Ad

புதன், 2 பிப்ரவரி, 2022

கரூரில் ஜோதிமணிக்கு நடந்தது என்ன? - திமுக, காங்கிரஸ் சலசலப்பின் பின்னணியும் ரியாக்‌ஷன்களும்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ஜ.க தனித்துப் போட்டியிட உள்ளது. தமிழ்நாட்டின் மற்றொரு பிரதான கூட்டணியான தி.மு.க கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படவில்லை என்றாலும் அதன் கூட்டணிக் கட்சிகள் கேட்ட இடங்களைக் கொடுக்கவில்லை என்ற புகைச்சல் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ``இடங்களைக் குறைவாகக் கொடுத்தது மட்டுமல்ல, தாங்கள் கேட்ட இடங்களை ஒதுக்கவில்லை என்பதும் காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட புகைச்சலுக்குக் காரணம்” என்கிறார்கள் அக்கட்சியினர். இதற்கிடையே இரண்டு நாள்களுக்குமுன் கரூரில் நடந்த தி.மு.க - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியைக் தி.மு.க-வினர் வெளியில் போகச் சொன்னதாகச் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து கரூர் தி.மு.க கட்சி அலுவலகத்திலிருந்து வெளியில் வந்த ஜோதிமணி “ஆலோசனையில் கலந்துகொள்ள வந்த என்னை எப்படி வெளியேறச் சொல்லலாம்? இவர்களுக்குத்தான் மரியாதை இல்லாமல் பேசத் தெரியுமா? நான் பேச எவ்வளவு நேரமாகும். நான் இவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருக்கிறேனா வெளியே போகச் சொல்ல. இவர் என்ன வேண்டுமென்றாலும் பேசுவாரா?” எனக் கொதித்தெழுந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

ஜோதிமணி

கரூர் மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வார்டு பங்கீட்டுக் கூட்டத்தில் என்ன நடந்தது, அதை தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எப்படிப் பார்க்கிறார்கள் என்று விசாரித்தோம்.

Also Read: ``கூட்டணிக்குள் சங்கடம் வந்துவிடக் கூடாது..!" - ஜோதிமணி விவகாரம் குறித்து செந்தில் பாலாஜி

``கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் இழுபறி நீடித்துக்கொண்டே சென்றதால் இறுதி முடிவு எடுப்பதற்காக அன்றைய கூட்டம் நடந்திருக்கிறது. மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தி.மு.க தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்பதால் அன்று கூட்டத்தில் அவரும் கலந்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் சார்பில் மாவட்டச் செயலாளர் சின்னசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட சில நிர்வாகிகளும் கலந்து கொண்டிருக்கிறனர். முதலில் அரவக்குறிச்சி பேரூராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது ஒரு வார்டு மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரஸுக்குக் குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி ‘நாங்கள் தேசியக் கட்சியினர், கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சிக்கு இதுதான் நீங்கள் கொடுக்கும் மரியாதையா? இதற்குப் பேரு பேச்சுவார்த்தையே இல்லை.’ என்பதோடு சேர்த்து கொஞ்சம் கோபமாக தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

போராட்டத்தில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி

இது இயல்பாக எல்லோருக்கும் இருந்த கோபம்தான் என்றாலும் தி.மு.க-வினர் இந்தப் பிரச்னையை அமைச்சருக்கும் ஜோதிமணிக்கும் இடையிலானதாகத் திரித்து, ஜோதிமணி ஒருமையில் பேசியதால்தான் வெளியில் போகச் சொன்னோம் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள். அவர்கள் மரியாதையாக நடத்தாதையடுத்தே ஜோதிமணி வெளியில் வந்து அப்படி ஆவேசமாகப் பேசியிருக்கிறார்” என்கின்றனர் காங்கிரஸ் தரப்பில்.

“தொண்டர்களைத் தக்க வைத்துக்கொள்ள உள்ளாட்சித் தேர்தல்தான் ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம். காங்கிரஸ் தேசியக் கட்சியாக இருக்கலாம். ஆனால், மாநிலத்தில் நாங்கள் பெரிய கட்சி. மாநிலக் கூட்டணி எங்கள் தலைமையில்தான் இருக்கிறது. எங்கள் கட்டமைப்பை வலுப்படுத்த உள்ளாட்சித் தேர்தலைத்தான் நாங்களும் நம்பியிருக்கிறோம். அப்படியிருக்கும்போது எல்லா இடங்களும் எங்களுக்கே வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியினர் விரும்பினால் எப்படி எங்களால் அதை ஏற்றுக்கொண்டு செயல்பட முடியும். கேட்பதற்கும் ஓர் அளவு இருக்கிறது இல்லையா? சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலைப் போல இதிலும் எங்கள் மேலேயே சவாரி செய்யலாம் என நினைத்துப் பேசினால் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும். அவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறதோ அதற்கு அதிகமான இடங்களைக் கொடுக்க வேண்டும் என ஜோதிமணி கூறியிருக்கிறார். ஆனால், இருக்கும் நிலைமையை எடுத்துச் சொல்லி வெற்றி பெறும் இடங்களைக் குறிப்பிட்டுக் கேளுங்கள். பங்கீட்டில் இறுதி முடிவு எடுத்து அனுப்ப வேண்டும்’ எனத் தன்மையாகத்தான் பேசியிருக்கிறார். ஆனால், மீண்டும் மீண்டும் ஜோதிமணி தான் கேட்கும் இடங்களை ஒதுக்கியே ஆக வேண்டும் என்றதோடு ``இங்கு நடப்பது அநியாயம்.. கூட்டணிக் கட்சிகளின் குரலைக் கேட்கவில்லை என்றால் பின் ஏன் மீட்டிங்.. நீங்களே கையெழுத்துப் போட எங்களை ஏன் கூப்பிட்டீர்கள்” என்று ஜோதிமணி கோபமாகக் கேட்டிருக்கிறார். அதன்பின்னரே அவரை எங்கள் கட்சியினர் வெளியில் போகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜோதிமணி

இந்தச் சம்பவங்கள் நடந்த போது ஜோதிமணி பேசியதற்குச் செந்தில் பாலாஜி எதிர்வினை எதையும் காட்டவில்லை. ஜோதிமணிக்காக நாடாளுமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜிதான் கடுமையாக உழைத்து அவருக்கு வெற்றி பெற்றுத் தந்தார். இப்போது அவருடனேயே தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்” எனத் தி.மு.க-வினர் கடும் விரக்தியில் பேசினார்கள்.

Also Read: சர்ச்சையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் முதல் செந்தில் பாலாஜி Vs ஜோதிமணி பிரச்னை வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கரூரில் நடந்தது குறித்து தி.மு.க-வினரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட வேண்டாம் எனச் சொல்லி பேச தொடங்கிய நிர்வாகிகள், ``கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். அது ஏனென்று தெரியவில்லை. பத்து ஆண்டுகள் கழித்துத் தேர்தல் நடக்கிறது. தி.மு.க-வின் அடிப்படைத் தொண்டர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அடுத்தடுத்து நடக்கும் தேர்தல் பணிகளுக்கு அவர்களை உற்சாகமாகத் தயார்ப்படுத்த எங்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் உள்ளாட்சித் தேர்தல்தான். எல்லாக் கட்சியினரையும் போல நாங்களும் அதையேதான் நினைக்கிறோம். கூட்டணிக் கட்சி என்றாலும் யாருக்கு எங்கு பலம் என்பதை வைத்துத்தான் முடிவெடுக்க முடியும். நாடாளுமன்றத்தேர்தலில் 40 சதவிகிதம் கொடுத்தோம். சட்டமன்றத் தேர்தலில் 25 சதவிகிதம் கொடுத்தோம். அதே எண்ணத்தோடு இப்போதும் வந்தால், எங்கள் கட்சியை நாங்கள் எப்போது வளர்ப்பது. உண்மையில் இந்தத் தேர்தலில் பா.ஜ.க போல காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும். அப்போது தெரிந்திருக்கும் அவர்களின் தகுதி என்னவென்று. இப்போது இடங்களை ஒதுக்கினாலும் தி.மு.க-வினர்தான் தேர்தல் வேலைகள் பார்க்க வேண்டும். செலவு செய்ய வேண்டும். மரியாதையோடு பேசினால்தான் யாருக்கும் மரியாதை கிடைக்கும்.” எனச் சற்றுக் கோபத்துடனேயே இந்தப் பிரச்னை குறித்து நம்மிடம் பேசினர்.

காங்கிரஸ் தரப்பிலும், பெயரை தவிர்க்க சொல்லி பேசிய நிர்வாகி ஒருவர், ``காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஒரு களப்போராளி. அவர்கள் என்ன பேசினாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும். கூட்டணிக் கட்சி என்பதாலேயே நாங்கள் அடிமையாக இருக்க முடியாது. அவரவருக்கு உரியதைக் கொடுக்க தலைமை சொல்லிவிட்ட பிறகு இவர்கள் யார் பேரம் பேச. ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார்’ என்பதைப் போலத்தான் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் நடந்து கொள்கிறார்கள். மரியாதையாக நடத்தவில்லை என்றால் யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.” என்கிறார்கள்.

ஆவேசமாக வெளியேறும் ஜோதிமணி

காங்கிரஸ், திமுக என இரண்டு தரப்பிலும், ``தலைமை இந்தப் பிரச்னையில் யாரும் எந்தக் கருத்தும் யாரும் சொல்லக் கூடாது என்று சொல்லி விட்டார்களாம். எனவே, பெயரைப் போடாமல் இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/reaction-about-jothimani-vs-senthil-balaji-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக