நம் ஊரில் பைக்குகளில் பெட்ரோல் போடுவதற்கே பலருக்குப் பொறுமை இருக்காது. ‘இங்கிட்டு வேணாம்; கூட்டமா இருக்கு… அங்கிட்டுப் போட்டுக்கலாம்’ என்று, மாதக் கடைசி பேங்க் அக்கவுன்ட் மாதிரி டேங்க்கை வழித்தெடுத்து வண்டி ஓட்டுவார்கள். பெட்ரோலுக்கே இப்படின்னா… எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு சார்ஜ் போடுவதை யோசித்துப் பாருங்கள்! என்னதான் பப்ளிக்கில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் வரும் என்று சொன்னாலும், காத்திருந்து சார்ஜ் போடுவதற்கு யாருக்கு பாஸ் பொறுமை இருக்கும்!
இந்திய எலெக்ட்ரிக் வாகனச் சந்தை, 2030–க்குள் 150 பில்லியன் டாலர் சந்தையாக உருவெடுக்கும் என்று கணித்திருக்கிறார்கள். அதற்கு முதல்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கொடி கட்டிப் பறக்க வேண்டும். (பறந்து கொண்டுதான் இருக்கிறது. 2021–ல் மட்டும் 2,33,971 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.) அதற்கும் முக்கியப் படியாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் கொண்டு வர வேண்டும். அதற்கும் முன்னோடியாக ஒரு தீர்வு இருக்கிறதென்றால்… அது பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன். அதாவது, உங்கள் ஸ்கூட்டரில் உள்ள காலி பேட்டரியைக் கழற்றி எடுத்து, சார்ஜ் ஆன ஃபுல் பேட்டரியைக் காசு கொடுத்து (சார்ஜுக்கு மட்டும்) சட்டு புட்டுனு கிளம்பிப் போயிக்கிட்டே இருக்கலாம். பெட்ரோல் போடுவது மாதிரி இது நறுக்கென்று முடிகிற விஷயம். இதைத்தான் அமல்படுத்தப் போவதாக தனது நிதியறிக்கையில் சொல்லியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
‘‘எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத் தேவையான பேட்டரி ஸ்வாப்பிங் செய்யும் மையங்களை அரசு நிறுவத் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஸோன்களும் நிறுவப்பட இருக்கின்றன!’’ என்று அவர் சொல்லியிருப்பது, நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயம்தான்.
முதலில் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷனுக்கும் சாதாரண ப்ளக்–இன் சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம். சாதாரண சார்ஜிங் ஸ்டேஷன் என்பது உங்கள் வாகனத்தை நேரடியாகவே ப்ளக்கில் சொருகி சார்ஜ் போடுவது. இதற்கு ரேபிட் சார்ஜிங் எனும் ஃபாஸ்ட் சார்ஜிங்தான் இருக்க வேண்டும். அதாவது, குறைந்தபட்சம் அரைமணி நேரத்துக்குள் 50% சார்ஜ் ஏற வேண்டும். இதற்கு நீங்கள் அரைமணி நேரம் சார்ஜிங் தவிர்த்து.. வரிசையிலும் நிற்க வேண்டும்.
பேட்டரி ஸ்வாப்பிங் என்பது அப்படியல்ல. உங்கள் வாகனத்தில் உள்ள காலி பேட்டரியைக் கழற்றி.. ஏற்கெனவே சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வெண்டர் மிஷினில் ஸ்நாக்ஸ் வாங்குவது மாதிரி காசு கொடுத்து உடனே வாங்கி மாட்டிக் கிளம்பலாம். அப்படியென்றால்… ‘என்னோட பேட்டரி புதுசா இருக்குமே… நான் ஸ்வாப் செய்யப் போகிற பேட்டரி எந்த கண்டிஷன்ல இருக்குமோ’ என்று நீங்கள் பயப்படுவது தெரிகிறது. நீங்கள் பணம் கொடுக்கப் போவது பேட்டரிக்கு இல்லை; பேட்டரிக்கான சார்ஜிங்குக்கு மட்டும்தான். அதாவது, பேட்டரி எதுவுமே உங்களுக்குச் சொந்தமானதாக இருக்காது. அப்படியென்றால், உங்கள் வாகனத்தில் பேட்டரியே இருக்காது. ஆம், பேட்டரி இல்லாத எலெக்ட்ரிக் வாகனங்களைத்தான் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே பெங்களூருவில் சன் மொபிலிட்டி எனும் நிறுவனம், இந்த ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை வெற்றிகரமாக நிறுவி நடத்திக் கொண்டும் இருக்கிறது. சிம்பிள் எனெர்ஜி எனும் நிறுவனம் இதற்காக 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறதாம். எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்னில் இருக்கிறது. காரணம் – ஓலா, ஆம்பியர், டிவிஎஸ், ஏத்தர், சிம்பிள் எனெர்ஜி, லூகாஸ் டிவிஎஸ், மெஜென்ட்டா, BYD, கிரின்ட்டெக், ஸ்ரீவாரு மோட்டார்ஸ் என்று ஏகப்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் ஓசூர் வேற லெவல்.
எல்லாம் ஓகே! ஆனால் அப்படி ஸ்வாப்பிங் ஆப்ஷன் கொண்ட ஸ்கூட்டர் நிறுவனங்கள் ‘இன்ஃபினிட்டி’ தவிர வேறெதுவும் இப்போதைக்கு இல்லை. ‘பவுன்ஸ்’ எனும் ஸ்கூட்டரை இன்ஃபினிட்டி விற்பனை செய்து கொண்டிருக்கிறது. அதாவது, இந்த ஸ்கூட்டரை நீங்கள் பேட்டரி இல்லாமலும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தின் பாதி விலை பேட்டரிக்குத்தான் போகும். அப்படி பேட்டரி இல்லாத ஸ்கூட்டரை வாங்கும்பட்சத்தில் மிகக் கணிசமாக ஆன்ரோடு விலை குறையும்.
உதாரணத்துக்கு, பவுன்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி எனும் ஸ்கூட்டரையே எடுத்துக் கொள்ளலாம். பேட்டரி உள்ள வேரியன்ட்டின் விலை 76,000; இதுவே பேட்டரி இல்லாத வேரியன்ட்டை வாங்கினால்… 45,000 ரூபாய்தான். சுமார் 40% வரை பணம் நமக்கு மிச்சமாகலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆம்பியர் எனும் நிறுவனம், ஸ்வாப்பிங் பேட்டரி சிஸ்டத்துடன் தனது ஸ்கூட்டரைத் தயாரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது. இது மக்களுக்கு நல்ல லாபம்தான்!
இரண்டாவது விஷயம் – இந்த சார்ஜிங்கை இந்தியா முழுக்க ஸ்டாண்டர்டைஸ் செய்ய வேண்டும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். மொபைல் போன்களுக்கு ‘சி’ டைப், யுஎஸ்பி டைப், AUX போர்ட் என்று இருப்பது மாதிரி, எல்லா ஸ்கூட்டர்களுக்கும் பேட்டரியை ஸ்டாண்டர்டைஸாகத் தயாரித்தால் மட்டுமே இது முடியும். அதாவது ‘ஒரே பேட்டரி; பல ஸ்கூட்டர்’ என்கிற திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏத்தர் ஸ்கூட்டர் வைத்திருப்பவருக்கு ஓலா பேட்டரி செட் ஆக வேண்டும்; ஓலா வைத்திருப்பவருக்கு ஆம்பியர் பேட்டரி பொருந்த வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே இந்த ஸ்வாப்பிங் ஸ்டேஷன்கள் சாத்தியம்! சீனா போன்ற நாடுகளில் ஸ்வாப்பிங் வெற்றிகரமாகவே போய்க் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்வாப்பிங் சிஸ்டம் – கார் வைத்திருப்பவர்களுக்கு இல்லை; 2 வீலர் / 3 வீலர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். மக்களின் லாபத்துக்காக இந்த ஸ்வாப்பிங் திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தினாலும், இதற்குப் பின்னால் மத்திய அரசின் கார்ப்பரேட் அக்கறையும் இருக்கிறது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். காரணம், ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி, பிரிட்டனைச் சேர்ந்த BP எனும் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, Jio-BP எனும் பெட்ரோல் பம்ப்களை இந்தியா முழுக்க நடத்தி வருகிறார். ‘இது பெட்ரோல் பங்க் மட்டும் இல்லை; இது ஒரு மொபிலிட்டி ஸ்டேஷன்’ என்று விளம்பரமும் செய்யப்படுகிறது இதற்கு.ஆம், இந்தியா முழுக்க பல ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை நிறுவ, பல நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளதாம் Jio-BP. ‘இதனால் Jio-BP–க்குத்தான் மக்களைவிடப் பெருத்த லாபம் கிடைக்கப் போகிறது’ என்கிறார்கள் நாலு பேர். (அந்த நாலு பேர் நாங்க இல்லீங்கோ!)
source https://www.vikatan.com/social-affairs/budget/battery-swapping-pros-and-cons
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக