திருப்பூர் பாப்பாங்குளம் பகுதியில் புகுந்த சிறுத்தை ஒன்று வனத்துறை ஊழியர்கள் உட்பட 10 பேரை தாக்கி, நான்கு நாள்களாக ஆட்டம் காட்டி கடைசியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது, கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள காந்திபுரம் கிராமத்தில் கால்நடைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும், அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் காந்திரபுரம் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள். இவர் தனது வீட்டின் அருகிலேயே பட்டி அமைத்து 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன் தினம் மேய்ச்சல் முடித்துவிட்டு ஆடுகளை பட்டியில் அடைத்தவர், விடிந்ததும் பட்டிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது 3 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளது. ஏதோ ஒரு மர்மவிலங்கின் செயல் தான் இது என ஊரில் அப்போதே பரபரப்பு உண்டானது.
தகவலறிந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ய, அங்கு சிறுத்தையின் கால்தடம் தென்பட்டிருக்கிறது. உடனே வனத்துறையினர் காந்திபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்களை வைத்து சிறுத்தையின் நடமாட்டை கண்காணிக்க ஆரம்பித்ததோடு, நோந்துப் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வர வேண்டாம் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
Also Read: திருப்பூர்: 4 நாள்களில் 11 பேரைத் தாக்கிய சிறுத்தை; போராடிப் பிடித்த வனத்துறையினர்!
இந்நிலையில், காந்திரபுரம் பகுதியில் வனத்துறையினர் வைத்த கேமரா ஒன்றில் சிறுத்தை ஓடும் காட்சி பதிவாகி, அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று அதிகாலை காந்திநகரில் இருந்து 5 கி.மீ தொலைவில் பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டியாம்பதி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை, வெங்கிடுசாமி என்பவருக்குச் சொந்தமான 2 ஆடுகளை கடித்துக் கொன்றிருக்கிறது. தொடர்ச்சியாக கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தற்போது சிறுத்தை உள்ள இடம் டி.என்.பாளையம் வனத்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட வனத்துறை எல்லை என்பதால் திருப்பூர் மாவட்டம் உடுமலை வனத்துறையினரும் 3 குழுவாக களமிறங்கி சிறுத்தையைத் தேடி வருகின்றனர். மேலும், சிறுத்தையை கூண்டு வைத்தும், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். `விளாமுண்டி வனச்சரகத்தில் இருந்து சிறுத்தை வெளியேறி, விவசாய நிலங்களில் மறைந்திருந்து, இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது’ எனச் சொல்லப்படுகிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/leopard-hunting-cattles-in-erode-forest-department-searches
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக