Ad

திங்கள், 9 நவம்பர், 2020

`வறுமையோ, துயரமோ... தற்கொலை தீர்வல்ல!' - வாழ வழிகாட்டும் அரசு சமூக நலத்துறை

நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி வடிவேல் முருகன் (78). இவரின் மனைவி பங்கஜம் (67). இந்தத் தம்பதியின் மகள்கள் மாலா (48) மற்றும் மைதிலி (47). தச்சு வேலை செய்துவந்த வடிவேல் முருகனின் வருவாயை வைத்துதான் குடும்பம் நடந்தது. வறுமை காரணமாக இந்தத் தம்பதியின் இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் வடிவேல் முருகனின் காலில் சின்னதாக ஒரு காயம் ஏற்பட்டது. அது நாளடைவில் பெரிதானதால் அவர் வீட்டிலேயே முடங்கினார். இந்தக் குடும்பம், தங்களது வறுமை நிலையை வெளியில் யாரிடமும் கூறவில்லை.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி வடிவேல் முருகன் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்வதற்குக்கூட பணம் இல்லாத வறுமை நிலையில் இருந்தனர் அவரின் மனைவி மற்றும் மகள்கள். இதையடுத்து வடிவேல் முருகனின் சடலத்தை வீட்டில் அப்படியே போட்டுவிட்டு, மூவரும் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியேறினர். சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சுசீந்திரம் இளைய நைனார் குளத்தில் தற்கொலை எண்ணத்துடன் குதித்தனர். செப்டம்பர் 15-ம் தேதி அதிகாலை நேரத்தில் குளத்தின் கரையில் வாக்கிங் சென்ற சிலர், தண்ணீரில் கிடந்தவர்களைப் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மீட்புப் பணியில் இறங்கினர். அதில் வடிவேல் முருகனின் மனைவி பங்கஜம், மூத்த மகள் மாலா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இளைய மகள் மைதிலி என்ற சச்சு மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நடந்தது. பின்னர் காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

மைதிலி

குமரியில் மற்றொரு குடும்பம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நவம்பர் 1-ம் தேதி நடந்தது. நாகர்கோவில் நெசவாளர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (32). இவரின் மனைவி ராசி (29). இந்தத் தம்பதிக்கு அக்சயா (5), அனியா (3) என்ற மகள்கள் இருந்தனர். ரஞ்சித்குமார் மெடிக்கல் ஷாப் வைத்திருந்தார். மெடிக்கல் ஷாப் தொடங்க பணம் கடன் பெற்றிருக்கிறார். எப்படியும் வியாபாரம் நடத்தி கடனை அடைத்துவிடலாம் என நினைத்தவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டது. இதனால் சிறிதுகாலம் ஓய்வில் இருந்தவர், மீண்டும் வியாபாரத்தைக் கவனித்திருக்கிறார். ஆனால், உடல்நலத்தை மறந்துவிட்டார். இதனால் அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.

கணவரின் மறைவுக்குப் பிறகு, கணவரின் பெற்றோருடன் வசித்துவந்தார் ராசி. கணவர் வாங்கிய கடன் துரத்தியதால் அங்கன்வாடி அல்லது வேறு எங்கும் வேலை கிடைக்குமா என்று முயன்றிருக்கிறார். எந்தப் பணியும் கைகூடவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் 1-ம் தேதி இரவு தன் இரண்டு குழந்தைகளுக்கும் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை கொடுத்ததுடன், ராசியும் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராசி எழுதி வைத்த கடிதத்தில், ``நானும் பிள்ளைகளும் ஸ்லீப்பிங் டேப்லெட் சாப்பிட்டோம். தயவுசெய்து என்னை மன்னிச்சிருங்க. நான் எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுத்து அதுக்குப் பிறகுதான் இந்த முடிவு எடுத்திருக்கேன். உங்க யாராலயும் இதைத் தாங்கிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனாலும், என்னால இப்பிடி ஒரு வாழ்க்கையை வாழ முடியாது. பிளீஸ்... சாரி, என்னையும் என் பிள்ளைங்களையும் என் புருஷன்கிட்ட அனுப்பி வையுங்க..." என உருக்கமாக எழுதியிருந்தார்.

குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட ராசி

இந்த இரண்டு தற்கொலை சம்பவங்களும் குமரி மாவட்டத்தையே உலுக்கின. வறுமை, கடன் தொல்லைக்கு இறுதி முடிவு தற்கொலைதானா? வேறு தீர்வே கிடையாதா. வறுமையில் வாடும் மக்களுக்கு வாழ வழி என்ன? கன்னியாகுமரி மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினியிடம் பேசினோம்.

``தச்சுத் தொழிலாளி குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றித் தெரிஞ்சதும், அதுல உயிர்பிழைச்ச பொண்ணை போய் பார்த்தோம். ஆரம்பத்துல, `என்னயும் ஊசியப் போட்டு கொன்னுடுங்க'ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. நாங்க கவுன்சலிங் கொடுத்த பிறகு, தற்கொலை எண்ணத்தை கைவிட்டாங்க. வாராவாரம் நான் அவங்களை போய் பார்க்கிறேன். இப்ப தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தையல் வேலை ஏற்பாடுசெய்து கொடுத்து, வொர்க்கிங் விமன் ஹாஸ்டல்ல சேர்த்திருக்கோம். இனி சுய தொழிலுக்கான ஏற்பாடும், கலெக்டர் மூலமா வீடு வாங்கிக் கொடுக்கும் முயற்சியும் செய்துகிட்டிருக்கிறோம்.

வறுமையால, வாழ்றதுக்கான எல்லா வழிகளும் அடைபட்டவங்களைக் காப்பாத்த அரசு இருக்கு. 60 வயதுக்கு மேல உள்ள முதியவர்கள் தங்குறதுக்காக முதியோர் இல்லங்கள் இருக்கு. பிள்ளைங்க இருந்தும் பெற்றோரை பார்த்துக்காம கைவிட்டா, அவங்களுக்காக இலவச சட்ட உதவி செய்து கொடுத்து உரிமையை மீட்டுக்கொடுக்கிறோம். வருமானம் இல்லாம கஷ்டப்படுறவங்க குழந்தைகளை 12-ம் வகுப்பு வரை படிக்க வைக்கிற அரசுத் திட்டம் இருக்கு. அதுக்கு மேல காலேஜ் படிக்க வைக்க, சில ஸ்பான்சர்ஸ் மூலம் ஏற்பாடு செய்கிறோம். மேலும், பொருளாதார நெருக்கடியில இருக்கிற குடும்பங்களைத் தங்க வைக்கவும் ஏற்பாடு இருக்கு.

கன்னியாகுமரி மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி

கடன் மட்டுமல்லாம, வேற ஏதாவது பிரச்னையில இருக்கிறவங்க, மன அழுத்தத்தில இருக்கிறவங்கனு தனிநபர்கள், குடும்பங்கள்னு யாரா இருந்தாலும் எங்களைத் தொடர்புகொண்டால் கவுன்சலிங் கொடுக்கிறோம். ஏதாவது குடும்பங்கள் இதுபோல இருப்பது எங்களுக்குத் தெரிந்தால், நாங்களே அவங்களைத் தொடர்புகொண்டு கவுன்சலிங் வழங்குகிறோம். மேலும், `சுரக்‌ஷா'ங்கிற அரசு உதவிபெறும் தொண்டு நிறுவனம் மூலமா கவுன்சலிங் மற்றும் பாதிக்கப்பட்டவங்களுக்கு இலவச சட்ட உதவி செய்துகொடுக்கிறோம்.

பணம் கொடுத்து ஏமாந்தவங்க, கடன் வாங்கின பணத்துக்கு கூடுதல் வட்டி கட்ட முடியாம நெருக்கடியைச் சந்திக்கிறவங்கனு இதுபோன்ற பிரச்னைகள் எங்க கவனத்துக்கு வந்தால் இரண்டு தரப்பிலும் விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி செய்கிறோம். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் சமூக நலத்துறையை எப்போதும் அணுகலாம்" என்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் அல்ல, அனைத்து மாவட்டங்களிலும் சமூக நலத்துறை மக்களுக்காக உதவ தயாராக உள்ளது. மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தீர்வில்லாத பிரச்னை என எதுவும் இல்லை. எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வில்லை.



source https://www.vikatan.com/news/general-news/how-department-of-social-welfare-helps-to-rescue-people-who-attempted-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக