கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்த சமயத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு இடம் கிடைக்காது, ஆக்ஸிஜன் கிடைக்காது, மருந்து கிடைக்காது நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சியை எல்லாம் பார்த்தோம். அவ்வளவு ஏன் இடுகாட்டில் கூட வரிசையில் காத்திருக்கும் அவலமெல்லாம் தமிழகத்திலேயே அரங்கேறியது.
கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்பு அதிகமாக இருந்ததற்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். இரண்டாம் அலை பாதிப்பு படிப்படியாகக் குறைந்து நிலைமை சரியானது. மீண்டும் கடந்த மாதம் முதல் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. பரவ தொடங்கிய சில தினங்களிலேயே பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.
ஒமைக்ரான் பரவல்:
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 30,000-தை தாண்டிய நிலையிலும், நோய்ப் பாதிப்பு அளவு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களும், நீண்ட நாள் இணைநோய் பிரச்னை கொண்டவர்களாகத் தான் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்தாலும், இரண்டாம் அலை சமயத்தில் ஏற்பட்டது போலப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் பிப்ரவரி 01-ம் தேதி நிலவரப்படி, 16,096 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 25,592 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். 35 பேர் உயிரிழந்துள்ளனர். அன்றைய தினம் மட்டும் 1,30,651 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 2,348 பேரும், கோவையில் 1,897 பேரும், அடுத்ததாகச் செங்கல்பட்டில் 1,308 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 1,88,599 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளிலும், வீட்டுச் சிகிச்சையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. தற்போது, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தவுள்ளது. இந்த தேர்தலில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாகச் செய்துவருகிறது.
கொரோனா அதிகரித்திருந்த சூழலில், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கொரோனா பாதிப்பு குறைவதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது. கொரோனா சூழலில் தேர்தல் தள்ளிவைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த எல்லா சூழல்களையும் தாண்டி தற்போது தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த மாதமே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே மருத்துவ வல்லுநர்கள், பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறையும் என்று கூறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், தமிழகத்தில் உண்மையில் கொரோனா பாதிப்பு குறைந்ததா இல்லை குறைத்துக் காட்டப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களின் மனதில் நிலவிவருகிறது.
Also Read: கொரோனா பரவலுக்கு மத்தியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; யாருக்குச் சாதகம்... யாருக்குப் பாதகம்?!
இதுகுறித்து தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``நடைபெறவுள்ள தேர்தலுக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சமூக வலைத்தளங்களில் கருத்தைப் பதிவு செய்யும்போது, சரியான கருத்தைப் பதிவு செய்யவேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றியே நடைபெறவுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றித் தேர்தல் நடத்தத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலும், பயிற்சியும் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1,000 பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தான். தொற்று பாதிக்கப்படுபவர்களில் 5 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். மீதமுள்ளவர்கள் வீட்டுத் தனிமையில் தான் இருக்கிறார்கள். மருத்துவ வல்லுநர்களுடன் பலகட்ட ஆலோசனைக்கு பிறகே, தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளை பொது மக்களின் பொறுப்புடன் பயன்படுத்தவேண்டும். தமிழகத்தில் அனைத்து வகையான மருத்துவக் கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் அலட்சியம் கூடவே கூடாது" என்று பேசினார்.
source https://www.vikatan.com/government-and-politics/election/corona-spread-problems-are-hidden-for-local-body-elections
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக