Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

இந்த மும்பை இந்தியன்ஸுக்கு இல்லையா சார் ஒரு எண்டு... டோன்ட் வொர்ரி ஷ்ரேயாஸ்! #MIvDC

இந்த 2020 ஐபிஎல் சீசனின் முதல் குவாலிஃபையர் போட்டி, துபாயில் நேற்று நடந்து முடிந்தது. ப்ளே ஆஃப் வந்த பூரிப்பில் புல்லரித்துபோய் அமர்ந்திருந்த டெல்லி கேப்டனை, `வாங்க தம்பி' என டாஸ் போடுவதற்கு அழைத்துவந்தார் ரோஹித். 'ஸ்டவ் மேல கடாயி. டியூனாக்கா துபாயி என சொல்லுமளவிற்கு' டியூ ஃபேக்டர் டரியலாக்குவதால் டாஸ் ஜெயித்து பெளலிங் எடுத்தாலே பாதி வென்றதற்கு சமம் எனக் காத்திருந்தார்கள்.

கடைசியில், டாஸ் டெல்லியின் பக்கம் விழ, சோகத்தில் மூழ்கினார் சஞ்சய் மஞ்சரேக்கர். தனது முதல் ஐபிஎல் பைனலுக்குள் டெல்லி அணி நுழையுமா அல்லது தோனி இல்லாத ஒரு பைனலை மும்பை அணி காணுமா என எல்லோருக்கும் எக்கசக்க கேள்விகள். ஆனால், துபாயில் ஒருமுறை யூஸ் பண்ண பொருளை இன்னொருமுறை யூஸ் செய்யமாட்டார்கள் என்பதால் குறுக்கு வெட்டுப் பார்வையில் சில விஷயங்கள் புரிந்தன.

#MIvDC

டி காக்கும் கேப்டன் ரோஹித்தும் மும்பையின் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய, முதல் ஓவரை வீசவந்தார் சாம்ஸ். `இந்தக் குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைக்கிறான்மா இந்தப் புள்ள' என ரோஹித்தைப் பார்த்து `வேல்' அப்பத்தாவைப் போல் அழுதது மும்பை அணி. முதல் பந்திலேயே பவுண்டரியோடு துவங்கினார் டி காக். 4வது பந்தை, டீப் ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரிக்கு தள்ளிவிட்டார். 5வது பந்து, இன்னுமொரு ஹாப் வாலி. இம்முறையும் வாலியைப் பிடுங்கி மிட் ஆனில் ஒரு பவுண்டரியைப் போட்டு சாம்ஸுக்குக் கொடுத்தனுப்பினார் டி காக். 2-வது ஓவரை வீசவந்தார் அனுபவ அஷ்வின். 3-வது பந்திலேயே ரோ-ப்ரோ அவுட். ஆப் பிரேக் ஒன்றை வீசி, ரோஹித் ஆரம்பிப்பதற்கு முன்பே பிரேக்கை அழுத்தினார் அஷ்வின். டி காக்குக்கு இந்த சோகம் கொஞ்சமும் இல்லை. அதே ஓவரில், சந்தோஷமாக ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார். 3வது ஓவரை வீச ரபாடா வந்தார். டீப் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு பவுண்டரியை வெளுத்தார் டி காக். அடுத்து அக்ஸர் படேலை கூட்டிவந்தார் ஸ்ரேயாஸ். லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரைப் போட்டார் குயின்டன் டி காக்.

5வது ஓவரை வீச, 5வது பவுலராக நார்க்கியாவை இறக்கினார்கள். மிட் விக்கெட்டில் திசையிலேயே 2 பவுண்டரிகளைப் பரிசாகக் கொடுத்தார் ஸ்கை (எ) சூர்யகுமார் யாதவ். 6வது ஓவரை வீச அஸ்வின் வந்தார். 4வது பந்தை, நின்று வீசினார். அதை மிட் ஆஃப் திசையில் தூக்கி செருகினார் சூர்யகுமார். கொசுறாக, அதே ஓவரில் இன்னொரு பவுண்டரியையும் பொளந்தார். பவர்ப்ளேயின் முடிவில், 63/1 என சந்தோஷமாக இருந்தது மும்பை அணி. உலக பல்தான்களே ஒன்று கூடுங்கள் என கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள் மும்பை ரசிகர்கள். 7வது ஓவரை வீச, அக்ஸார் வந்தார். சூர்யகுமாருக்கு ஒரு பவுண்டரி கிட்டியது. அடுத்து அஸ்வின் வந்தார். சூர்யகுமாருக்கு ஒரு சிக்ஸர் கிட்டியது. அதுமட்டுமல்ல, அஸ்வினுக்கு டி காக்கின் விக்கெட்டும் கிட்டியது. லாங் ஆஃபில் நின்றுகொண்டிருந்த தவானிடம் கேட்ச் கொடுத்துவிட்டு 40 ரன்களோடு பெவிலியனுக்கு நன்னடை போட்டுச் சென்றார் டி காக். இஷான் கிஷனை இறக்கினார்கள்.

#MIvDC

சாம்ஸ் வீசிய 9-வது ஓவரில், ஸ்கொயர் லெக் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டினார் ஸ்கை. கடைசியில், இன்னிங்ஸின் பவுண்டரியே இல்லாத ஓவராக, பத்தாவது ஓவரை வீசினார் படேல். உற்சாகம் கொண்ட ரபாடா, அடுத்த ஓவரையும் பவுண்டரி இல்லாத ஓவராக எருக்கஞ்செடியோரம் இறுக்கிப்பிடித்தார். நார்க்யா வீசிய 12 ஓவரில், ஒரு பவுண்டரியைப் பொளந்துவிட்டு, அவுட்டானார் சூர்யகுமார். 38 பந்துகளில் 51 ரன்கள் எனும் அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓவரில், 3 ரன்கள் மட்டுமே கொடுத்து பொல்லார்டின் விக்கெட்டையும் கழட்டினார் அஸ்வின். 4-0-29-3 என சிறப்பாக ஸ்பெல்லை முடித்தார். சாம்ஸ் வீசிய 14-வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

14 ஓவர்களின் முடிவில், 108/4 என்ற நிலையில் இருந்தது மும்பை. `கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமே' என மும்பை வாசிகள் அலறிக்கொண்டிருந்தார்கள். ரபாடா வீசிய, 15வது ஓவரில் மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரி, ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸர் எனக் கொளுத்திவிட்டார் கிஷன். அடுத்து நார்க்கியாவைக் கூட்டிவந்தார்கள். டீப் ஸ்கொயர் லெக்கில் ஒன்று, தேர்ட் மேனில் ஒன்று என கிஷன் இரண்டு பவுண்டரிகளை விரட்ட, லாங் லெக் திசையில் ஒரு பிரமாண்ட சிக்ஸரை அனுப்பிவைத்தார் க்ருணால். டெல்லியின் இரட்டைக்குழல் துப்பாக்கி, மும்பை வெடித்த வெடியில் தீபாவளி துப்பாக்கியானது!

#MIvDC

களத்தில் இரண்டு இடதுகை பேட்ஸ்மென் இருந்ததால், அக்ஸருக்குப் பதிலாக ஸ்டாய்னிஸுக்கு ஓவர் தந்தார் ஸ்ரேயாஸ். முதல் பந்தே க்ருணால் அவுட். சாம் வீசிய 18வது ஓவரில், கிஷன் ஒரு சிக்ஸரும் ஹர்திக் ஒரு சிக்ஸரும் விளாசினார்கள். மும்பையின் ஸ்கொர் மடமடவென உயர்ந்துகொண்டிருந்தது. மீண்டும் ரபாடாவை இறக்கினார்கள். பதிலுக்குத் தொடர்ந்து இரண்டு சிக்ஸரை அனுப்பினார் ஹர்திக். டெல்லி ரசிகர்கள், அரண்டுபோனார்கள். நார்க்கியா வீசிய கடைசி ஓவரிலும் இதே கதைதான். தொடர்ந்து 2 சிக்ஸரைப் பறக்கவிட்டார் ஹர்திக். பிறகு, கடைசி பந்தில் கிஷன் ஒரு சிக்ஸரை வெளுக்க, மும்பை 200-ஐ எட்டியது. கிஷன் அரைசதத்தை எட்டினார். இன்னிங்ஸ் முடிவில் 200/5. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என மேலும் கீழும் ஸ்கோர்போர்டைப் பார்த்தது டெல்லி.

'ஷா, டக் அவுட் ஆகிட்டே இருக்காப்லனு ரஹானாவே இறக்குனோம். ரஹானேவும் டக் அவுட் ஆனாப்ல. சரி, இன்னொரு மேட்ச் வாய்ப்பு கொடுப்போம்னு கொடுத்தால் ரஹானே அடிக்க, தவான் டக் அவுட் ஆகுறாப்ல. இது எல்லாத்துக்கும் இன்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கணும் கடவுளே' என்று நீண்ட வேண்டுதலை முடித்துக்கொண்டு மேட்ச் பார்க்கத் துவங்கினார்கள் டெல்லி ரசிகர்கள். ஷா, தவான், ரஹானே மூவருமே டக் அவுட். டெல்லி ரசிகர்களுக்கு மூளை கிறுக்கடித்தது.

ஷா, ரஹானே விக்கெட்டை `தண்டர்' போல்ட் தூக்க, தவான் விக்கெட்டைக் கழட்டி எறிந்தார் பும்ரா. ராமராஜனைப் போல், மூன்று பேரையும் நிற்கவைத்து குத்துவிட்டது மும்பை. போல்ட் வீசிய 3வது ஓவரில் போராடி 2 பவுண்டரிகளை அடித்தார் ஷ்ரேயாஸ். பும்ரா வீசிய 4வது ஓவரில், அவரும் அவுட்!

#MIvDC

சில ஓவர்கள் ஸ்டாய்னிஸும் பன்ட்டும் சேர்ந்து பந்துகளை உருட்டிக்கொண்டிருக்க, க்ருணால் வீசிய 8வது ஓவரில் பன்ட்டும் காலி. ஸ்டாய்னிஸ் மட்டும் ஒற்றை ஆளாக, சஹார் ஓவரில் 19 ரன்களை பறக்கவிட்டார். ஒரு பயனும் இல்லை. 10வது ஓவர் முடிவில், வெறும் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து `குவாலிஃபையர் 2' பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டது டெல்லி அணி. மீண்டும் சஹார் மாட்ட, சிக்ஸர், பவுண்டரி என வெளுத்துவிட்டார் ஸ்டாய்னிஸ். அதே ஓவரில், ஒரு பவுண்டரியை விரட்டியிருந்த அக்ஸார், ஸ்டாய்னிஸுக்கு சப்போர்ட்டாக நின்றார். பொல்லார்டு வீசிய 15வது ஓவரில், அருமையான இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் அக்ஸர்.

Also Read: மும்பை இந்தியன்ஸ் அல்ல, மும்பை சாம்பியன்ஸ்... டெல்லிக்கி இன்னொரு சான்ஸ் இருக்கி... ஆனா?! #MIvDC

அடுத்த மேட்ச், ஸ்டாய்னிஸ் - அக்ஸரை ஒபனிங் இறக்கிவிட்றலாம் என டெல்லி ரசிகர்கள் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். அடுத்த ஓவர், ஸ்டாய்னிஸ் அவுட். மிடில் ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டார் பும்ரா. அதே ஓவரில், சாம்ஸின் விக்கெட்டும் காலி. இன்னிங்ஸின் 2வது டபுள் விக்கெட் மெயிடன் ஓவராக முடித்தார். போல்ட்டின் முதல் ஓவரும், டபுள் விக்கெட் மெயிடன் ஓவரே! அதன்பிறகு, பெரிதாய் ஒன்றும் நடக்கவில்லை. பொல்லார்டு வீசிய கடைசி ஓவரில், ரபாடா இரண்டு பவுண்டரிகளை ஆசைத்தீர அடித்தார். அக்ஸர் அவுட்டானார். 143/8 என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது டெல்லி. 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கெத்தாக பைனல்ஸுக்கு அடியெடுத்து வைத்தது மும்பை.

#MIvDC

"எல்லாருமே பார்ம்ல இருக்காய்ங்க. இந்த டீமை ஜெயிக்குறது அவ்வளவு கஷ்டம் இல்ல பாஸு. அஷ்வின் தரமா பந்து போட்டாப்ல. அங்கிட்டு, ஹர்திக் வெளுத்துவிட்டாப்ல. நான் எதுவும் தப்பா பேச விரும்பல. அடுத்த இரண்டு மேட்சும் ஜெயிச்சு கப்படிப்போம் பாருங்க" என்றார் ஷ்ரேயாஸ்.

"சிறப்பு, மிகச்சிறப்பு. நான் அவுட்டானதும் டி காக்கும், சூர்யகுமாரும் மேட்சை அற்புதமா எடுத்துட்டுப் போனாங்க. பெளலர்கள் மிரட்டிட்டாங்க. எங்க புள்ளைங்க எல்லாம் ரொம்ப பயங்கரம்" என்றார் ரோஹித். பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருதோடு, பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது.

விடுங்க ஷ்ரேயாஸ். 'செமி பைனல் போனா என்ன, பைனல்ல பார்த்துக்கலாம்'னு தளபதியே சொல்லியிருக்காரு.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-qualifier-1-mumbai-indians-vs-delhi-capitals-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக