Ad

புதன், 4 நவம்பர், 2020

கொரோனா: ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு... 'அன்லாக் இந்தியா' நிலை இனி என்னாகும்?

கொரோனா தாக்கம்

கொரோனா பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற பல நாடுகள், சிறிது சிறிதாக அதிலிருந்து மீண்டுவந்தன. அதையடுத்து அந்த நாடுகளில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டன. அப்படி, தளர்வு வழங்கப்பட்டப் பல நாடுகளில் தற்போது கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டாம் அலையின் தாக்கமும், பாதிப்பும் முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பைவிட மிக அதிகமாக இருக்கிறது.

கொரோனா

இன்றைய நிலையில் உலக அளவில் 4,73,64,064 நபர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். 12,12,116 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் 3,40,60,313 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். உலக அளவில் அதிக கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில், 95,67,543 நபர்களோடு அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தியா 83,13,877 பேரோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இரண்டாம் அலை:

பிரான்சில் குறைந்திருந்த கொரோனா தாக்கம் தற்போது வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. 53,254-க்கும் அதிகமான பேர் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு இறப்புகளும் நாளொன்றுக்கு 400-க்கும் அதிகமாக இருக்கிறது. தொற்று அதிகரிக்கவும், அளிக்கப்பட்டிருந்த பல்வேறு தளர்வுகளும் நீக்கப்பட்டு, அங்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை சற்றுக் குறைந்திருந்த கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. நாளொன்றுக்குப் புதிதாக 80,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்த நாடுகளில் இத்தாலி மிக முக்கியமானது. அங்கு கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. 22,000-க்கும் அதிகமான பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதனால், மீண்டும் இத்தாலியில், பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய நாடுகளிலும் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. வைரஸ் தாக்கத்தின் முதல் அலையில் பெரிய பாதிப்பு ஏற்படாத பல்வேறு நாடுகளும்கூட தற்போது இரண்டாம் அலையில் சிக்கியிருக்கின்றன. குறிப்பாக, போலந்தில் கடந்த ஒரு மாத காலமாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேவருகிறது. செக் குடியரசு, ஹங்கேரி ஆகிய நாடுகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

Also Read: சென்னை: கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் என்ன?

இந்தியாவின் நிலை என்ன?

உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது இந்தியாதான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை நெருங்கிச் சென்ற நிலையில். அந்த எண்ணிக்கை தற்போது 37,000 முதல் 40,000 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது. ஊரடங்கு கடுமையாக இருந்த நாள்களிலேயே அதிக அளவில் பாதிப்பு இருந்தநிலையில் தற்போது பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தநிலையில், டெல்லி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது

டெல்லியில் புதிய பாதிப்புகள் 500 வரை சென்றிருந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், அங்கு மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது நாளொன்றுக்கு 4,000-க்கும் அதிகமான புதிய பாதிப்புகள் அங்கு பதிவாகின்றன. இந்தியாவிலேயே இரண்டாம் அலை உருவாகியிருப்பதாக முதலில் அறிவித்த மாநிலம் டெல்லிதான். தற்போது மூன்றாவது அலையும் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அடுத்ததாக, கேரளாவில் பாதிப்புகள் மிகக் குறைந்து காணப்பட்ட நிலையில், அந்த மாநிலத்து மக்கள் ஓணம் பண்டிகையை வெகு விமர்சையாகக் கொண்டாடினர். அதன் பிறகு அங்கு பாதிப்புகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்தன. நாளொன்றுக்குப் புதிதாக 10,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர், மருத்துவமனை நிரம்பிவழியும் நிலை உருவானது. அங்கு மருத்துவ அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

கேரளாவில் தற்போது 4,000-க்கும் அதிகமான பேர் தினமும் பாதிக்கப்படுவதாக பதிவு செய்யப்படுகிறது. தளர்வுகள் வழங்கப்பட்டாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால் என்ன ஆகும் என்பதற்கு இந்த இரண்டு மாநிலங்களும், உலகின் பல நாடுகளும் முன்னுதாரணமாக இருக்கின்றன.

மக்கள் கூட்டம் (ரங்கநாதன் தெரு, சென்னை)

தமிழகத்திலும் 7,000-ம் வரை அதிகரித்துக் காணப்பட்ட கொரோனா பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து தற்போது இரண்டாயிரத்தை ஒட்டி நிற்கிறது. கொரோனா தொற்று அதிகரித்த நேரத்தில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு முகாம்கள், மருத்துவமனையில் படுக்கை வசதிகள் போன்ற பல்வேறு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டன. பாதிப்பு பெருமளவு குறைந்தபோதும் எந்தக் கட்டமைப்பும் குறைக்கப்படவில்லை. காரணம் ஒன்றுதான். தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பல்வேறு பண்டிகைகள் வரவிருக்கின்றன. அந்தப் பண்டிகைகளுக்குப் பிறகு தமிழகத்தில் இரண்டாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்பதால், அதற்குத் தயார்நிலையில் இருப்பதாகத் தமிழக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருள்கள் வாங்கக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கும்போது தமிழகத்திலும் கொரோனா இரண்டாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்பை தமிழக மக்கள் உருவாக்கிவிடுவார்களோ என்கிற அச்சம் எழுகிறது. முகக்கவசம், சமூக இடைவெளி, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறை போன்றவற்றைப் பின்பற்றுவது அரசாங்கத்துக்காக அல்ல... நமக்காகத்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

கொரோனா ஒழியவில்லை... குறைந்திருக்கிறது அவ்வளவுதான்.

கூடுவதும் குறைவதும் நம் கையில்தான் இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/covid-second-wave-in-european-countries-what-will-be-the-status-of-unlock-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக