ஒன்ப்ளஸ் 10 ப்ரோ மொபைல் வெளியீட்டுடன் 2022-ஐ சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது ஒன்ப்ளஸ். என்ன, 10 ப்ரோ வெளியாயிடுச்சா என ஷாக்காக வேண்டாம். சீனாவில் தான் 10 ப்ரோ மொபைலை வெளியிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ். இந்தியாவிற்கு ஆறுதல் பரிசாக 9RT மாடலை வெளியிட்டிருக்கிறது. இந்த 9RT மாடலே இந்தியாவுக்குக் கொஞ்சம் லேட் தான். சீனாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே வெளியான மாடலை இப்போதுதான் இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறது ஒன்ப்ளஸ். எனவே, கூடிய விரைவில் அதன் தற்போதையே 10 ப்ரோவும் இந்தியாவுக்கு வரும் என நம்பலாம். அதற்கு முன்பு இந்தியாவில் வெளியிட்டிருக்கும் ஒன்ப்ளஸ் 9RT-யின் ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இதோ.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் வெளியான 9R மாடலின், அப்டேட்டேட் வெர்ஷனாக 9RT மாடலை வெளியிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ். புதிய டிசைன், 9R-ஐ விட சிறப்பான பெர்ஃபாமன்ஸ் கொண்ட ப்ராசஸர், சிறப்பான கேமரா என எல்லாவற்றிலும் ஒரு சின்ன அப்டேட்டைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த 9RT-யில் என்னவெல்லாம் கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ், பார்க்கலாம்!
9RT - In the box:
9RT எனப் பெரிதாக எழுதப்பட்ட ஒரு பெரிய ரெட் பாக்ஸில் 9RT-யை நமக்கு அனுப்பியிருந்தது ஒன்ப்ளஸ். பாக்ஸூக்குள்..
-
ஒரு 9RT மொபைல் போன்
-
ஒரு கருப்பு நிற ஒன்ப்ளஸ் கேஸ்
-
சிவப்பு நிற டைப் சி கேபிள்
-
65W Wrap சார்ஜர்
-
சிம் ட்ரே எஜக்டர் மற்றும்
-
ஒரு ரெட் கேபிள் கிளப் மெம்பர்ஷிப் கார்டு
விலை:
ஒன்ப்ளஸ் 9R மற்றும் ஒன்ப்ள்ஸ 9-க்கு இடைப்பட்டு 42,999 ரூபாய் விலையில் வெளியாகியிருக்கிறது 9RT, இந்த விலை 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜூக்கானது. 12 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வேரியன்ட்டும் 9RT-யில் உண்டு, 46,999 ரூபாய்க்கும் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஹேக்கர் ப்ளாக் மற்றும் நானோ சில்வர் என இரண்டு கலர் வேரியன்ட்களில் கிடைக்கிறது 9RT. நமக்குக் கிடைத்திருப்பது 12 GB RAM + 256 GB ஸ்டோரேஜ் கொண்ட ஹேக்கர் ப்ளாக் மாடல் தான்.
டிசைன் மற்றும் டிஸ்ப்ளே:
இந்த 9RT-யை சிறப்பாகவே டிசைன் செய்திருக்கிறது ஒன்ப்ளஸ். தனிப்பட்ட முறையிலும் இதன் டிசைன் எனக்குப் பிடித்திருக்கிறது. பின்பக்கம் கிளாஸி பினிஷ் இல்லாமல் மேட் சேண்டுஸ்டோன் போன்ற பினிஷைக் கொடுத்திருக்கிறார்கள். விரல் ரேகைகள் பதியுமோ என்ற அச்சம் இல்லை, மேலும் இந்த பினிஷ் மொபைலுக்குக் கொஞ்சம் கிளாஸியான லுக்கையும் கொடுக்கிறது. கேமரா மாடுயூலும் 9RT-யின் டிசைனுடன் ஒத்துப்போகிறது. மொத்தத்தில் டிசைன் சிறப்பு.
9R-ஐ விட 0.12 இன்ச் அதிகமாக 6.62 இன்ச் டிஸ்ப்ளேவைப் பெற்றிருக்கிறது 9RT. எடையும் 9R-ஐ விடக் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. மொபைலின் இரண்டு பக்கங்களிலுமே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5-வைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 120 Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட Fluid AMOLED டிஸ்ப்ளேயைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். டிஸ்ப்ளே பயன்படுத்துவதற்குச் சிறப்பாகவே இருக்கிறது. இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது. பவர் பட்டன், வால்யூம் பட்டன் மற்றும் ஒன்ப்ளஸின் ஆஸ்தான அலர்ட் ஸ்லைடர் ஆகியவை வழக்கம்போல. மொபைலின் கீழ்ப்பக்கம் சார்ஜிங் போர்ட்டுக்குப் பக்கத்தில் சிம் ட்ரே கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால், மெமரி கார்டுக்கான ஸ்லாட் இல்லை. எனவே, 8 GB மாடல் வாங்கும் முடிவில் இருப்பவர்கள், 12 GB மாடலைக் கொஞ்சம் பரிசீலனை செய்யலாம். 8 GB மாடலை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக 256 GB ஸ்டோரேஜைக் கொண்டிருக்கிறது.
ப்ராசஸர் மற்றும் சாப்ட்வேர்:
9R-ல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கும் ஒன்ப்ளஸ். 9 RT-யில் அதனை ஸ்னாப்டிராகன் 888 ஆக அப்டேட் செய்திருக்கிறது ஒன்ப்ளஸ். ஒன்ப்ளஸ் 9 மற்றும் 9 ப்ரோவிலும் இதே ப்ராசஸர் தான் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 9 சீரிஸிலேயே இந்த மொபைல் தான் எட்டு 5G பேண்டுகளை சப்போர்ட் செய்யும் எனத் தெரிவித்திருக்கிறது ஒன்ப்ளஸ். நடந்து முடிந்த பட்ஜெட்டிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5G பயன்பாட்டுக்கு வரலாம் என தெரிவித்திருக்கிறது இந்திய அரசு. நல்ல விஷயம்தான். கேம்கள் விளையாடும்போதும் சரி, அதிகமாக மொபைலைப் பயன்படுத்தும்போதும் சரி, மொபைல் அதிகம் சூடாகாமல் இருக்க வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஒன்ப்ளஸ். நாம் பயன்படுத்திப் பார்த்தவரை மிகவும் சூடாகவில்லை.
இதோடு 9R-ல் நிறைய வசதிகளை அப்டேட் எதுவுமின்றி அப்படியே 9RT-க்கு ட்ரான்ஸ்பர் செய்திருக்கிறது ஒன்ப்ளஸ். டல்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், NFC, வை-பை 6, 65W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,500 mAh பேட்டரி ஆகியவற்றை 9RT-யிலும் பயன்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். எனினும், IP ரேட்டிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய வசதிகள் மிஸ்ஸிங். இதே வசதிகளை FE சீரிஸ் போன்களில் கொடுத்து விலையையும் அதிரடியாகக் குறைத்து வெளியிட்டிருக்கிறது சாம்சங். ஒன்ப்ளஸூம் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
இந்த 9RT-யிலும் ஆண்ட்ராய்ட் 11-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.3-யையே பயன்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். சமீபத்திய ஒன்ப்ளஸ் ஃபோன்களைப் போலவே இதன் சாப்ட்வேரும் சிறப்பாகவே இருக்கிறது. மொபைல் ஃபோனுடனே இலவச இணைப்பாக வரும் தேவையில்லாத சாப்ட்வேர்கள் குறைவாகவே இருக்கின்றன. அக்ஸன்ட் கலர், ஃபான்ட் மற்றும் வால்பேப்பர்களுக்கு ஏகப்பட்ட ஆப்ஷன்களை டீஃபால்டாகவே கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ்.
பெர்ஃபாமன்ஸ் மற்றும் பேட்டரி:
சிறப்பான பெர்ஃபாமன்ஸையே கொண்டிருக்கிறது இந்த 9RT. வேகமான சாப்ட்வேர், ரக்கடான பாடியுடன் தினசரி பயன்பாட்டில் நம்மைக் கவர்கிறது இந்த 9RT. இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வேகமாக இருக்கிறது. நாம் விரவை வைத்த நொடியே அன்லாக் ஆகிறது 9RT, தொய்வெதுவும் இல்லை. பல ஆப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது நம் வேகத்துக்கு ஈடுகொடுத்து வேகமாக நேவிகேட் ஆகிறது. மொத்தத்தில் ஸ்மூத்தான ஒரு எக்ஸ்பீரியன்ஸைக் கொடுக்கிறது 9RT.
ஓடிடி தளங்களைப் பயன்படுத்தும் டிஸ்ப்ளேவை டிடெக்ட் செய்து HD வீடியோவாகவே ப்ளே ஆகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் குவாலிட்டி குறையாமல் சத்தத்தை வெளிப்படுத்துகின்றன. பவர்ஃபுல் ப்ராசஸர் காரணமாக கேம்கள் விளையாடும்போது எந்தக் குறையும் இல்லை. HD டிஸ்ப்ளே, டச் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கிறது, பவர்ஃபுல்லான ப்ராசஸர், எல்லாம் சேர்த்து நல்ல கேமிங் அனுபவத்தையும் நம்மால் பெற முடிகிறது. நீண்ட நேரம் தொடர்ந்து கேம் விளையாடும்போது மட்டும் மொபைல் கொஞ்சம் சூடாவதுபோல் இருக்கிறது, அவ்வளவுதான்.
4,500 mAH பேட்டரி, சாதாரண பயன்பாட்டுக்கு (கேமிங், கால், கேமரா மற்றும் சோசியல் மீடியா ஸ்ட்ரீமிஹ் எல்லாம் சேர்த்து) ஒரு நாள் அல்லது ஒன்றரை நாள்கூட வருகிறது. ஒன்ப்ளஸ் 9 மற்றும் 9R-ஐவிட சிறப்பாகவே இருக்கிறது இதன் பேட்டரி. மேலும், 65W வார்ப் சார்ஜர் கொடுத்திருப்பதால் 30 நிமிடத்தில் முழுமையாகச் சார்ஜ் ஆகி விடுகிறது 9RT, சிறப்பு.
கேமரா:
கேமராவைப் பொருத்தவரை 9R-ல் இருந்த மோனோக்ரோம் சென்சார் மட்டும் இதில் மிஸ்ஸிங். ஒன்ப்ளஸ் 9 மற்றும் 9 ப்ரோவில் அல்ட்ராவைடு கேமராவாகப் பயன்படுத்தப்பட்டிருந்த 50 MP கேமராவை 9 RT-யில் ப்ரைமரி கேமராவாகப் பயன்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். இந்த ப்ரைமரி கேமராவோடு சோனி IMX481 சென்சாரோடுகூடிய 16 MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 MP மேக்ரோ ஷூட்டர் கேமரா ஒன்றையும் மூன்றாவது கேமராவா 9 RT-யில் கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ். 9R மற்றும் 9RT இரண்டிலுமே ஃசெல்பி கேமரை 16 MP தான்.
கேமரா ஃபெர்ஃபாமன்ஸ் பெரிதாக நம்மை ஈர்க்கவில்லை. அப்டேட் செய்திருக்கிறோம் என ஒன்ப்ளஸ் கூறினாலும், கேமராவில் மேம்படுத்துவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. பகல் நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களும், வீடியோக்களு்ம நன்றாகவே இருக்கின்றன. ஆனால், குறைவான வெளிச்சப் புகைப்படங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஓப்போவின் கலர் ஓஎஸ்ஸிடம் இருந்து கேமரா செயலியைக் கடன் வாங்கியிருக்கிறது ஒன்ப்ளஸ். AI என்ஹான்ஸ்மென்ட் ஆப்சன் இருந்தாலும், அதனைப் பயன்படுத்தும்போது ஒரு செயற்கையான தோற்றத்தையே கொடுக்கிறது. 10X ஜூம் ஆப்ஷன் ஓகே. அல்ட்ரா வைடு கேமராவைப் பயன்படுத்தும்போது புகைப்படத்தின் தரமும் குறைவதை நம்மால் பார்க்க முடிகிறது. இரவு நேரங்களில் அல்ட்ரா வைடு கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களின் தரம் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
சிறப்பான லைட்டிங் இருக்கும்போது எடுக்கப்படும் வீடியோக்கள் சிறப்பாக இருக்கின்றன, ஸ்டெபிலைசேஷனும் சிறப்பாக இருக்கிறது. 60fps-ல் 4K வீடியோவை எடுக்க முடிகிறது. ஆனால், குறைவான வெளிச்சத்தில் எடுக்கப்படும் வீடியோக்களின் தரமும் குறைவாகவே இருக்கிறது. இன்னும் கேமராவை மேம்படுத்தலாம் ஒன்ப்ளஸ்.
ஒன்ப்ளஸ் 9RT, வாங்கலாமா?
கண்டிப்பாக ஒன்ப்ளஸ் 9R-வை விட சிறந்த அப்டேட்டட் மொபைல் தான் இந்த 9RT. பெர்ஃபாமன்ஸ் சிறப்பாக இருக்கிறது, பேட்டரி லைஃப் சூப்பர், கேமராவும் 9R-ஐ விட சிறப்பாக இருக்கிறது, ஆனால் இன்னும் சிறப்பாகக் கொடுத்திருக்கலாம். 9R-ஐ விட சிறப்பாக, ஒன்ப்ளஸ் 9-க்கு இணையாக இருக்கிறது. இதனுடன் ஒப்பிடும் போது ஒன்ப்ளஸ் 9 கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ்வாகத் தோன்றுகிறது. இல்லை இது வேண்டாம், ஒன்ப்ளஸ் 10 சீரிஸை வாங்கலாம் எனக் காத்திருந்தால், எப்போது அது இந்தியாவுக்கு வரும் எனத் தெரியாது. சர்வேதச சந்தையிலேயே இப்போது தான் 10 ப்ரோவை வெளியிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ். இனி 10 சீரிஸ் சர்வதேச சந்தையில் வெளியாகி, அதன் பிறகு இந்தியாவுக்கு எப்போது வரும் எனத் தெரியாது. இடையில் ஷாவ்மி மற்றும் சாம்சங்கிலும் 9RT-க்கு இணையான மொபைல்களும் இருக்கின்றன. அதனையும் ஒரு முறை பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம்.
source https://www.vikatan.com/technology/gadgets/oneplus-9-rt-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக