Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

கரூர்: ``எங்க ஊர் வறட்சியைப் போக்கணும்!'' - காடு வளர்க்கும் ஊராட்சிமன்றத் தலைவி

``எங்கள் ஊர் மிகவும் வறட்சியான ஊர். வானம் பார்த்த பூமி. மழை அதிகம் பெய்யாது. இங்கே விவசாயம் செய்ய முடியவில்லை. குடிக்கவும் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால், எங்கள் ஊராட்சியில் உள்ள 5 ஏக்கரில் பல்வேறு மரங்களை நட்டு, சமூகக் காடு அமைத்துள்ளேன். இதன் மூலம், எங்கள் பகுதியின் மழை வளத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்" என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் நீலா வேல்முருகன்.

அடர்வனம்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள முள்ளிப்பாடி ஊராட்சியின் ஊராட்சிமன்றத் தலைவி, நீலா வேல்முருகன். முள்ளிப்பாடி ஊராட்சியில் வரும் சேர்வைகாரன்பட்டி அருகே உள்ள முள்ளிப்பாடி குளம், 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல வருடங்களாக இங்கு மழை அதிகம் பெய்யாததால், ஒரு வருடம்கூட இந்தக் குளம் நிரம்பவில்லை. இந்த நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், இங்கு 5 ஏக்கர் அளவுக்கு அடர்த்தியான வனத்தை ஏற்படுத்துவதற்காக முடிவுசெய்து, கிராம மக்களைக் கொண்டு, 100 நாள் வேலை திட்டத்தில் இணைந்து பலவகை மரக்கன்றுகளை நட்டு, தற்போது ஆள் உயர அளவுக்கு மரங்களை வளர்த்திருக்கின்றனர்.

ஊராட்சி மன்றத் தலைவி நீலா வேல்முருகனின் தனி கவனத்தில், பொதுமக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும் மற்றும் இயற்கை வளங்களைப் பெருக்கவும், அப்பகுதியில் நன்றாக மழை பெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்த அடர் வனக்காடு 100 நாள் வேலைத்திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட திட்ட அலுவலர் ஒத்துழைப்புடனும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் வாழ்வாதாரம் அளிக்கும் வகையிலும், தற்போது மரங்கள் அதிகளவில் நடப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றன.

அடர்வனம்

முள்ளிப்பாடி ஊராட்சிமன்றத் தலைவி நீலா வேல்முருகனிடம் பேசினோம்.

``ஒருகாலத்தில் இங்கு விவசாயம் நல்லபடியாக நடந்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில் வறட்சி ஏற்பட்டு, இங்கு விவசாயம் இல்லாமல் போயிருக்கிறது. அதற்குக் காரணம், இங்கு மழையளவு குறைந்ததுதான். மழையளவு குறையக் காரணம், இங்கு இயற்கை அழிந்ததுதான். அதோடு, குடிநீருக்கும் இங்கு தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்தது. காவிரி கூட்டுக்குடிநீரை மட்டுமே நம்பி பொதுமக்கள் குடிநீருக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல்.

அதனால், நான் ஊராட்சிமன்றத் தலைவி ஆனதும், எங்கள் ஊராட்சியில் இயற்கை வளத்தைப் பெருக்க நினைத்தேன். அதோடு, எங்கள் ஊராட்சிக்கு நல்ல குடிநீர் கிடைத்திடவும் அதிக மழைப்பொழிவு அவசியமாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, குடிப்பதற்கு நல்ல குடிநீரை நிலத்தடியில் இருந்து பெற்று மக்கள் பயன்படுத்திட மழை அவசியமாக உள்ளது.

நீலா வேல்முருகன்

எனவே, மழைப்பொழிவை அதிகரிக்க வைக்க, 100 நாள் வேலைத்திட்டம் மூலம் எங்கள் ஊராட்சியில் அதிக அளவு மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். எங்கள் ஊராட்சியில் உள்ள 120 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் 10 வருடங்களாக நிரம்பாமல் உள்ளது. அந்தக் குளம் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருப்பதால், அதில் 5 ஏக்கர் நிலத்தில் வேம்பு, புங்கன் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டு, முறையாகப் பராமரித்தோம். இப்போது அவை அனைத்தும் ஆள் உயரத்துக்கு மரமாக வளர்ந்து வருகிறது. அடர்ந்த வனமாக மாறி வருகிறது. இதன்மூலம், எங்கள் ஊரின் இயற்கை சூழல் செம்மையாக மாறும் என்கிற நம்பிக்கை வந்துள்ளது. இன்னும் சில ஏக்கர் பரப்பளவில் கூடுதல் மரங்களை நட்டு வளர்க்க ஏதுவாக, 100 நாள் வேலை திட்டத்தில் அதிக நாள்கள் வேலையளிக்க மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

மனிதர்களின் முயற்சியில் உருவாகிறது காடு!



source https://www.vikatan.com/news/environment/karur-mullipadi-panchayat-president-develops-mini-forest-in-her-village

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக