2022) கோலி மட்டும்தான்.

விராட் கோலி

ஃபார்மை இழந்ததாகச் சொல்லப்பட்ட காலகட்டங்களில்கூட, டெஸ்டில் வேண்டுமென்றால் அவரது கொடி சற்றே தாழ்ந்து பறந்தது, சராசரி 50-க்குக் கீழே இறங்கியது. ஐபிஎல்லில்கூட அவரது ஆட்டத்தில் சற்றே காட்டம் குறைந்திருந்தது. ஆனால், சர்வதேச டி20-ல் எப்போதுமே அவர் நிலைப்புத்தன்மையோடே ரன்களை எடுத்துள்ளார். 53.13 என்னும் அவரது சர்வதேச டி20 ஆவரேஜே அதற்கு ஆதாரம். அதிலும் 2019-க்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் அவரது டி20 சிக்ஸர்களில் 116-ல் 68 சிக்ஸர்கள் வந்துள்ளன. இது ஒன்றே சொல்லும் அவர் ஆட்டமிழந்து விடுவோமென அஞ்சிப் பின்வாங்கினாரா அல்லது அடங்காத காளையாகத் திமிறிநின்று முட்டிமோதினாரா என்று!

இந்தாண்டு டி20 உலகக்கோப்பையும் கோலியின் வேட்டைக் களம்தான். அதுவும் அவருக்குப் பிடித்தமான ஆஸ்திரேலிய மண், முன்பிருந்த அதே தீயை அவருக்குள் மீண்டும் கொழுந்து விட்டு எரிய வைத்திருக்கிறது. ஆசியக் கோப்பைக்குப்பின்பே அவரது ஓட்டம் அதிவேகமாக மாறியிருந்தது. இப்போதோ வேகத்தடையிட்டுக் கட்டுப்படுத்த முடியாதவாறு ஆகாயத்தை ஆரத்தழுவும் ஜெட்டாக ரன்களைக் குவிக்கிறார்.

கோலி உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த 2016-ம் ஆண்டில் 13 சர்வதேச டி20 போட்டிகளில் 641 ரன்களைக் குவித்திருந்தார். இப்பொழுதோ கடைசி 14 போட்டிகளில் முன்னதைப் போலவே 624 ரன்களைக் குவித்துள்ளார். ஸ்ட்ரைக்ரேட்டோ 2016-ம் ஆண்டிலிருந்த 140.26-ஐ விடத் தற்சமயம் அதிகமாகவே (142.79) இருக்கிறது. இரண்டாண்டுகளாக விட்டதாகச் சொல்லப்பட்டதை இரண்டே மாதங்களில் திரும்பப் பிடித்துக் காட்டியிருக்கிறார். நடப்பு உலகக்கோப்பையிலோ 4 போட்டிகளில் 220 சராசரியோடு, 220 ரன்களைக் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திலேயே முகாமிட்டுள்ளார். ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று அரைசதம், இரண்டு ஆட்டநாயகன் விருது என அதகளப்படுத்துகிறார்.

விராட் கோலி

அனைத்து டி20 உலகக்கோப்பைகளுக்குமான அவரது ஸ்ட்ரைக்ரேட் எப்படி ஓவருக்கு ஓவர் அதிகரித்துள்ளது என்பதுதான் அவர் ஏன் விலைமதிப்பற்றவர் என்பதை விளக்குகிறது. பவர்பிளேயில் 103.4 ஆக உள்ள ஸ்ட்ரைக்ரேட், 7 - 11 ஓவர்களில் 108.8 ஆக அதிகரித்து, 12 - 16 ஓவர்களில் 155.41 ஆக முடுக்கப்பட்டு, இறுதி நான்கு ஓவர்களில் 199 ஆக உச்சமடைகிறது. இவ்வளவு சிறப்பாக ஆடினாலும், "எல்லாப் பந்தையும் நான்தான் அடிப்பேன்" என்ற மனப்பான்மையோடு அவர் கேமை அணுகுவதில்லை. ஈகோவுக்கே இடமில்லாமல் சூர்யாவா, கே.எல்.ராகுலா என்றெல்லாம் பார்க்காமல் உடன் ஆடும் வீரர்கள் பெரிய ஷாட்களுக்குப் போனால் ஸ்ட்ரைக்கை அவர்களுக்கு மாற்றிவிட்டு ஆங்கர் ரோலுக்கு மாறிவிடுகிறார். ஒருவேளை அவர்கள் ஆட்டமிழந்து அழுத்தம் தங்கள் பக்கம் கைமாறினால் அதிரடி மோடுக்குரிய பொத்தானை அழுத்திவிடுகிறார். இதுதான் அவரை ஒரு டீம் பிளேயராகக் கொண்டாட வைக்கிறது.

34 வயது இளைஞராக ஒவ்வொரு விக்கெட்டின் போதும் அடுத்த முனையில் உள்ள பார்ட்னரின் பவுண்டரியையும் சிக்ஸரையும் தன்னுடையதாக பாவித்துக் கொண்டாடும் அவரின் குணம், அவர் ஏன் அணியின் அச்சாணி என்பதைப் பறைசாற்றுகிறது.

கோலி உருவாக்கி வைத்திருந்த அவரது உச்சக்கட்ட அளவுகோல்தான் அவருக்கு எதிரியாக இருந்தது, ஏனெனில் மற்றவர்களின் அதிகபட்ச ரன்கள்தான் அவரது குறைந்தபட்சமே. இதோ அவர் வைத்த அளவுகோலைத் தாண்டக் கூடியதாகத்தான் இந்த இரண்டாவது ரவுண்டையும் மாற்றி வருகிறார்.
விராட் கோலி

2016-ல் தோனி, "அடிலெய்டில் ஒரு ஸ்டாண்டுக்கு கோலியின் பெயர் சூட்டப்பட வேண்டும். அந்தளவிற்கு அவர் இங்கே ரன்களைக் குவிக்கிறார்" என்று கூறியிருந்தார். அடிலெய்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவுமே அவரது இரும்புக் கோட்டைதான். அதிக ரன்களான 3300 ரன்களை ஆஸ்திரேலியாவில் குவித்த இந்தியராக முன்னதாக சச்சின் இருக்க, அதை 3350 ரன்களோடு கோலி முந்தியிருக்கிறார். எல்லாக் களத்திற்குமானவர், எல்லாக் காலத்திற்குமானவர் என நிரூபித்தும் வருகிறார்.

ஆக, டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 என முப்படைக்கும் அவர் தளபதிதான்.

டி20 உலகக்கோப்பை அணியிலேயே அவருக்கு இடமிருக்காது என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. காகங்களின் கருத்துகளால், கழுகின் சிறகுகள் பலவீனமடையவா போகின்றன?! அப்படி ஏசியவர்கள் அதே இடத்தில்தான் வட்டமிட்டுக் கொண்டுள்ளார்கள். அல்லது கியரை மாற்றி கோலியின் பக்கம் வந்துவிட்டனர். ஆனால் கோலியோ, அதிக ரன்களைக் குவித்தவர் என இந்த உலகக்கோப்பை தொடரையே தனது பெயரில் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்.

புதைக்க நினைத்த இடத்தில், தவிர்க்க முடியாத சக்தியாக வடிவெடுத்து நிற்பதுதானே சாதனை?!

From the Ashes, A fire shall be woken,

A light from the shadows will spring,

Renewed shall be the blade that was broken,

The crownless shall again be KING...

- Tolkien -

விராட் கோலி

டோல்கின் சொன்னதைப் போல,

முடி இழந்ததாகக் கூறப்பட்ட மன்னன்,

சாம்பலிலிருந்து நெருப்பாக,

நிழலிலிருந்து ஒளியாக,

மறுபடியும்,

சக்ரவர்த்தியாக அரியணை ஏறியிருக்கிறார்!

இனி அவரது சாம்ராஜ்யத்துக்கு என்றுமே சரிவில்லை...

பிறந்தநாள் வாழ்த்துகள் கோலி!



source https://sports.vikatan.com/cricket/virat-kohli-reborn-a-look-at-his-incredible-cricketing-career-on-his-birthday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக