Ad

ஞாயிறு, 6 நவம்பர், 2022

``இந்தித் திணிப்பு, ஆளுநர் எதிர்ப்பு; திமுக-வின் தோல்வியை மறைப்பதற்கான கேடயம்” – கிருஷ்ணசாமி காட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில்வைத்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில்  செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து,   கோவில்பட்டி தாலுகா அலுவலகம் எதிரே தி.மு.க அரசு உயர்த்தியிருக்கும் மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அந்தக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை  மின் அளவீடு செய்யப்படும் எனக் கூறியது.

ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணசாமி

ஆனால்,  தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டணத்தை உயர்த்தியிஉக்கிறது. திராவிட மாடல் எனக்  கூறும் தி.மு.க., சொல்லில் மட்டும் இல்லாமல் செயலிலும் செய்ய வேண்டும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். மின்கட்டணத்தை மத்திய அரசின் அழுத்தம் காரணமாக உயர்த்தியிருக்கிறோம் என்ற சொத்தைக்  காரணத்தைச்  சொல்கிறது.   

ஆவினில் நடைபெறும் முறைகேடு காரணமாகவே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆவின் கொள்முதல் விலை குறித்து அரசு வெள்ளை அறிக்கைவிட வேண்டும். தி.மு.க அரசு நாளுக்கு  நாள் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறது. கனிம வளக் கொள்ளையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வரை ஈடுபட்டிருக்கிறார்கள்.  

கலந்துகொண்டவர்கள்

பழைய பென்ஷன் திட்டம், போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னை என எந்தப் பிரச்னைக்குமே தீர்வு எட்டப்படவில்லை. பிரச்னைகளை மூடி மறைக்க ஏதாவது ஒரு சாக்குப்போக்கு வேண்டும் என்பதற்காகவே இந்தி திணிக்கப்படுகிறது  என ஒரு கற்பனையை உருவாக்கினார்கள்.  இதேபோல் இந்தித் திணிப்பு, ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டையும் திமுக-வின் தோல்வியை மறைப்பதற்காகவே அது கேடயமாக எடுத்திருக்கிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/drkrishnasamy-slams-dmk-in-kovilpatti-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக