``தேர்தலில் நிற்க ரூ.5 லட்சம் கேட்டார். கொடுக்க தாமதம் ஆனதால், அந்த சீட்டை கூட்டணிக் கட்சிக்குக் கொடுத்துவிட்டார்" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சருக்கு எதிராக வட்டச்செயலாளர் மண்ணை வாரி இறைத்துச் சாபமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்து அதற்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அந்த பட்டியலில் திருச்சி மாநகராட்சி 51வது வார்டில் அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.க வட்ட செயலாளர் பழனிசாமி-யின் மகள் திவ்யா என்பவர் போட்டியிடுவார் என அ.தி.மு.க தலைமை பட்டியல் வெளியிட்டது.
இந்நிலையில் வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாளில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 51-வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் திவ்யாவிற்குப் பதிலாக இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செங்கேணி என்பவர் போட்டியிடுவார் என திடீரென அறிவித்தது. இதில் அப்செட் ஆன திவ்யா, த.மா.கா வேட்பாளருக்கு எதிராக 51 வது வார்டில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் திவ்யாவின் தந்தையும் அ.தி.மு.க வின் 51வது வார்டு வட்ட செயலாளருமான பழனிச்சாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``அ.தி.மு.க தொடங்கியது முதல் இன்று வரையிலும் அ.தி.மு.க-வில் தான் இருந்து வருகிறேன். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளேன். எனது மகள் 51வது வார்டில் போட்டியிடுவார் என அ.தி.மு.க தலைமை அறிவித்தது.
இதற்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்து தர வேண்டும் என முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரும், அ.தி.மு.க திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் வற்புறுத்தினார். அவர் கேட்ட நேரத்தில் என்னிடம் பணம் இல்லை. வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து, உறவினர்களிடம் கடன் வாங்கிக் கொண்டு மறுநாள் காலை வெல்லமண்டி நடராஜனைச் சந்திக்கச் சென்றேன். காலதாமதமாகப் பணம் கொண்டு வந்ததைக் காரணம் காட்டி எனது மகளுக்கு ஒதுக்கிய வார்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி விட்டதாக என்னிடம் சொன்னார்.
பணத்திற்காக வெல்லமண்டி நடராஜன் செயல்பட்டு வருகிறார். கட்சியின் உண்மை தொண்டர்களை மதிப்பதில்லை. அவருடைய மகன் ஜவஹர் கட்சியில் எந்த பதவியிலும் இல்லாதவர். ஆனால் அவருக்கு சீட் வழங்கி உள்ளார்.
அவர் மாவட்டச் செயலாளராக இருக்கும் வரை கட்சி அழிந்துதான் போகும். எனவே வெல்லமண்டி நடராஜன் செயலை குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களிடம் புகார் கொடுக்க இருக்கிறேன். அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கும் வரை ஓயமாட்டேன்" எனத் தரையிலிருந்த மண்ணை வாரி இறைத்துச் சாபமிட்டார்.
இதுகுறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் பேசமுயற்சி செய்தோம். அவர் பதில் அளிக்காத நிலையில் அவரின் மகன் ஜவஹர்லால் நேரு-விடம் பேசினோம். ``பழனிச்சாமி அண்ணே கட்சியில் ரொம்ப சீனியர். அவர் ஒரு சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பேசுகிறார்.
மாநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கட்சிக்காரர்களிடம் நீங்களே கேட்டுப் பாருங்கள். நாங்கள் யாரிடமாவது பணம் வாங்கி இருக்கிறோமா இல்லையா என்று. எங்களது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் தூண்டுதலின் படி பேசுகிறார். பா.ஜ.க-வினர் கடைசி வரையிலும் தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. இது அனைவருக்கும் தெரிந்தது தான்.
பின்பு அ.தி.மு.க தலைமை அவசர அவசரமாக 65 வார்டுக்கு உண்டான அ.தி.மு.க-வில் போட்டியிடும் நிர்வாகிகளின் பட்டியலை உடனே அனுப்பச் சொல்லிக் கேட்டதால் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அனுப்பினார்கள். நாங்கள் தான் அவரின் மகளின் பெயரைச் சேர்த்து அனுப்புகிறோம். பிறகு கட்சித்தலைமையோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணிக்குப் பேசுகிறார்கள்.
அவர்கள் அந்த வார்ட்டை தான் கேட்டார்கள். அந்த வார்டும் அ.தி.மு.க-விற்கும் சாதகமாக இல்லை. இதனைத் தலைமைக்குத் தெரிவித்த பிறகு தான் தலைமை சொன்னதின் பெயரில் கூட்டணிக்கு விட்டுக் கொடுத்தோம். இதில் எங்களது தவறு என்ன இருக்கிறது. இந்த தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். எதைச் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைத்துத்தான் பணம் கேட்டதாகச் சொல்கிறார்கள். நடந்தவை எல்லாவற்றையும் தலைமைக்குத் தெரியப்படுத்தி விட்டோம்.” என்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/admk-cadre-complaints-about-former-minister-regarding-local-body-election-seat
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக