Ad

புதன், 4 நவம்பர், 2020

``கடன்கூட கிடைக்கிறதில்ல!" - வறுமையில் `ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாடகி செல்வி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தெட்சிணாபுரத்தில் வசிக்கிறது நாட்டுப்புறப்பாடகி தஞ்சை செல்வியின் குடும்பம். சசிக்குமார் இயக்கிய `ஈசன்' திரைப்படத்தில் வரும் `ஜில்லா விட்டு ஜில்லா வந்த' பாடல் மூலம் திரையுலகத்துக்கு அறிமுகமாகி, 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார் செல்வி. தன் காந்தக் குரலால் திரை ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த இவர், ஏராளமான நாட்டுப்புறப் பாடல்களை எழுதிப் பாடியுள்ளார்.

Jilla vittu Jilla vandha song

கிராமத்து மண்வாசனைப் பாடல்களை வெளிநாடுகள் வரை பாடி பரப்பி வருகிறார். இந்த வருடம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளில் புக் செய்திருந்த நிகழ்ச்சிகளில் செல்வி கலந்துகொள்ள இருந்த நிலையில், கொரோனா பிரச்னையால் அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாததால் அவரது வருமானம் நின்றுபோனது. சேமிப்பு என்றெல்லாம் எதுவுமில்லாத நாட்டுப்புறக் கலைஞர் வாழ்க்கையில், வட்டிக்கு மேல் வட்டிக்குக் கடன் வாங்கி இப்போது சிரமத்துடன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்.

நாட்டுப்புறப் பாடகி தஞ்சை செல்வியிடம் பேசினோம். ``ஆலங்குடி பக்கத்துல தெட்சிணாபுரம்தான் நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாம். ரொம்ப ஏழ்மையான குடும்பம். நாட்டுப்புறப் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். முறைப்படிலாம் இசை கத்துக்கிடலை. ரேடியோ, டிவினு காதால கேட்குற பாட்டையெல்லாம் அப்புடியே உள்வாங்கிக்கிட்டு பாடிடுவேன்.

என் வீட்டுக்காரர் ஐயப்பனும் கிராமியப் பாடகர்தான். அவருக்கு ஊரு தஞ்சாவூர். ரெண்டு பேரும் ஏராளமான மேடையில பாடியிருக்கோம். அந்தத் தொழில் ஈர்ப்பாலதான் கல்யாணம் கட்டிக்கிட்டோம்.

2009-ல எனக்கு சினிமா வாய்ப்புக் கிடைச்சது, பெரிய திருப்புமுனையா அமைஞ்சது. நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் அண்ணன் மூலமாதான் அந்த மொதல் வாய்ப்பு வந்தது.

அந்த நேரத்துல நாங்க கலை பண்பாட்டுத்துறை நிகழ்ச்சிகள்ல பாடிக்கிட்டு இருந்தோம். அது பொதிகை தொலைக்காட்சியில வெளியாகியிருக்கு. அதைப் பார்த்த சசிக்குமார் சார், ஜேம்ஸ் வசந்தன் சார் ரெண்டு பேரும், `ஜில்லா விட்டு ஜில்லா' பாட்டை நிச்சயமா என்னைத்தான் பாடவைக்கணும்னு சொல்லி வேல்முருகன் அண்ணன்கிட்ட சொல்லியிருக்காங்க. அப்புடித்தான் அந்த வாய்ப்புக் கிடைச்சது.

அன்னைக்கு திடீர்னு போன் பண்ணி ரெக்கார்டிங் வரச்சொல்லிட்டாங்க. எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை.

மேடைகள்ல பாடிருக்கேன்னாலும், படத்துக்கு எப்புடி பாடுறதுனு தெரியல. ஒரு பக்கம் சந்தோசம், ஒரு பக்கம் பதற்றம்னு இருந்தேன். அப்போவெல்லாம் வறுமைதான் வீட்டுச் சூழல். ரெக்கார்டிங் அன்னைக்குக்கூட பசியோடதான் அந்தப் பாட்டை பாடி முடிச்சேன். `வந்தனம்மா, வந்தனம்...'னுதான் ஆரம்பிச்சேன்... ஸ்டூடியோவுல இருந்த எல்லாரும் ஊக்கம் கொடுத்தாங்க. என்னோட வறுமையை நெனச்சு வைராக்கியமா பாடுனதாலேயோ என்னமோ... பாட்டு அவ்வளவு ஹிட் ஆகிடுச்சு. யூடியூப்ல ஒண்ணரை கோடி பேரு பார்த்திருக்காங்கன்னு எல்லாம் சொன்னாங்க. அதப்பத்தி எல்லாம் எனக்குத் தெரியாது. பாட்டு நல்லா இருக்குதுன்னு எல்லாரும் சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

'ஈசன்' திரைப்படப்பாடகி தஞ்சை செல்வி குடும்பம்

அதுக்கப்புறம் சுந்தர்.சி சார், தேவா சார், கண்ணன் சார், இளையராஜா அய்யானு நிறைய பேரோட வேலைபார்த்திருக்கேன். `ஈசன்' படத்துக்கு அப்புறம் `அழகர்சாமியின் குதிரை', `மனதிலே மாயம் செய்தாய்', `மதயானைக் கூட்டம்', `திறப்பு விழா'னு என்னுடைய நாலு பாட்டுக்கு அவார்டு வாங்கியிருக்கேன்.

நல்லாதான் போயிக்கிட்டு இருந்துச்சு. ஆனா, கொரோனா வாழ்க்கையவே மாத்திப் போட்டுடுச்சு. கடந்த பிப்ரவரி, மார்ச்ல நாலு வெளிநாடுகள்ல நிகழ்ச்சிகள் புக் ஆகியிருந்துச்சு.

லாக்டௌனால எல்லா நிகழ்ச்சிகளும் ரத்தாகிருச்சு. ஊருகள்லயும் திருவிழா, காதுகுத்து, கல்யாணம்னு எந்த நிகழ்ச்சிகளும் இல்ல. அதனால, எனக்கும் வீட்டுக்காரருக்கும் வேலை, வருமானம் சுத்தமா இல்லாமப்போச்சு. பாட்டுப்பாடுறத விட்டா வேற எந்த வேலையும் எங்களுக்குத் தெரியாது. ஆறு மாசம் சம்பாதிப்போம், அதைவெச்சு அடுத்த ஆறு மாசத்தை ஓட்டுவோம்னு ஓடிக்கிட்டிருந்தோம். இப்போ நெலமையே தலைகீழா மாறிருச்சு.

எங்களுக்கு ஒரு பையன். தஞ்சாவூர்ல இருந்த நாங்க, இப்போ பொழப்புக்கு வழியில்லாததால எங்க அப்பா வீட்டுல வந்து இருக்கோம். அப்பாவும் எங்களை தாங்குற நிலையில இல்ல. எங்க கஷ்டத்தைச் சொல்லி கடன் கேட்கிற இடங்கள்லயும், `சினிமாவுல பாடுறவங்க, உங்ககிட்டயா காசு இல்லை..?'னு கேட்குறாங்க. எங்க நெலமைய யாருகிட்ட சொல்றதுனு தெரியல.

ஈசன் திரைப்படப்பாடகி தஞ்சை செல்வி குடும்பம்

வட்டிக்கு மேல வட்டிக்குக் கடன் வாங்கித்தான் குடும்பத்தை நடத்திக்கிட்டு இருக்கேன். எங்கள மாதிரி கலைஞர்கள் எல்லாருமே இப்போ கடுமையா பாதிக்கப்பட்டிருக்கோம். சிலருக்கு சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலை. அரசு, நாட்டுப்புறக் கலைஞர்கள் மேல கருணை காட்டணும். சமூக இடைவெளிவிட்டு மேடை கச்சேரிகளை நடத்த அனுமதி கொடுக்கணும். ஊக்கத்தொகை கொடுத்து உதவினா, எங்களைப் போன்ற குடும்பங்களின் வறுமைக்கு உதவியா இருக்கும்" என்றவர், குரலெடுத்து ஒரு கிராமியப் பாடல் பாடுகிறார்.

அதிர்கிறது காற்று.



source https://cinema.vikatan.com/music/easan-movie-singer-thanjai-selvi-shares-how-lockdown-affected-her-earnings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக