Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

சித்தார்த்தின் கேள்வி, அபியின் தயக்கம்... அப்படி என்ன கேட்கப்போகிறாள் அபி? #VallamaiTharayo

திருமணத்துக்கு முதல் நாள் இரவு மகிழ்ச்சியாக இருந்தாலே தூக்கம் வராது. படபடப்பாக இருக்கும். அபிக்குத் தூக்கம் வராததில் ஆச்சர்யம் இல்லை. அவள் கொல்லைப்புறம் சென்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, பெரியப்பா பதற்றத்துடன் வருகிறார். ``உங்க அக்கா ஓடிப்போன மாதிரி நீயும் போயிடாதம்மா. உன் பெரியப்பா உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று காலில் விழப்போகிறார்.

அபிக்கு ஓர் அக்கா இருப்பதாகக் குழந்தைப் பருவத்திலும் காட்டப்படவில்லை. வளர்ந்த பிறகும் காட்டவில்லை. திடீரென்று அபியைச் சம்மதிக்க வைக்க ஒரு காரணத்தைத் திணித்தது போலிருக்கிறது!

Vallamai Tharayo

பெருந்தொற்று காலம் என்பதால் எளிமையான திருமணமாகக் காட்டியது நல்ல விஷயம். அனு இல்லை என்கிற வருத்தம் இருந்தாலும் அபியின் முகத்தில் கல்யாணக் களை கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது. தோழிக்கு வாழ்த்துச் சொல்லும் பொற்கொடி, ``அவசரப்பட்டுக் குழந்தை பெற்றுக்கொள்ளாதே... உன் விருப்பப்படி படிப்பை முடித்துவிட்டு பெற்றுக்கொள். இல்லைன்னா, என்னை மாதிரி கஷ்டப்படணும்” என்று தன் பெருத்த வயிற்றைக் காட்டுகிறாள். பொற்கொடி கேரக்டருக்கு ரொம்ப அழகான பொருத்தமான ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தது, இந்த சீரியலின் முக்கியமான விஷயங்களில் ஒன்று!

திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வருகிறாள் அபி. அண்ணன் அவளிடம் விடைபெறும்போது, `எந்தக் காரணத்தைக் கொண்டும் உன் சுயத்தை இழந்துவிடாதே' என்கிறான். இந்த அண்ணனை இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவராகக் காட்டுகிறார்கள். இவர் குடும்பத்தினர் எடுக்கும் முடிவுகளில் அபிக்கு ஆதரவாக நின்று, குடும்பத்தினரைத் துணிச்சலாக எதிர்த்து நிற்பவராக காட்டாமல், `ஓடிப் போய்விடு' என்று சொல்பவராகக் காட்டும்போது இடதுசாரிகள் பொறுப்பற்று இருப்பார்கள் என்று நினைக்க மாட்டார்களா?

Vallamai Tharayo

இரவில் சித்தார்த்தும் அபியும் தனியே இருக்கிறார்கள். ``நீ எதையோ என்கிட்ட ஆரம்பத்திலிருந்து சொல்ல நினைக்கிறே. ஆனா, சொல்ல மாட்டேங்கிறே. என்ன?” என்று கேட்கிறான். இவனுக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சர்யப்படும் அபி, ``உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். தப்பா நினைக்கக் கூடாது” என்கிறாள். `தப்பா நினைக்க மாட்டேன்' என்று சொன்னாலும் என்ன சொல்லப் போகிறாள் என்ற யோசனை அவன் முகத்தில் தெரிகிறது.

அந்தக் காலத்துப் பெண்களுக்குத் தனியாக மாப்பிள்ளையிடம் பேசும் வாய்ப்பு கிடைக்காது. படித்த இந்தக் காலத்துப் பெண்ணான அபி, சித்தார்த்தைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும், கேட்க வேண்டியதைக் கேட்க விடாமல் எது தடுத்தது? ஒருவேளை அவள் கேட்பதை அவன் ஏற்கவில்லை என்றால், திருமணத்துக்குப் பிறகு, கேட்டு என்ன பயன்? முதலிலேயே கேட்டிருந்தாலாவது திருமணத்தை நிறுத்தியிருக்கலாம். அது சரி, பெண்களை அவ்வளவு சுதந்திரமாகவா சிந்திக்க விடுகிறது இந்தச் சமூகம்?

அபி என்ன கேட்கப்போகிறாள்?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக