Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

பாலாவின் சித்து விளையாட்டுக்கள், கைவைங்கடா பார்க்கலாம் மோடில் சனம், பொய் அர்ச்சனா?! பிக்பாஸ் - 30

இன்றைய ‘விவாத மன்ற’ எபிஸோடை, ஏ.ஆர்.ரஹ்மான் ஸடுடியோவில் கொடுத்து லேயர் லேயராக பிரித்து 16.1 ஸ்பீக்கரில் கேட்டால்தான் ‘என்ன பேசினார்கள் என்பது’ ஒரு குன்சாகவாவது புரியும் போலிருக்கிறது. அப்படியொரு சந்தைக்கடை இரைச்சல்.

‘விவாத மன்றம்’ என்பதை விட ‘பிடிவாத மன்றம்’ என்று பெயர் மாற்றியிருக்கலாம். அந்தளவிற்கு ‘தான் சொல்வதுதான் சரி’ என்று பதிமூன்று பேரும் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

பதிமூன்று பேரா, நீதிபதி தவிர இரண்டு பேர் குறைகிறதே என்று கேள்வி எழலாம்? கொளுத்திப் போட்டு விட்டு அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் ஆக பின்னணியில் உலவும் ரமேஷ், இப்போதும் அப்படியே பிதாமகன் விக்ரம் மாதிரியான முகபாவத்துடன் பின்னால் அமர்ந்து இந்தக் கூச்சலை கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு கம்பெனி நிஷா.

பிக்பாஸ் – நாள் 30

இந்த வெட்டி மன்றத்திற்கு ஒரு மங்குனி நீதிபதி வேறு. ‘குறுக்கே பேசறவங்க பேசலாம்’ என்று இவரே கோக்குமாக்காக அனுமதி கொடுத்துவிட்டு பிறகு சந்தைக்கடை இரைச்சல் ஏற்பட்டவுடன் இவரே ‘சைலன்ஸ்... சைலன்ஸ்’ என்று லொட்டு லொட்டு என்று சுத்தியலை தட்டிக் கொண்டிருந்தார். (இவரே பாம் வைப்பாராம்... அப்புறம் இவரே எடுப்பாராம்).

என்ன நடந்தது என்பதை (உத்தேசமாக) பார்ப்போம்.

தனக்கு வழங்கப்பட்ட எமோஜி விருதை "பார்க்க அப்படியே உங்களை மாதிரியே இருக்குல்ல?” என்று பாராட்டிவிட்டு அர்ச்சனாவிடம் நைசாக தள்ளி விட்டுச் சென்றார் ரியோ.

பிக்பாஸில் காரணம் இல்லாமல் எவ்வித துண்டுக்காட்சியும் இடம் பெறாது. இதன் தொடர்ச்சி வேறெங்காவது பிரதிபலிக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

30-ம் நாள் விடிந்தது. ‘ஏ... வெற்றிவேலா’ என்கிற பாடல் ஒலிக்க தன்னை சிம்புவாகவே நினைத்துக் கொண்டு சீரியஸான முகபாவத்துடன் ஆடினார் ஆரி. ‘கிங்மேக்கர்’ பாலாஜி, வழக்கம் போல் ஓரமாக நின்று கொண்டு ‘நான் எங்க... எப்படி இருக்க வேண்டியவன்...’ என்கிற அமர்த்தலான பார்வையுடன் இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

மார்னிங் டாஸ்க். பிக்பாஸிற்கு ஏன் இந்த விபரீத ஐடியா வந்ததென்று தெரியவில்லை. ‘நவரசம்’ பற்றி ஷிவானி சொல்லித் தர வேண்டுமாம். (வெளங்கிடும்!) ‘இந்த ரசத்திற்கு மொதல்ல கடுகு தாளிக்கணுமா?' என்கிற மாதிரி நின்று கொண்டிருந்த ஷிவானி ‘இப்ப நான் சிரிச்சுக் காட்டப் போறேன்’ என்று சொல்லி விட்டு விநோதமாக எதையோ செய்ய, எங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தை ஒன்று வீறிட்டு அலறி அழும் சத்தம் கேட்டது. ஷிவானி நவரசத்தை அத்தோடு விட்டது நாம் செய்த பாக்கியம். (ஷிவானியின் சிரிப்பிற்கு ரம்யா தந்த எக்ஸ்பிரஷன் ரிப்பீட் மோடில் காண வேண்டிய காட்சி).

பிக்பாஸ் – நாள் 30

‘சோக பாவத்தை’ தரும் முயற்சியில் ஆரி இறங்க "இவர் எப்போதுமே இப்படித்தானே இருப்பார்... இதில் என்ன வித்தியாசம்?” நாம் நினைத்துக் கொண்டிருந்த போது தன் நடிப்புத் திறனை நினைத்து தானே அழுதார் ஆரி. "ஓ... இதுதான் நவரசமா... நாம இதை அடுத்த படத்துல தட்றோம்… தூக்கறோம்... அப்பாகிட்ட சொல்லி அட்வான்ஸ் வாங்கிட வேண்டியதுதான்" என்பது மாதிரி பிரமிப்புடன் ஆரியைப் பார்த்துக் கொண்டிருந்தார் ரமேஷ். சுரேஷ் செய்து காட்டிய நவரசம் தேவலாம். நன்றாக இருந்தது.

சமானதாப் புறாவான சாம் ‘பாலாஜிக்கும் தாத்தாவிற்குமான’ இணைப்புப் பாலமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். “டாஸ்க்ல நீதான் ஜெயிக்க வெச்சேன்னு சொன்னதால இன்னும் அவர் காண்டா இருக்கார்” என்று சாம் சொல்ல ‘'அவர் நேரா என் கிட்ட வந்து பேசியிருக்கலாமே’' என்றார் பாலாஜி.

அடுத்து ஆரம்பித்தது அந்த ‘வெட்டி’ மன்றம். போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை வழக்காடி தீர்த்துக் கொள்ளலாமாம். இதற்கு ஆதரவாளர்கள் கோஷ்டியும் இருக்குமாம். ஜெயித்தவர்களுக்கு லகஷுரி பட்ஜெட் ஆதாயம் உண்டு. இதற்கு நடுவர் சுச்சியாம்.

போட்டியாளர்கள், வாக்குமூல அறைக்குள் சென்று மனுக்களை தயார் செய்து கொண்டிருந்தார்கள். நீண்ட நேரமாக அமர்ந்திருந்த சனம். “பிக்பாஸ்... ஒரு அடிஷனல் பேப்பர் கொடுங்க" என்று முதல் பென்ச் மாணவன் போல கேட்டு வாங்கி எழுதிக் கொண்டேயிருந்தார். இவர் எழுதி முடித்ததும் இந்த டாஸ்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிக்பாஸ் அறிவித்தார். ஏன்... ஏன்... என்று மக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர். சனத்திடம் காரணம் கேட்டு அலைபாய்ந்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 30

உண்மையான காரணம் இதுவாக இருக்கலாம். “இந்த சனம் பொண்ணு மனு எழுதச் சொன்னா பாலாஜி பத்தி ஒரு நாவலே எழுதி வெச்சிருக்குப்பா... பேப்பரே தீந்து போச்சு. வெளில போய் ஸ்டஷ்னரி கடைல வாங்கினாத்தான் உண்டு. இதை வெளில சொல்ல முடியுமா, மானம் போயிடும்” என்பது பிக்பாஸ் டீமின் உள்வட்டார ரகசியமாக இருக்கலாம்.

"Puppet-ன்னு என்ன அர்த்தத்துல சொன்னாங்கன்னு புரியல... இதப் பத்தி மனுவுல எழுதிக் கேளு” என்பது போல் சோமிடம் அர்ச்சனா சொல்ல, 'ஆமாமாம்... அதுதான் எனக்கும் புரியல’ என்று தலையாட்டிக் கொண்டிருந்தார் சோம். (அடப்பாவி மனுஷா... இப்படி தலையாட்டறதுக்கு பெயர்தான் puppet).

முதல் வழக்கு ஆரம்பித்தது. எண் XVI2345/03.11.2020 –பாலாஜி வெர்சஸ் சனம். “யுவர் ஆனர்... எதிர் தரப்பு ஆசாமி மீது நான் மூன்று குற்றச்சாட்டுக்களை வைக்கிறேன்” என்று ஆரம்பித்த பாலாஜி, ‘எலுமிச்சம்பழம்’, ‘முந்திரிக்கொட்டை’, ‘தறுதலை’ ஆகிய மூன்று விவகாரங்களைப் பற்றிய விவரங்களை அடுக்கினார்.

மனு என்கிற பெயரில் அடிஷ்னல் பேப்பர் வாங்கி நாவல் எழுதிக் குவித்த சனம் இப்போது என்ன சொல்கிறார் என்றால்... “இவ்ளோ தொடர்ச்சியா சொன்னா என்னால ஞாபகம் வெச்சுக்க முடியாது. ஒவ்வொன்னா சொல்லச் சொல்லுங்க" என்று கேட்க அந்த கோரிக்கை நீதிபதியால் கருணையின்றி நிராகரிக்கப்பட்டது.

சனம் எல்லாத்திலயும் மூக்கை நுழைக்கற பொண்ணுன்னு எப்போதும் சொல்ற பாலாஜி, "நான் அர்ச்சனாவை புகழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கும்போது ஏன் அங்க வந்து மூக்கை நுழைக்கணும்?” என்று சனம் கேட்டது நல்ல பாயின்ட்.

பாலாஜியின் ஆதரவாளர்கள், சனத்தின் ஆதரவாளர்கள் ஆகியோரை அழைத்தார் நீதிபதி. சனத்திற்கு ஆதரவாக வந்த ஆரி, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ''பாலாஜி உங்களை கேப்டனாக்கினார்-ன்றதுக்காக அவருக்காக பொய் சொல்லாதீங்க’' என்று சாமை நோக்கி சொல்லி விட, சாம் ‘மேரி கோம்’ ஆகி ஆவேசமாக சண்டையிட்டார். (கோபத்துலயும் அவங்க அழகு குறையல... ஹிஹி...).

பிக்பாஸ் – நாள் 30

“பாலாஜி ஒண்ணும் போட்டுக் கொடுக்கற தொனில சொல்லலை" என்று எலுமிச்சம்பழ மேட்டரில் அன்பு மகனுக்கு ஆதரவாக வந்து நின்றார் ‘அன்னை’ அர்ச்சனா. இரண்டு பக்க ஏரியாவிலும் சுரேஷ் நின்று பேச முயல நீதிபதியால் பலமாக கண்டிக்கப்பட்டார்.

‘இனிமே நாம பேச வேண்டாம்’ என்று நட்பாக பிரிகிறவர்கள் கைகுலுக்கிக் கொண்டு பிரிவதுதான் மரபு. பின்பக்கத்தில் காலால் உதைத்து விடைபெறுவது என்பது எந்தவொரு கலாசாரத்திலும் இல்லாதது. இப்படி விளையாட்டாக சனம் செயல்பட்டதால்தான், மறுநாள் காலையில் அதே விளையாட்டுத்தனத்துடன் ‘தறுதலை’ என்று பாலாஜி சொன்னார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் (அதாவது கூச்சல்களை) கேட்ட நீதிபதி, பாலாஜி ‘தறுதலை’ என்று சொன்னது திட்டமிட்ட குற்றமா, திட்டமிடாத காமெடியா என்று வாக்கெடுப்பு நடத்தினார். (அப்ப... இதுக்கு எதுக்குப்பா நீதிபதி, விசாரணையெல்லாம்... இதை முதல்லயே பண்ணியிருக்கலாமே?!) இதில் பாலாஜிக்கு சார்பாக அதிக ஆதரவு வாக்குகள் வர, வழக்கு பாலாஜிக்கு சாதகமாக வெற்றி பெற்றது.

இந்த வழக்கு விசாரணையில் இருந்த கூடுதல் நகைச்சுவை என்னவென்றால், இந்த ‘முந்திரிக்கொட்டை’, ‘தறுதலை’ விவகாரம் தொடர்பாக நிகழ்ந்த அதிமுக்கிய விவாதங்களை சீரியஸான முகத்துடன் சுச்சி குறிப்பு எடுத்துக் கொண்டிருந்ததுதான். (அதாவது நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருப்பது போல...ஹிஹி).

**

"சாம் முன்ன மாதிரி இல்ல. இப்பல்லாம் ரூடா மாறிட்டாங்க... சுத்தி ஆளு இருக்கற தைரியம் போல... ஓவர் தன்னம்பிக்கை" என்று சாமைப் பற்றி ஆரியிடம் அனத்திக் கொண்டிருந்தார் அனிதா. அதாவது அவர் சொல்ல வருவது, "சோமைப் பார்த்தியா. வந்த நாள்ல இருந்தே எனக்கு அடக்கமா இருக்கான். சாம் மட்டும் ஏன் இப்படி மாறணும்?” என்பதே.

அடுத்த வழக்கு விசாரணை துவங்கியது. XVI2346/03.11.2020 – சுரேஷ் வெர்சஸ் சனம். (மறுபடியும் சனமா?!)

“இரண்டு பேர் முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கும் போது சம்பந்தம் இருக்கோ இல்லையோ... சனம் அங்க வந்து தலையிட்டு எதையாவது சொல்வாங்க. நானும் இதை சாம, தான, தண்ட, பேத முறையெல்லாம் உபயோகிச்சு தடுக்கப் பார்த்திருக்கேன். முடியல" என்று சுரேஷ் தன் தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

பிக்பாஸ் – நாள் 30

“நான் அப்படிச் செய்யலை. அப்படித் தெரிஞ்சா அது மற்றவங்களோட பார்வை. என் பிரச்னையில்லை" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் சனம்.

இப்போதுதான் அந்த அதிபயங்கர ட்விஸ்ட் நடந்தது. முதல் வழக்கில் சனத்தின் எதிரியாக நின்றிருந்த பாலாஜி, இப்போது சனத்தின் ஆதரவாளராக வந்து நின்றார். (ராஜதந்திரமாம்!) “எங்க சனம் மாதிரி ஒரு அறிவாளிப் பொண்ணை உலகத்திலேயே பார்க்க முடியாது. அது ஒரு விஷயத்துல தலையிட்டா நியாயமாத்தான் இருக்கும். இன்னிக்கு சனத்தோட வாயை அடைச்சிட்டீங்கன்னா. நாளைக்கு எனக்கும் அதே விதியை சொல்லிடுவீங்க. இதனால பாதிப்பு எல்லோருக்கும்தான். ஆகவே யுவர் ஆனர்…” என்று பாலாஜி ஆவேசமாக வாதிட்டுக் கொண்டிருக்க ‘அவுஹ எனக்காகப் பேசறாஹ…’ என்று வெட்கப்பட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார் சனம். (போச்சுடா... மறுபடியும் மொதல்ல இருந்தா?!)

சனத்திற்கு ஆதரவாக அனிதா குடுகுடுவென்று ஓடிவந்து எதையோ சொல்ல முயல, ரம்யாவின் வாதம் அனிதாவை தடுத்து விட்டது. இனிமேல் இந்தக் கட்டுரையில் அனிதா என்று எழுதி விட்டு அதற்குப் பின்னால் ஒரு பத்தியாவது ஸ்பேஸ் தரலாம் என்று பார்க்கிறேன். பாவம்... அவர் எங்கு போனாலும் இதே பிரச்னை.

‘பர்சனல் விஷயங்களில் சனம் மூக்கை நுழைக்கிறாரா... பொது விஷயங்களில் மூக்கை நுழைக்கிறாரா’ என்று ஆவேசமான விவாதம் அர்ச்சனாவிற்கும் ரம்யாவிற்கும் இடையில் நடந்தது. இத்தனை களேபரத்தில் ரமேஷ் ‘பிதாமகன் விக்ரம்’ லுக்கை தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். (ஓ... இதுதான் நவரசமா?!).

பிக்பாஸ் – நாள் 30

சனத்திற்கு ஆதரவாக பாலாஜி ஆஜர் ஆனதை விடவும் அதிகமான அதிசயம் ஒன்று நடந்தது. சிக்கனமான உடையில் வந்த ஷிவானி, பாலாஜிக்கு எதிராக ஒரு பாயின்ட்டை உரத்த குரலில் சொல்லியதுதான் அந்த அதிசயம்.

சனத்திற்கு ஆதரவாக பேசிய பாலாஜி இடையில் சேம் சைட் கோலையும் போட்டு நீதிபதியையே குழப்பினார். ‘சனத்தை எங்களுக்கு ரொம்ப பிடிக்குங்க. ஆனா அவங்க சம்பந்தமில்லாம குறுக்கிடறதுதான் பிடிக்காது. மத்தபடி ஐ லவ்யூங்க’ என்பது மாதிரியே ரியோ closing argument-ஐ வைத்தார். (இவருதான் சுரேஷோட வக்கீலாம்!)

“எனக்கு தீர்ப்பெழுத கொஞ்சம் நேரம் ஆகும். அதுவரைக்கும் நீங்க ஏதாவது பேசிட்டு இருங்க... எனக்கும் டைம்பாஸ் ஆகும்’' என்று நீதிபதி சொல்ல "அர்ச்சனா... நீங்க ரெண்டு பொய் சொன்னீங்க” என்று ஆரம்பித்தார் சனம். “நான் எங்க சொன்னேன்'' என்று அர்ச்சனா மல்லுக்கட்ட, இதற்கிடையில் சனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

‘ஹே... ஹே... இந்த கேஸை நான்தான் ஜெயிச்சு கொடுத்தேன்’ என்கிற மாதிரி துள்ளிக்குதித்தார் பாலாஜி. இதை அவர் ராஜதந்திரமாக நினைத்துக் கொண்டிருக்கலாம். இந்த விளையாட்டிற்கு அது பொருத்தமாக கூட இருக்கலாம். ஆனால் மக்களின் பார்வையில் அவர் தாழ்ந்து விடும் ஆபத்து இருக்கிறது.

“தாத்தா மேல எனக்கு கோபம் இருந்தது. அதனாலதான் ரெண்டாவது வழக்குல அவருக்கு எதிரா நின்னேன்” என்கிறார் பாலாஜி. தனிமனித கோப தாபங்களை விடவும் ‘எது சரி?’ என்கிற பக்கம் நேர்மையாக நிற்பதுதான் சரியானது.

“சனம் செய்யறது எனக்கு கூடத்தான் எரிச்சலாவுது. ஆனா ஒரு வக்கீலா நான் என் கடமையைச் செஞ்சேன். நான் எடுத்துக் கொண்ட வழக்கிற்காக கடமையுணர்ச்சியுடன் கூடிய தியாகம் அது...” நீதிபதியிடம் பிறகு பெருமையடித்துக் கொண்டிருந்தார் அனிதா. (ஆனால் அவர் பேசியது காட்டப்படவேயில்லை. பாவம்!).

**

பிக்பாஸ் – நாள் 30

அர்ச்சனா vs சனம் இடையிலான பஞ்சாயத்தின் முழு விவரம் (அதாவது எனக்குப் புரிந்த வகையில்).

கிச்சன் டீமின் பிரச்னைகள் பற்றி ஒரு கேப்டனாக அவர்களுடன் அர்ச்சனா பேசிக் கொண்டிருந்தார். அப்போது சனம் அவர்களை நோக்கி நடந்து வர ‘அய்யோ இந்தப் பொண்ணு எல்லாத்துலயும் மூக்கை நுழைக்குமே’ என்று அர்ச்சனா நினைத்துக் கொண்டாரோ என்னவோ... ‘சனம். இது கிச்சன் டீம் விவகாரம்...’ என்று சொன்னவுடன் சனம் திரும்பிச் சென்று விட்டார்.

ஆனால், பாலாஜியும் அதே போல் அங்கு வர – அவர் கிச்சன் டீம் மெம்பராக இல்லாவிடினும் – அவரிடம் அர்ச்சனா பிரச்னையைப் பற்றி பேசினார்.

தான் வரும் போது தடுக்கப்பட்டு, பாலாஜி வரும் போது வரவேற்பு அளிக்கப்பட்டது ஏன் என்பது சனத்தின் கேள்வி. அது மட்டுமல்லாமல், "அர்ச்சனா ஆட்சேபித்தவுடன் நான்தான் திரும்பிப் போய் விட்டேனே... அப்புறம் எப்படி விவகாரங்களில் நான் மூக்கை நுழைக்கிறேன் என்று கோர்ட்டில் சொல்வது உண்மையாகும்? எனில் அந்தப் பாயிண்ட் பொய்தானே?" என்பதும் சனத்தின் வாதம்.

“நாங்கள் பாலாஜியுடன் ஏன் பேசினோம் என்றால் அவர் முன்வைத்த ஒரு பிரச்னையைப் பற்றி அவரிடம்தானே பேசியாக வேண்டும்? நீங்கள் உடனே திரும்பிப் போய் விட்டீர்கள் என்றுதானே நான் கோர்ட்டில் சொன்னேன்” என்பது அர்ச்சனாவின் வாதம்.

"நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை அறிந்து கொள்ளாமலேயே ‘இது கிச்சன் டீம் விவகாரம்’ என்று நீங்கள் தடுத்து விட்டீர்கள். என்றாலும் நான் நாகரிகமாக உடனே விலகிச் சென்று விட்டேன். ஆனால் நீங்கள் இதை ஒரு பாயின்ட்டாக கோர்ட்டில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்பது சனத்தின் கேள்வி.

(ஏதாவது புரியலைன்னா விட்டுருங்க. நானும் இரண்டு முறை சம்பந்தப்பட்ட வீடியோவைப் பார்த்தும் இதுதான் புரிஞ்சது).

பிக்பாஸ் – நாள் 30
ஒரு கட்டத்தில், "நான் பொய் சொல்லலை.. பொய் சொல்ல மாட்டேன். பொய் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது” என்று ஹிஸ்டீரிக்கலாக கத்திக் கொண்டே சனம் வெளியே போக மக்கள் பதறியடித்துக் கொண்டு பின்னால் ஓடினார்கள்.

**

‘தகவல் தொழில்நுட்பம் வளர வளரத்தான் தகவல் இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே போகிறது’ – இது நான் எப்போதும் சொல்லும் திருவாசகம். பிரச்னை நுட்பங்களின் மீதல்ல. மனிதர்களின் மீது. ஒரு விஷயத்தைச் சரியாக கடத்துவதும் புரிந்து கொள்வதும் மனிதர்களுக்கு எப்போதுமே ஆகாத விஷயம். தங்களின் புரிதல்களையும் கோபதாபங்களையும் செய்திகளின் உள்ளே வைத்துதான் இன்னொருவரிடம் சொல்வார்கள்.

எனவேதான், ‘ஒருவர் சொல்லும்போது நமக்கு சரியாக தெரிகிற விஷயம், அதே விஷயத்தை இன்னொருவர் சொல்லும் போது தவறாகத் தெரியும்’.

“ஒரு விஷயத்தை முழுசா சொல்ல விடுங்க... கேளுங்க... அப்பத்தானே உங்களுக்கும் புரியும்" என்று ரியோ சொன்னதும் சனத்தின் அழுத்தம் வெடிக்கத் துவங்கி விட்டது. இதனால் பயந்து போன ரியோ... சனத்திடம் சென்று சமாதானமாக விளக்கம் தந்து கொண்டிருந்தார்.

“ஒருவர் என்ன சொல்ல வர்றாங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னோடியே... அவங்க குணாதிசயத்தை வெச்சு... அவங்க மூக்கைத்தான் நுழைக்கப் போறாங்க’ன்ற முடிவுக்கு அர்ச்சனா எப்படி வரலாம்?” என்கிற சரியான பாயின்ட்டை ஆரி பிடித்தார்.

இதற்கிடையில் ரம்யாவிற்கும் சுரேஷிற்கும் சிறு முட்டல் ஏற்பட்டு சரியானது. “யார் அட்வைஸ் சொன்னாலும் நீ கேட்காத... குழப்பிடுவாங்க... இங்க எல்லோரும் அவங்கங்க கேமைத்தான் ஆடறாங்க... ‘சுமங்கலி’ மேட்டர்ல இதை நான் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டேன்” என்று அனிதா சனத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார். (கார்டன் ஏரியாவில் இருக்கும் சோபா, போதி மரத்தினால் செய்யப்பட்டது போலிருக்கிறது.)

பிக்பாஸ் – நாள் 30

சனத்திடம் தாம் தனியாக பேச அர்ச்சனா விரும்பினார். கேப்டன் சாம் வழியாக இந்தச் சமாதான நடவடிக்கை கொண்டு வரப்பட, "இல்ல... நான் இதை சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் பண்ணலாம்னு இருக்கேன். அங்க நான் செஞ்சது தப்பு–ன்னு தெரிய வந்தா.. மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன்” என்று அந்தச் சமாதான முயற்சியை சனம் ஏற்கவில்லை.

தான் செய்தது மிகச்சரி என்று அவர் உள்ளுணர்வு அழுத்தமாக சொல்லியிருக்கலாம். ஆக... ‘குறும்படம்’ ஒன்றை சனம் எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கும். எனவே இந்த சீஸனின் முதல் குறும்படம் சனம் தொடர்பாக இருக்கும் பெருமையை இந்த வாரம் பெறக்கூடும்.

இந்த ரணகளத்திலும் என் மனதில் எழும் கேள்வி இதுதான். ‘அர்ச்சனா சொன்ன இரண்டாவது பொய் என்ன?'

அறிந்தவர்கள் கமென்ட் பாக்ஸில் வந்து சொல்லுங்கள்.



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/court-like-debate-sanam-bursts-out-bigg-boss-tamil-day-30-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக