`பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே...’ என்கிற பாரதியாரின் கவிதை வரியும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்கிற விவிலிய வரியும் படிப்பதற்கும், சொல்வதற்கும், கேட்பதற்கும் இனிமையானதாக, எளிமையானதாக இருக்கக்கூடும். ஆனால் நிஜத்தில் பகை என்பது கரையான் புற்றைப் போன்றது. அதை அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் முளைத்தெழுந்துக் கொண்டேதானிருக்கும். நாளடைவில் அது கரையானை உணவெனக்கொள்ள பாம்பு குடியேறிடும் புற்றாகிவிடும். வெறும் பகை வளர்த்த புற்றுக்கே அந்த நிலையெனில், உயிர் பயத்தைத் தோற்றுவித்த, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள உருவாக்கிய பகையெனில்… ரவியின் கண்முன்னே பழைய பகை காரணமாக நிகழ்ந்த பால்ராஜின் கொலை, அத்தனை நாளும் அவனுள் ஒடுங்கிப் போயிருந்திருந்த பயத்தை வெளிக்கொணர்ந்திருந்தது.
பால்ராஜுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள எவரும் இல்லாததாலும், பழிவாங்கும் நோக்கோடு நிகழ்த்தப்பட்ட கொலை என்பதாலும், அவரின் உடல் தகனத்துக்கு சின்னத்தம்பி, ரவி தவிர்த்து இன்னும் நாலு பேர் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள். அப்போது சின்னதம்பி ரவியிடம்,
உயிரோட இருக்கப்ப கொஞ்ச நஞ்சமா பண்ணினான்... ஆனாலும் உன் விஷயத்துல அவென் ரொம்ப தெளிவா இருந்தான்.” சின்னத்தம்பி என்ன சொல்கிறான் என்பது ரவிக்குப் புரியவில்லை.
“நீ ஒவ்வொரு எடத்துல ஒடக்கு வெக்கப்பவும், உம்பின்னாடி இவென் நின்னுட்டுருந்தான் மக்கா. அதனாலதான் உங்கிட்ட அடி வாங்கின எவனுமே உங்கிட்ட நெருங்காமலே இருந்தானுவ. இப்ப இவென் இல்ல” சின்னத்தம்பியிடமிருந்து நீண்டதாக ஒரு பெருமூச்சு வெளியேறியது. “இனி கொஞ்ச ஜாக்ரதெயா இருந்துக்கோ ரெவி. ஏன்னா, உங்கப்பாவைக் கொன்னதுக்காக நீ இவெனப் பழி தீத்துட்டதா வேற ஒரு பேச்சு ஊருக்குள்ள ஓட ஆரம்பிச்சிருக்கு” என்றான்.
பயந்து வாழ்தலே தன்னுடைய இயல்பாகக்கொண்டிருந்த ரவியின் மனது சின்னத்தம்பியின் எச்சரிக்கைக்குப் பின்பாக, கால் சறுக்கி பள்ளத்தினுள் விழுபவனின் நிலையாயிற்று. மலை ஏறுவதற்குத்தான் ஒவ்வோர் அடிக்கும் ஊக்கம் என்றவொன்று தேவையாக இருக்கிறது. பள்ளத்தாக்கினுள் வீழ்வதற்கு அப்படி அல்ல, சறுக்கும் முதல் அடியே போதுமானது. அதன் பின்னர் பள்ளத்தாக்கின் வசம்தான் உருளும் உடல். அதிலிருந்து மீண்டு எழுந்து வர வேண்டுமென்றால் மலையேறத் தேவைப்படும் ஊக்கத்தைவிடவும் பலமடங்கு ஊக்கம் தேவையானதாக இருக்கிறது.
தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இனி இல்லை என்று அவன் கருதியதால், தினமும் ஒரே நேரத்தில், ஒரே வழியில் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்தான். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரத்தில், வெவ்வேறு வழியாக வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அவன் செல்லும் வழியில் யாரேனும் ஒருவர் அவனை ஒரு நிமிடம் உற்று நோக்கினாலும், அவன் அவ்விடத்திலிருந்து பயந்து ஓடலானான். வீட்டுக்கு வெளியில் என்று அல்லாமல், வீட்டினுள் இருக்கையிலும் அவன் பார்வையில் பயத்தால் உண்டாகியிருந்த எச்சரிக்கை உணர்வு மிகுந்தே இருந்தது. இயல்பாக அம்மாவின் கைதவறி பாத்திரம் விழும் சப்தம்கூட அவனைத் திடுக்கிடச் செய்தது. அவன் வீட்டினுள் இருக்கும் பெரும்பாலான சமயங்களில், வீட்டின் வாசலை ஒட்டியிருக்கும் ஜன்னல் கதவை ஒரு விரல் இடைவெளிக்குத் திறந்துவைத்து அதன் வழியே வெளியே சந்தேகப்படும்படியாக யாரேனும் தென்படுகிறார்களா என்று வேவு பார்த்தான்.
ரவியின் மனநிலை இப்படியிருக்க, விஜயாவின் மனநிலையோ “ஓன் பெரிய மவன் அங்கே ஒருத்தங்கூட சண்டையைப் போட்டு அவென் மண்டைய ஒடைச்சிட்டான் தெரியுமா” என்கிற செய்திகளும், “இப்டி ஊரெல்லாம் ஒடக்குவெச்சுட்டு அலையுதானே, ஏன் விஜயாக்கா உம்மொவன் ரெவிக்கு கொஞ்ச புத்திமதி சொல்லக் கூடாதா” என்கிற கோரிக்கைகளும் அவளுடைய காதுக்கு வருகையில், ஒருபுறம் அவன் எதிர்காலத்தை நினைத்து அவள் கவலைகொண்டாலும், தன்னுடைய மகன் முன்புபோல ஊரே அடிக்க, அடிவாங்கி அழும் பேத்தையாக இல்லையென்பதில் ஒரு சிறு திருப்திகொண்டிருந்தது. ஆனால் இன்று அவனிருக்கும் நிலையைப் பார்க்கையில், “இதுக்கிவன் ஊரெல்லாம் அடி வாங்குக பேத்தையாவே இருந்திருக்கலாம்” என்கிற எண்ணம் தலைதூக்கியது. அதனால் ஒரு முடிவோடு அவனிடம் சென்றாள்.
விஜயா தன்னை நெருங்குவதுகூடத் தெரியாமல், ரவி ஜன்னல் கதவின் சிறு இடுக்கு வழியே வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தான். “அங்க எவ நிக்குவான்னுட்டு இப்டி ஒளிச்சு கெடந்து பாத்துட்டு இருக்க” கோபமாகக் கேட்டபடியே ஜன்னல் கதவை முழுதாக அவள் திறந்தாள். ரவி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஜன்னல் வழி வந்த வெளிச்சம் ரவியின் முகத்தில் முழுவதுமாக விழுந்து, அவனுடைய பயத்தை விஜயாவுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியது.
“ஏம்ல இப்ப இப்டி பயந்து சாவுத..?” விஜயாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
ரவி மீண்டும் ஜன்னலை அடைத்துவைக்க முற்பட்டான். விஜயாவின் கை ஜன்னலை ஆவேசமாகப் பற்றியிருந்தது. ரவி மிரட்சியோடு விஜயாவைப் பார்த்தான்.
“எம்மூஞ்ச எதுக்குல பாக்க… கண்ணாடி முன்ன போய் ஒம் மொகத்தப் பாருல” என்றாள்.
“இ… இல்ல்ல்ல… ம்… மா.”
அம்மா எப்போது தன்னிடம் கடைசியாகப் பேசினாள் என்பதையே மறந்துபோயிருந்த ரவி, அவள் திடீரென்று தன்னிடம் வந்து இப்படிப் பேசுவதை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் திணறினான்.
விஜயா ஆவேசத்தில் கத்த, அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரவி தடுமாறினான்.
“நீ அந்த மனிசனுக்க பேரை காப்பாத்த அளவுக்கு வீரனாவெல்லாம் இருக்க வேணாம். கொறஞ்சது அந்த மனிசனுக்க பேரை நாசமாக்காத அளவுக்குப் பேத்தையா இல்லாம இருக்கலாம்ல... ஒன்ன மாரி ஒரு பேத்தக்குட்டிய என் வயித்ல சொமந்தெதுக்கு ஒரு ஆட்டொரலையோ இல்லை அம்மிக்கல்லெயோ சொமந்திருக்கலாம்.” விஜயா தன்னுடைய வயிற்றில் ஒருமுறை அடித்துக்கொண்டாள்.
ரவிக்கு விஜயாவிடம் பேச எதுவுமே இருக்கவில்லை. விஜயாவுக்கும் மேற்கொண்டு அவனிடம் என்ன பேசவென்றும் தெரியவில்லை. இருவருக்கும் இடையில் சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தன.
அந்தச் சில நிமிட அமைதி விஜயாவை ஒருநிலைப்படுத்தியிருக்க, அவள் நிதானமாக, “பால்ராஜு இருந்த வரெக்கும் ஒனக்கு நெழலா அவென் இருக்காங்கற நம்பிக்கெ எனக்கு இருந்துச்சு. இன்னைக்கு அவெனும் இல்லை. எனக்கும் ஒன்ன நெனச்சு பயம் இருக்கதான் செய்யுது. ஆனா நாம சாவுக வரெக்கும் யாருமே நமக்கத் தொணக்கி வர மாட்டாங்க. ஒரு கட்டத்துல நாம அவெங்களப் பிரிஞ்சுதான் ஆவணும். இனி உன் தொணைக்கி யாரும் கெடையாது.
பேச்சை ஒரு நொடி நிறுத்திவிட்டு, சுவரில் மாட்டியிருந்த தங்கசாமியின் படத்தைப் பார்த்துக்கொண்டாள். “அந்த மனிசனுக்கப் பேரைக் கெடுத்துடாத. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும். அப்புறமா ஒன் இஷ்டம்...”
திறந்திருந்த ஜன்னலின் வழி வெளியே சாலையைப் பார்த்தான். அவனுடைய கண்கள் வெளிச்சத்துக்குப் பழகியிருந்ததால், அவனுக்குக் கண்கள் கூசவில்லை.
**
“அண்ணாச்சி, அக்காக்க வீட்டுக்கு அப்பப்ப வந்து போனது…” என்று பேச்சை ஆரம்பித்த சிவா சற்றுத் தயக்கத்தோடு பேச்சை நிறுத்திக்கொள்ள, துரைமுருகன் அவனை நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பார்வை மேலே சொல்லு என்பதாக இருக்க, “நம்ம பழைய சாராய யாவாரி தங்கசாமி இருக்கார்ல... அவரோட...” அதற்கு மேற்கொண்டு பேசாமல் சிவா தயங்கி நின்றான்.
“அவனோடச் சொந்தக்காரப் பயலா?”
“இல்லண்ணாச்சி. அவரோட மூத்த பய ரெவி. அதாண்ணாச்சி ஊசி ரெவின்னு சொல்லுவானுவல்ல... அவெந்தான்” சிவாவின் உடலசைவில் வெளிப்பட்ட வெறுப்பை துரைமுருகன் கவனித்தார்.
“ஓ, அந்தச் சின்னப் பயலா....” என்று தனக்குத் தானே முணுமுணுத்தவர், டேபிளின் மேலிருந்த கோல்டு ப்ளெயின் சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துத் தன்னுடைய கட்டைவிரல் நகத்தில் தட்டி, உதட்டில் பொருத்திக்கொண்டார்.
“அவெந்தான்னு நிச்சயமா ஒனக்குத் தெரியுமா?”
“என்னண்ணாச்சி இப்படிக் கேட்டுட்டீங்க... ராவும் பவலுமா காவக்காத்து கண்டுபிடிச்சிருக்கேன்.” சிவாவிடமிருந்து பவ்யமாய் வார்த்தைகள் வெளியேறின.
“இல்லை... ஒனக்கும் அவெனுக்கும் ஏதும் மும்பகை ஏதாச்சுமிருந்து... அப்டியெல்லாம் ஒண்ணுமில்லியே?”
துரைமுருகனின் பார்வை சிவாவை ஊடுருவ, சிவா, “அதெ நான் பாத்துக்குவேன்ணாச்சி. உங்ககிட்ட கொண்டார மாட்டேன்” என்றான்.
“அப்ப பகை இருக்கு. அப்படித்தானே?”
“அதைப் பகைன்னுல்லாம் சொல்ல முடியாதுண்ணாச்சி. ஆனா கோவமிருக்கு.”
“ஹ்ம்ம்ம். சரி நீ போ... நான் பாத்துக்கறேன்.”
சரியென்று தலையசைத்துவிட்டுத் திரும்பியவன், “அண்ணாச்சி நீங்க தப்பா நெனக்கலேன்னா...” என்று இழுத்தான்.
தன்னருகிலிருந்த ஜன்னலின் வழியே கையிலிருந்த சிகரெட்டை வெளியே போட்டுவிட்டு, “ம்ம்ம் சொல்லு” என்றார்.
துரைமுருகன் ஒரு கணம் திடுக்கிட்டாலும், தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, “எப்படி சொல்லுக?” என்றார்.
“இல்லண்ணாச்சி, முன்னயே அந்தப் பய எங்கப்பனைக் கொன்னவனை நான் பழிவாங்குவேன்னு சொல்லிட்டுத்தான் திரிஞ்சான். இப்ப என்னடான்னா அக்காகிட்டயே வந்து… ஒருவேளை அவெங்க மூலமா உங்களுக்குக் குறி வெக்கிறானோன்னு ஒரு சம்சியம் (சந்தேகம்).”
ஒருவேளை இவன் சொல்வது நிஜமாக இருக்குமோ என்கிற சந்தேகம் துரைமுருகனுக்குத் தோன்றியது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சிவாவின் யூகங்களை மேலும் தெரிந்துகொள்ள வேண்டி, “அவென் சின்னப்பய” என்று நக்கலாகச் சொன்னார்.
“லிங்கண்ணனும் பிரபுண்ணெனுக்க தம்பியெ சின்னப்பயன்னுதான் விட்டுவெச்சாரு. கடேசில, உங்களுக்கே தெரியும்தானேண்ணாச்சி. எனக்குத் தோணுனதைச் சொன்னேன்” என்று ஆரம்பத்திலிருந்த பவ்யத்தைச் சிறிதும் மாற்றாமல் அவன் சொல்லி முடிக்கவும், துரைமுருகன், “எல்லாம் சரிதான். எதுக்கும் அவெம் மேல ஒரு கண்ணு நீ வெச்சுக்கோ. அப்புறமா இந்தச் சகாப் பய அவெனுக்க மும்பகைய வெச்சு பால்ராஜு கதெயெ முடிச்ச மாரி, நீயும் இவெங் கதெய முடிச்சிடாத சரியா... ஏன்னா பால்ராஜுக்கு உண்டாக்குன கதெ கணக்கா இவெஞ் சாவுக்கெல்லாம் கதெ உண்டாக்கிக்கிட்டு இருக்க முடியாது” என்றார்.
அதேநேரம் துரைமுருகனுக்குள்ளே சிவா உருட்டிவிட்டுச் சென்ற பகடை நிற்காமல் சுழல ஆரம்பித்திருந்தது.
**
அலைகள் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த சங்குத்துறைக் கடலைக் கரையில் அமர்ந்து வெறித்தபடி பார்த்திருந்த ரவிக்குள், ‘ஒனக்கான தொணையை நீதான் தேடிக்கணும்’ என்று விஜயா பேசிய பேச்சே ஓடிக்கொண்டிருந்தது. இடுப்பில் மறைத்து வைத்திருந்த பால்ராஜின் கத்தியை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.
“லே மக்கா தெவி” நாகராஜனின் குரல் கேட்டு ரவி திரும்ப, அங்கே நாகராஜன் தன்னுடைய முன்பற்களில்லாத வாயால், மிக அசிங்கமாகச் சிரித்தபடி நின்றான்.
“நல்ல ஏ கிளாஸ் கஞ்சாயெல இதுக்கு மக்கா. இந்தா அதிச்சு பாரு” என்று தன் சட்டைப் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்து அவனிடம் நீட்டினான்.
இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை வெளியே எடுத்துக்கொண்டு திரும்பினான். அங்கே அதே அசிங்கமான சிரிப்போடு நாகராஜன் நிற்க, அவன் பின்னே இன்னும் நான்கு பேர் நின்றிருந்தார்கள். ரவி தன் கையிலிருந்த கத்தியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.
(தொடரும்)
source https://www.vikatan.com/arts/literature/story-of-a-boy-nicknamed-as-oosipputtan-part-38
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக