தஞ்சாவூர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வார்டனுக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் பள்ளி நிர்வாகிக்கும் முன் ஜாமீன் வழங்கியிருப்பதும் குறிப்பிடதக்கது.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த அரியலுார் மாவட்டம் வடுகபாளையயம் கிராமத்தை சேர்ந்த,17 வயது மாணவி ஒருவர் பூச்சி மருந்து குடித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் தற்கொலைக்கு அவர் தங்கி படித்த ஹாஸ்டல் வார்டன் மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதே காரணம் என சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக இறப்பதற்கு முன்பு அந்த மாணவி பேசிய இரண்டு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மதம் மாற சொல்லி அழுத்தம் கொடுத்ததால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பாஜக, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்டோர் இதனை கையில் எடுத்து போராட்டம் நடத்தினர். `மதம் மாற சொல்லி வற்புறுத்தியதே மகள் தற்கொலை செய்து கொண்டதாக’ மாணவியின் பெற்றோரும் புகார் எழுப்பினர்.
Also Read: அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: அதி தீவிரம் காட்டும் அண்ணாமலை! - என்ன காரணம்?
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் வழக்குத் தொடர்ந்திருந்தார். விசாரணையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினரும் 20-க்கும் மேற்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மாணவி தற்கொலை விவகாரத்தில் இருவிதமான கருத்துக்கள் நிலவிய நிலையில் பாஜக சார்பில் அமைக்கப்பட்டிருந்த அக்கட்சியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினரும் தஞ்சாவூர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி ஹாஸ்டல் வார்டனான சகாயமேரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில் சகாயமேரிக்கு நீதிபதி மதுசூதனன் ஜாமீன் வழங்கினார். இதே போல் பள்ளி நிர்வாகியான ராக்கேல்மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, அவரையும் கைது செய்ய வேண்டும் எனப் மாணவியின் பெற்றோர், பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ராக்கேல் மேரியும் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாகவும் நடைபெற்ற விசாரணையில் ராக்கேல்மேரிக்கும் முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
source https://www.vikatan.com/news/crime/in-student-suicide-case-court-granted-bail-to-the-hostel-warden
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக