நாடாளுமன்ற கூட்டத்தில் ராகுல் காந்தியின் உரை இந்தியா முழுவதும் பெரும் கவன ஈற்பை ஏற்படுத்தியது. மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ``நீட் தேர்வை விலக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் நீட் விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு மக்களை உங்களால் ஆள முடியாது."தேசம்" என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கும் இல்லை. இந்தியா, "மாநிலங்களின் ஒன்றியம்" என்றே நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது" என்கிறார். மக்களவையில் தமிழ்நாட்டைப் பற்றி அதிகம் பேசியது ஏன்? என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, `நான் ஒரு தமிழன் தானே’ என ராகுல் காந்தி பதிலளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: ``உங்களால் தமிழ்நாட்டு மக்களை ஒரு நாளும் ஆள முடியாது" - ராகுல் காந்தி ஆவேச உரை!
இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு அண்ணாமலை ட்விட்டரில் பதிலளித்துள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில், ``வரலாற்றை ஒருபோதும் மறக்க வேண்டாம்.
நீங்கள் ஒரு கட்சியாக தமிழ்நாட்டை சில காலம் ‘ஆட்சி’ செய்திருந்தீர்கள்.1965-ல் உங்கள் தாத்தா மூலமும், 1986 இல் உங்கள் தந்தை மூலமும் இந்தி திணிப்பு செய்யப்பட்டது. ஆனால், தயவுசெய்து இப்போது தேசிய கல்வி கொள்கையை படியுங்கள்.
இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு உங்கள் கட்சி தான் காரணம். பிரதமர் மோடி தற்போது அவர்களுக்காக 50,000க்கும் அதிகமான வீடுகளைக் கட்டி புதுப்பித்துக் கொடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு, ‘காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு’ என்று சொல்லி தடை செய்தது. காமராஜரை அவமானப்படுத்தினீர்கள். 1974-ல் கச்சத்தீவை உங்கள் பாட்டி வெளிநாட்டிற்கு தாரை வார்த்தார்.
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுவின் ஆக்ஸிஜன் உதவியுடன் ஐசியு-வில் இருக்கிறது. புதுச்சேரியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது, பிரதமர் மோடியின் உன்னத நோக்கத்தைப் புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்களும் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்கின்றனர். கூடிய விரைவில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமரும்" எனவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
Also Read: ``எங்களுக்கு இது ஒரு வாய்ப்பு'' - அண்ணாமலை
source https://www.vikatan.com/government-and-politics/politics/annamalai-replies-back-to-rahul-gandhis-statement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக