Ad

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

தஞ்சாவூர்: ஆர்டிஓ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை! - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்

புதுக்கோட்டையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணி புரிபவர் ஜெய்சங்கர். இவருக்குச் சொந்தமான வீடு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் இருக்கிறது. இந்த நிலையில், ஆர்.டி.ஓ ஜெசங்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் வந்தது. அதையடுத்து, வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் தஞ்சாவூரில் உள்ள ஜெய்சங்கரின் வீட்டில் நேற்றைய தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் சோதனை நடத்தப்பட்ட ஆர்டிஓ வீடு

தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராஜு தலைமையில், ஆய்வாளர்கள் சரவணன், பத்மாவதி ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 7.30 மணிக்கு தொடங்கிய சோதனை பகல் கடந்தும் இரவு வரை நீண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையின்போது தங்கம், ரொக்க பணம், சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜெய்சங்கரின் வீட்டில் இருந்த நகைகளைக் கண்டு அதிகாரிகள் மிரண்டு போனதாகவும், போலீஸாரின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறியதாகவும் சொல்லப்படுகிறது. உடனடியாக நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து நகை எத்தனை பவுன் இருக்கும் என கணக்கீடு செய்திருக்கிறார்கள் அதிகாரிகள். இதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

ஆர்டிஓ கார்

இந்த சோதனையை தொடர்ந்து ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்றது. கிட்டதட்ட 12 மணி மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: தஞ்சாவூர் மாநகராட்சி: திமுக-வில் சீட் கிடைக்காத அதிருப்தி! -தேர்தலில் சுயேச்சையாக கணவன், மனைவி, மகன்



source https://www.vikatan.com/government-and-politics/crime/vigilance-raid-in-pudukottai-rtos-house-in-tanjore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக