Ad

புதன், 4 நவம்பர், 2020

காரைக்கால்: பூத்துக்குலுங்கும் பாரிஜாத பூக்கள்... மலர் சாகுபடியில் அசத்தும் விவசாயி!

காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவ மாணவியர், திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தில் வசித்து வரும் மலர் சாகுபடி விவசாயி ராஜேந்திரனைச் சந்தித்து அவரது அனுபவங்களைக் கேட்டறிந்தனர்.

ராஜேந்திரன்

தேவலோக மலர், நந்தவனப் பூ, தெய்வ வழிபாடு செய்ய அபூர்வமான பூ என்றெல்லாம் போற்றப்படும் பாரிஜாதம், பெருமாளுக்கு மிகவும் பிடித்தது என்று இந்து மதத்தினரால் நம்பப்படுகிறது. மல்லிகையைவிட உருவ அளவால் பெரிதான பாரிஜாதம் கண்களைக் கவரும். பிறரை வசப்படுத்தும். நறுமணம் மிகுந்தது. பெண்கள் கூந்தலில் அணியக்கூடியது. மேலும் வாசனைத் திரவியம் மற்றும் பிஸ்கட் தயாரிக்க உதவும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. மருத்துவ குணம் உடையது. அதுமட்டுமல்லாமல், கடந்த 05.08.2020 அன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை செய்வதற்கு முன்பு, பிரதமர் மோடி பாரிஜாத கன்றுகளை அங்கு நட்ட சம்பவம், அந்த மலர்களின் பிரசித்தியை அதிகப்படுத்தியது.

இந்த பாரிஜாத மலரை பயிரிட்டுள்ள ராஜேந்திரனிடம் பேசினோம். ``2017-ம் ஆண்டு கர்நாடக மாநில ஷிமோகாவிலிருந்து சுமார் 30 பாரிஜாத கன்றுகளை வாங்கி வந்தேன். ஆனால், அந்த மலரை சாகுபடி செய்வதற்கு ஏற்ற தட்ப, வெப்ப சீதோஷ்ண நிலை காரைக்காலில் இல்லை. அனுகூலமான வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் உருவாக்க உரிய சாதனங்களைப் பொருத்தி பராமரித்து வந்தேன். அதன் காரணமாக, மூன்று மாதங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக மலர்கள் மலரத் தொடங்கிவிட்டன.

அதற்குப் பிறகு, நிழல் வலை மற்றும் தட்ப வெப்ப மேலாண்மைச் சாதனங்கள் தேவை இல்லாமல்போனது. இப்போது நாள் ஒன்றுக்கு 1,500 முதல் 2,000 வரை மலர்கள் பூக்கின்றன. மல்லிகை, சாமந்தி, கனகாம்பரம் போன்று கிலோ கணக்கில் பாரிஜாத மலர்களை விற்காமல், எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை செய்து பயனடைகிறேன். மலர் ஒன்றை 50 காசுகள் வீதம் விற்கின்றேன். மாலையாகவும் மதிப்பு கூட்டச் செய்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். எனவே, கணிசமான லாபம் கிடைக்கிறது" என்றார்.

பாரிஜாத பூக்கள்

``காரைக்காலில் எவருமே சாகுபடி செய்யாத அரிய வகையான பாரிஜாத மலரை சாகுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் எப்படி ஏற்பட்டது?" என்று கேட்டபோது,

``சாத்தியம் இல்லாததை சாதனையாக்கும் முனைப்பு தனக்கு உள்ளது" என்று பதிலளித்தார். மலர் சாகுபடி குறித்த விவரங்களைக் கேட்டறிந்த மாணவ மாணவியர் ராஜேந்திரனுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து விடைபெற்றனர்.



source https://www.vikatan.com/news/agriculture/a-farmer-successfully-cultivates-parijat-flowers-in-karaikal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக