Ad

புதன், 4 நவம்பர், 2020

மும்பை இந்தியன்ஸ் மேல் ஏன் இந்த கொலைவெறி... ஓ மை கொல்கத்தா?! #SRHvMI

ஐபிஎல் பார்

உன்னைச் சுற்றி

பவுண்டரி லைன் தோன்றும்

ரன் ரேட் அர்த்தப்படும்

சியட் டைம் அவுட்டின் நீளம்

விளங்கும்

உனக்கும்

கணக்கு வரும்

கால்குலேட்டர்

அழகாகும்

எதிரணியும்

தெய்வமாவான்

ஐபிஎல் பார்..!

நேற்று ஷார்ஜாவில் நடந்த 2020 ஐபிஎல்-ன் 56வது போட்டியோடு லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன. மும்பை அணி, முதல் ஆளாக டிரைவர் சீட்டுக்கு அருகில் சீட்டைப் பிடித்துக்கொண்டது. டெல்லியும், பெங்களூருவும் சமரின்றி ஒரு சமரசத்துக்கு வந்து, கட்டிப்பிடித்தவாறே வண்டியில் ஏறின. பாவம், இந்தக் கொல்கத்தாதான் காரின் டயரைக் கட்டிபிடித்து கதறிக்கொண்டிருந்தது. இப்போது, கொல்கத்தாவை ஹைதராபாத் வெளியே இழுத்து போடுமா அல்லது உள்ளே இழுத்து தள்ளுமா அல்லது இரண்டும் அல்லாமல் டயரோடு சேர்த்து ஒரு ஏத்து, ஏத்துமா என சிறுமூளையில் சிறகடித்து சுற்றிக்கொண்டிருந்த கேள்விகளுக்கு நேற்று பதில் கிடைத்தது.

#SRHvMI

மும்பை அணிக்கு முதல் இடம் உறுதி. அதனால், `கவலை ஏதுமில்லை. தொல்லை இனி இல்லை' என பல்டான்ஸ் பரவச நிலையில் இருந்தார்கள். இந்த சன்ரைஸர்கள்தான் `ஜெயித்தால் ப்ளே ஆஃப், இல்லையேல் ஸ்விட்ச் ஆஃப்' என பதற்ற நிலையில் இருந்தார்கள். அவர்களைவிட நேற்று பதட்டத்தில் இருந்தது கொல்கத்தாவாசிகள்தான். மும்பை ஜெயித்தால் கொல்கத்தா உள்ளே, மும்பை தோற்றால் கொல்கத்தா வெளியே! அதனால், பும்ராவுக்கும் போல்ட்டுக்கும் சிறப்பு அர்ச்சணை செய்துக்கொண்டிருந்தார்கள்.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர், `நீங்களே பேட்டிங் ஆடுங்கணா' என விட்டுக்கொடுத்தார். பிட்ச் அப்படி! ஹைதராபாத் அணியில், அபிஷேக் ஷர்மாவுக்கு பதிலாக ப்ரியம் கர்க் இணைந்தார். மும்பை அணியில் பும்ரா, போல்ட் இருவருக்குமே ஓய்வு கொடுத்திருந்தார்கள். `செஞ்சுட்டீங்கள்ல...' என அர்ச்சனைத் தட்டை அமழ்த்திவிட்டு அழுகையோடு கிளம்பினர் கொல்கத்தா ரசிகர்கள். பும்ரா, போல்ட்டுக்கு பதிலாக பேட்டின்சன் மற்றும் குல்கர்னி, ஜெயந்த் யாதவுக்கு பதிலாக கேப்டன் ரோஹித்தே அணிக்குள் வந்தார். `இன்னைக்கு ட்யூஸ்டே இல்லடா. ரோகித்டே' என கொல்கத்தாவில் கத்தியது மும்பையில் எதிரொலித்தது.

#SRHvMI

டி காக்கும், ரோஹித்தும் மும்பையின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் சந்தீப் ஷர்மா. ஓவரின் 5-வது பந்தை மிட் விக்கெட் திசையில் ஒரு குத்துவிட்டார் டி காக். பந்து பவுண்டரிக்கு பறந்தது. ஹோல்டர் வீசிய, 2-வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மீண்டும் சந்தீப் ஷர்மா வந்தார். ரோஹித் ஷர்மாவைத் தூக்கினார். மிட் ஆஃபில் நின்றுக்கொண்டிருந்த கேப்டன் வார்னரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு, 4 ரன்களில் நடையைக் கட்டினார் கேப்டன் ரோஹித். `காயம்பட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து பயங்கரமாத்தான் இருக்கும் ப்ரோ. அதுக்கு காயமும் ஆறணும்ல' என அனுதாபபட்டனர் ஹைதராபாத் ரசிகர்கள். ஸ்கை வந்தார். `வானம் கொட்டட்டும்' என ஆர்வமானது கொல்கத்தா. எதிர்பார்த்தது போலவே, ஷார்ட் கவர் திசையில் ஒரு பவுண்டரியைக் கொட்டினார் சூர்யகுமார்.

ஹோல்டர் வீசிய 4-வது ஓவரில், மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியை ஃப்ளிக் செய்தார் சூர்யா. 5வது ஓவரை வீச, சந்தீப் ஷர்மா வந்தார். முதல் பந்து, மிட் ஆஃப் திசையில் அழகான ஒரு பவுண்டரியை விளாசினார் டி காக். அடுத்த பந்து, ஒரு சிக்ஸரை இழுத்தார். சந்தீப்புக்கு கை உதறியது. அடுத்த பந்து, லாங் ஆன் திசையில் இன்னொரு சிக்ஸரைத் தூக்கி கடாசினார். கொஞ்சம் கிட்னியை உபயோகித்த சந்தீப், அடுத்த பந்தை ஸ்லோயர் பந்தாக வீச, ஸ்டெம்ப் தெறித்தது. 13 பந்துகளில் 25 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார் டி காக். இதுவரை, ஐபிஎல்-ன் பவர் ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர் எனும் சாதனை, சந்தீப்பின் பெயரில் எழுதப்பட்டது. பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் நதீம். கவர் பாயின்ட்டில் ஒன்று, எக்ஸ்ட்ரா கவரில் ஒன்று என இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார் சூர்யகுமார். பவர் ப்ளேயின் முடிவில், இரண்டு ஓப்பனர்களையும் இழந்து 48/2 என்ற நிலையில் இருந்தது மும்பை.

#SRHvMI

7-வது ஓவரை வீச யார்க்கர் நட்டு வந்தார். 4 ரன்கள் மட்டுமல்ல, சூர்யகுமார் கொடுத்த கேட்சையும் திருப்பிக்கொடுத்தார். அடுத்து ரஷீத் வந்தார். வழக்கம்போல், பவுண்டரிகள் ஏதும் கிடைக்கவில்லை. 9-வது ஓவரை வீச நதீம் வந்தார். அவரும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ரஷீத் வீசிய 10வது ஓவரில், டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரியை விரட்டினார் சூர்யகுமார். அந்தப் பக்கம், ரஷீத்தின் தலைக்கு மேல் ஒரு சிக்ஸரை போட்டுவிட்டார் கிஷன். ஆந்திரதேசம் அதிர்ச்சியடைந்தது. மீண்டும் நட்டு வந்தார். 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கெத்துக் காட்டினார். 12வது ஓவரை வீச, நதீமைக் கூட்டிவந்தார் வார்னர். பவுலர்களை மாற்றி மாற்றி இறக்கியதில், மும்பை அணிக்கு லேசாக தலைச்சுற்றியது போல. முதல் பந்திலேயே,, சாஹாவிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சித்தந்தார் சூர்யகுமார் யாதவ். 29 பந்துகளில் 36 ரன்கள். அதே ஓவரில், க்ருணாலின் விக்கெட்டும் காலி. இன்னொரு பக்கம், திவாரியின் விக்கெட்டைத் தூக்கிவிட்டார் ரஷீத் கான்.

நதீம் வீசிய 14-வது ஓவரில், 3 ரன்களும். ரஷீத் வீசிய 15-வது ஓவரில், கிஷன் ஒரு பவுண்டரியை விரட்ட 8 ரன்களும் கிடைத்தன. 15 ஓவர் முடிவில், 98/5 என்கிற நிலையில் மும்பை சோகமாக அமர்ந்திருந்தது. அதனினும் சோகமாக அதன் அருகிலேயே கொல்கத்தாவும் அமர்ந்திருந்தது. 16-வது ஓவரை வீசினார் நடராஜன். 5வது பந்தில் யார்க்கர் மிஸ்ஸாக, அதை பயன்படுத்தி பவுண்டரிக்கு விரட்டினார் பொல்லார்டு. கடைசிப்பந்தை, ஒரு ஸ்டெப் ஏறிவந்து லோ ஃபுல் டாஸாக மாற்றி பவுண்டரியை விளாசினார். சந்தீப் வீசிய 17வது ஓவரில், ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டு அடுத்த பந்திலேயே அவுட்டானார் கிஷன். ஹோல்டர் வீசிய 18-வது ஓவரில், கூல்டர் நைலின் விக்கெட்டும் காலி. அடுத்து 19வது ஓவரை வீசவந்த நட்டுவை, பொளந்தெடுத்தார் பொல்லார்டு. ஓவரின் 3வது பந்து, லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸர். அடுத்த பந்து, டீப் மிட் விக்கெட்டில் இன்னொரு சிக்ஸர். அடுத்த பந்து, லாங் ஆஃப் திசையில் மற்றுமொரு சிக்ஸர். `நல்லவேளை, இன்னும் ஒரு ஓவர்தான் மிச்சம் இருக்கு' என ஆசுவாசமானர்கள் ஹைதராபாத் ரசிகர்கள். கடைசி ஓவரை வீச ஹோல்டர் வந்தார். மீண்டும் ஒரு யார்க்கர் மிஸ்ஸாக, அதை சிக்ஸருக்கு அனுப்பினார் பொல்லார்டு. சுதாரித்த ஹோல்டர், மீண்டும் ஒரு ஃபுல் டாஸையே இறக்கி, பொல்லார்டை குழப்பி, க்ளீன் போல்டாக்கி, மூன்று விரல் சல்யூட் அடித்தார். 20 ஓவர்களின் முடிவில், 149/8 என சுமாராக ஆடிவைத்திருந்தது மும்பை.

#SRHvMI

கொல்கத்தா ரசிகர்கள் அப்போதும் மனம் தளரவில்லை. குல்கர்னி, கூல்டர் நைலின் பெயரில் அர்ச்சனையை மாற்றினர். வார்னரும் சாஹாவும் சன்ரைஸர்ஸின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் குல்கர்னி. வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். `வேண்டுதல் வேலை செய்யுது' என குஷியானார்கள் கொல்கத்தா ரசிகர்கள். 2வது ஓவரை வீச கூல்டர் நைல் வந்தார். மிட் ஆஃபில் ஒரு சிக்ஸரையும், மிட் ஆனில் ஒரு பவுண்டரியையும் வெளுத்தார் சாஹா. குல்கரினியின் 3வது ஓவரில், ஷார்ட் தேர்ட் மேனில் ஒன்று, ஃபைன் லெக்கில் ஒன்று என இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் வ்ருத்திமான். வார்னருக்கும், ஆசை வந்தது. மிட் விக்கெட்டில் ஒன்று, எக்ஸ்ட்ரா கவரில் ஒன்று, பாயின்ட்டில் ஒன்று என ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி, தனது 500 ஐபிஎல் பவுண்டரியை நிறைவு செய்தார். கொல்கத்தா ரசிகர்களில் பாதிபேர் உறங்கச் சென்றிருந்தார்கள்.

ராகுல் சஹார் வந்தார். மிட் விக்கெட் திசையில் சாஹாவுக்கு ஒரு பவுண்டரியும், ஸ்கொயர் லெக் திசையில் வார்னருக்கு ஒரு பவுண்டரியும் விட்டுக்கொடுத்தார். பவர்ப்ளேயின் முடிவில், 56/0 என வெற்றிநடைப் போட்டுக்கொண்டிருந்தது சன்ரைசர்ஸ். சஹார் வீசிய 7வது ஓவரில், ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரியை அள்ளினார் வார்னர். க்ருணாலின், 9வது ஓவரில் ஷார்ட் தேர்ட் மேன், டீப் மிட் விக்கெட் என இரண்டு பவுண்டரிகளைக் கொளுத்தினார் சாஹா. மீண்டும் 11வது ஓவரில், இன்னொரு பவுண்டரியை வெளுத்து க்ருணாலை கடுப்படித்தார் சாஹா.

#SRHvMI

சஹார் வீசிய 12-வது ஓவர், முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசி தனது அரை சதத்தைக் கடந்தார் வார்னர். அதே ஓவரில், சாஹாவும் சிங்கிள் எடுத்து தனது அரை சதத்தை நிறைவு செய்தார். பார்ட்னர்ஷிப் 110! அடுத்த 41 ரன்களை, விக்கெட் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 17.1 ஓவர்களில் சேஸ் செய்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவில் வெள்ளை அடித்தது ஐதராபாத். ஸொப்பா...!

Also Read: வார்னர் & சஹா கூட்டணியின் அன்லிமிடெட் ஆந்திரா மீல்ஸ்... கொல்கத்தாவின் கனவு கலைந்தது எப்படி? #SRHvMI

"இந்த நாளை மறக்கணும்னு நினைக்கிறேன். (கொல்கத்தா ரசிகர்கள்: நாங்களும்தேன்). இதுதான் இந்த சீசன்ல எங்களுடைய மோசமான பர்ஃபாமன்ஸ். ரொம்ப வருத்தமா இருக்கு. (கொல்கத்தா ரசிகர்கள்: ஹே ஹே ஹே... நடிக்காத) நாங்க சில விஷயங்கள் புதுசா முயற்சி பண்ணோம். அது சரியா நடக்கலை. (கொல்கத்தா ரசிகர்கள்: பெவிலியனுக்கும் பிட்சுக்கும் நல்லா வேகமாத்தானே நடந்தீங்க). ப்ளே ஆஃப்தான் முக்கியம். மிஸ்டர். ஷ்ரேயாஸ், களத்துல சந்திப்போம்" என்றார் ரோஹித்.

#SRHvMI

"திருப்தியா இருக்குங்கய்யா. கிங்ஸ் லெவன் கிட்டே கன்றாவியா தோத்ததுக்கு பிறகு இப்போதான் மனசு அமைதியாகுது. எல்லோரும் சிறப்பா பந்து வீசுனாங்க. நானும் சாஹாவும் மெரட்டிடோம்ல. இந்த முறையும் கப் எங்களுக்குதான், சிறப்பா விளையாடுவோம். தட்டித்தூக்குவோம்" என்றார் வார்னர். நதீமுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. `கர்போ லார்போ ஜீத்போரே' என கத்திக்கொண்டிருந்த கொல்கத்தாவை `வீட்டுக்கு போ' என அனுப்பிவைத்தது ஐதராபாத்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-sunrisers-hyderabad-vs-mumbai-indians-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக