லஞ்சஒழிப்பு சோதனைக்கு உள்ளான அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி, செந்தில் பாலாஜி முன்பு சபதமிட்டதுபோல், தனது குடும்பத்தை கருவறுக்க பார்ப்பதாக, அதிரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Also Read: லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: கூல் தங்கமணி; வேலுமணி பாணியில் போராட வந்தவர்களுக்கு தக்காளி சாதம்
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, கே.சி வீரமணி, சி.விஜயபாஸ்கர் வரிசையில் ஐந்தாவது நபராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சம்பந்தப்பட்ட 69 இடங்களில் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடைபெற்றது. சென்னையில் அவர் சம்பந்தப்பட்ட, தொடர்புடைய 14 இடங்கள், ஆந்திரா, பெங்களூரு, சொந்த மாவட்டமான நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், கிருஷ்ணகிரி என்று பல பகுதிகளில் சோதனை நடைபெற்றது. அதோடு, நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்களில் சோதனை நடக்கிறது. அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் 8 இடங்களிலும், கரூரில் இரண்டு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதேபோல், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடைபெற்றது.
சோதனையின் முடிவில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில், கணக்கில் வராத ரூ. 2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிக்கை மூலம் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, 1.13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், நாமக்கல் பள்ளிப்பாளையம் அருகில் உள்ள கோவிந்தம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் நடைபெற்ற ரெய்டுக்குப் பின், வெளியில் வந்த தங்கமணி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"பழிவாங்கும் நோக்கத்தோடும், அ.தி.மு.கவை அழிக்கும் நோக்கத்தோடும், இன்று என் வீட்டிலும், கட்சியினர் வீடுகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். பல செய்திகளில் எனது வீட்டில் ரூ. 2.16 கோடி பணம் கிடைத்ததாக சொல்லப்பட்டது. ஆனால், என் வீட்டில் இருந்து ஒரு துரும்பைகூட எடுத்து போகவில்லை. என்னுடைய செல்போனை மட்டும் தான் எடுத்து சென்றுள்ளனர். வேறு எதையும் என் வீட்டில் இருந்து எடுத்துப்போகவில்லை. தவறான தகவலை பரப்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் கரங்களை வலுப்படுத்த கூடாது என்பதற்காக, இப்படி பொய் வழக்குப் போட்டு எங்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால், இதற்கெல்லாம் நாங்க யாரும் அஞ்சமாட்டோம். இந்த சோதனையின் உள்நோக்கம் என்னவென்றால், மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜி, பொதுத்தேர்தலுக்கு முன்பு கரூரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு செல்கிறார். க.பரமத்தி பகுதியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் எங்க அமைப்பின் ஒன்றிய பெருந்தலைவர் அங்கே சென்றிருக்கிறார். அவரை பார்த்து செந்தில் பாலாஜி, 'இன்னும் மூணு மாசம்தான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், நான்தான் மின்சாரத்துறை அமைச்சராவேன். அப்போது, தங்கமணியை மட்டுமல்ல, அவரின் குடும்பத்தையே கருவறுப்பேன். தங்கமணி, அவரின் மனைவி, மகன்னு மூணு பேரையும் கருவறுக்க போகிறேன்'னு பேசியிருக்கிறார். அதைப் பற்றி அப்போதே என்னிடம் சொன்னார்கள். 2012 - ம் ஆண்டு என்னுடைய மகன் திருமணத்துக்கு செந்தில் பாலாஜி வீட்டுக்கு, அவரிடம் போன் மூலம் கேட்டுவிட்டு, எனது மனைவியோடு பத்திரிகை வைக்கப் போனேன்.
ஆனால், எங்களை ஒருமணி நேரம் காக்க வைத்துவிட்டு, பின்வாசல் வழியாக போய்விட்டார். அதன்பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் சுயரூபம் தெரிந்து, செந்தில் பாலாஜி வகித்த பதவியை பறித்து, எனக்கு வழங்கினார். அதன்பிறகு, அவருக்கு 5 ஆண்டுகாலம், எந்த பதவியையும் கொடுக்கவில்லை. அதனால், எந்தந்த கட்சிக்கு அவர் போனார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்த கோபத்தை எல்லாம், இப்போது தி.மு.க தலைமையிடம் சொல்லி, என் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்த வைத்து, பழிவாங்கி தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறார். ஆனால், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நான் சட்டத்தை நம்புபவன். என் மகன் நேர்மையாக தொழில் செய்கிறார். சரியாக கணக்குகளை வைத்திருக்கிறார். அதனால், நீதிமன்றத்தில் இதை சந்தித்துகொள்வேன்.
Also Read: Tamil News Today: லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; தங்கமணி வீட்டில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பறிமுதல்!
என்னை ஒழிக்க வேணடும் என்பதற்காக, செந்தில் பாலாஜி ரெய்டு நடத்த வைத்திருக்கிறார். ஆயிரம் செந்தில் பாலாஜிகள் வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது. செந்தில் பாலாஜியின் முழு சுயரூபம் இன்னும் தி.மு.க தலைமைக்கு தெரியவில்லை. குறிப்பாக, முதலமைச்சருக்கு தெரியவில்லை. கூடியவிரைவில் அவருக்கு தெரியவரும். நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.கவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, எங்க கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்த வைத்திருக்கிறார்கள். இந்த பழிவாங்கும் நடவடிக்கையால், நானும், கழகமும் ஒழிந்துவிடமாட்டோம். இன்னும் எழுச்சியாவோம்" என்றார் ஆவேசமாக!.
source https://www.vikatan.com/government-and-politics/politics/former-minister-thangamani-press-meet-after-the-anti-corruption-raid
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக