Ad

புதன், 1 டிசம்பர், 2021

Qualcomm Snapdragon 8 Gen 1 : என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது?

அதன் புதிய ப்ளாக்ஷிப் ப்ராசஸரை ஸ்னாப்டிராகன் சம்மிட் 2021 நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது குவால்காம். புதிய ப்ராசஸருக்கு 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1' (Snapdragon 8 Gen 1) எனப் பெயரிட்டுள்ளது குவால்காம். இதுவரை தங்களுடைய ப்ராசஸர்களுக்கு மூன்று இலக்க எண்களைக் கொண்டு தான் பெயரிட்டு வந்தது குவால்காம் (குவால்காமின் முந்தைய ப்ராசஸரின் பெயர் ஸ்னாப்டிராகன் 888+).

ஆனால், இந்த முறை அனைவரும் பொதுவாகப் பின்பற்றும் ஜெனரேஷன் பெயர்களைக் கொண்டு பெயரிடும் முறையைத் தொடங்கியிருக்கிறது. குவால்காமின் இந்த முடிவு நல்ல முடிவாகவே தோன்றுகிறது. ஏனெனில் இந்த முறையில் பெயரை உச்சரிக்கும்போது அந்நியமாக இல்லாமல், நமக்குப் பழக்கமான ஒன்று போலான உணர்வை ஏற்படுகிறதுஞ. அதோடு அனைவரும் பயன்படுத்தவும் எளிதாக இருக்கிறது. புதிய ப்ராசஸரை ஓவராலாக சிறப்பான ப்ராசஸராக மேம்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது குவால்காம். என்னென்ன வசதிகளை எல்லாம் இந்தப் புதிய ப்ராசஸர் கொண்டிருக்கிறது?

Snapdragon 8 Gen 1

கனெக்டிவிட்டி:

முதன்முறையாக 4th Gen ஸ்னாப்டிராகன் X65 மோடமை (X65 Modem), புதிய சிப்பில் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது குவால்காம். முந்தைய சிப்பில் X65-ன் முன்னோடியான X60 மோடமை குவால்காம் பயன்படுத்தியிருக்கும். இந்தப் புதிய X65 மோடமால் புதிய ஸனாப்டிராகன் 8-ன் தரவிறக்கம் செய்யும் வேகம் 10 GBPS வரை இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது குவால்காம். குவால்காம் இந்த வசதியை அளித்தாலும், 10 GBPS வேகத்தில் தரவிறக்கம் செய்வதற்கான நெட்வொர்க் வசதியை இன்னும் எந்தத் தொலைத்தொடர்பு நிறுவனமும் அளிக்கவில்லை. ஆனால், இனி வரும் காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வேகத்தை மேம்படுத்த நினைத்தால், அதற்கான வசதியை தற்போதே அளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

குவால்காம் பாஸ்ட்கனெக்ட் 6900 ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியை புதிய சிப்புக்கு வழங்கியிருக்கிறது குவால்காம். இதன் மூலம் வை-பை 6 மற்றும் வை-பை 6E-ஐ புதிய சிப்பால் ஏற்றுக் கொள்ள முடியும். அதிவேக வை-பை வசதி நமக்குக் கிடைத்தாலும், அதனைக் பயன்படுத்திக் கொள்ளும் தன்மையை மொபைலின் ப்ராசஸர் கொண்டிருந்தால் தான் நம்மால் அதனைப் பயன்படுத்த முடியும். அந்த வகையில் புதிய சிப்பால் 3.6 GBPS வேகம் வரை வை-பை வசதியை ஏற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்திருக்கிறது குவால்காம்.

ப்ளூடூத்:

ப்ளூடூத் 5.2-வை புதிய சிப்பில் பயன்படுத்தியிருக்கிறது குவால்காம். இந்த ப்ளூடூத் 5.2-வோடு ப்ளூடூத் LE ஆடியோ (Bluetooth Low Energy Audio) என்ற புதிய வசதியையும் முதன் முறையாகத் தனது ப்ளாக்ஷிப் சிப்பில் வழங்குகிறது குவால்காம். இந்த LE ஆடியோ என்ற வசதியை CES 2020-யில் தான் ப்ளூடூத் SIG (Special Interest Group) என்ற உலகம் முழுவதும் உள்ள 34,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்ட கூட்டமைப்பு உருவாக்கி அறிமுகப்படுத்தியது. தற்போது நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் சாதனங்கள் எல்லாம் SBC Code-யை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. இதற்கு மாற்றாக LC3-ஐ (Low Complexity Communications Codec) ப்ளூடூத் 5.2-வில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் ஒலி தரம் தற்போது இருப்பதை விட இன்னும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது SIG கூட்டமைப்பு.

இந்த LE ஆடியோ வசதியை நாம் தற்போது பயன்படுத்த வரும் ப்ளூடூத் வசதியில் அடுத்த கட்டம் எனக் கூறலாம். தற்போது வயர்டு ஹெட்போன்களை விட வயர்லெஸ் ஹெட்போன்களைத் தான் பலரும் அதிகம் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும் போது இனி வயர்லெஸ் ஹெட்போன்களின் வரவும் பயன்பாடும் அதிகரிக்கும். அதற்கேற்ற வகையில் ப்ளூடூத் வசதியையும் மேம்படுத்த வேண்டும் அல்லவா. அப்படி ஒரு மேம்படுத்தப்பட்ட வசதி தான் LE ஆடியோ. நாம் வை-பை-ஐ ஆன் செய்தால் மற்றவர்கள் நம்முடைய டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடிகிறதல்லவா, அது போல ப்ளூடூத்தையும் ஒளிபரப்பும் (Broadcast) வசதியை அளிக்கிறது இந்த LE ஆடியோ.

ப்ளூடூத் LE ஆடியோ

அதாவது, ப்ளூடூத் ஹெட்போனை அணிந்து கொண்டு நாம் பாடல்களை ஒரு பொது இடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அப்போது ப்ளூடூத் ப்ராட்கேஸ்டை ஆன் செய்து விட்டால், LE ஆடியோ வசதி கொண்ட எந்தவொரு சாதனத்தைக் கொண்டும் நாம் கேட்பவற்றை அவர்களாலும் கேட்க முடியும். இதன் மூலம் பல்வேறு ப்ளூடூத் ஹெட்போன்களையும் ஒரே மொபைல் அல்லது லேப்டாப்பில் இணைத்துப் பயன்படுத்த முடியும். அதேபோல் ஒரே ப்ளூடூத் ஹெட்போனை டிவி, அலெக்ஸா, மொபைல் எனப் பல்வேறு சாதனங்களுடன் இணைத்தும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் பொது இடத்தில் வைத்திருக்கும் ஒரு டிவியில் வரும் பாடலை உங்களுடைய ப்ளூடூத் ஹெட்போனைக் கொண்டு கேட்க முடியும். மேலும், இந்த வெர்ஷன் குறைவான அளவு ஆற்றலையே பயன்படுத்தும், அளவிலும் சிறியதாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

AI:

7th Gen குவால்காம் AI இன்ஜினில், மிகவும் அதிக பெர்ஃபாமன்ஸ் கொண்ட மற்றும் திறம்படச் செயல்படக்கூடிய குவால்காம் ஹெக்ஸகன் ப்ராகஸரைப் பயன்படுத்தியிருக்கிறது குவால்காம். இந்த AI-யானது பல வகைகளிலும் நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் வகையில் மேம்படுத்தியிருக்கிறது குவால்காம். தெளிவான புகைப்படங்கள் எடுப்பது, புகைப்படங்களுக்கு Bokeh Effect-ஐ அளிப்பது, நம்முடைய நோட்டிபிகேஷன்களில் முக்கியமானது எது, தேவையானது என அறிந்து அதற்கேற்ப அதனை வகைப்படுத்துவது எனப் பல வகைகளிலும் இந்த AI சிறப்பான செயல்பாட்டை அளிக்கும் எனத் தெரிவித்திருக்கிறது குவால்காம். இந்த AI-யானது உடல்நலம் குறித்த தகவல்களைக் கையாள்வதற்காக சாண்ட் ஹெல்த் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது குவால்காம். எப்போதும் செயல்பாட்டிலேயே இருக்கும் வகையிலான AI வசதியைக் கொண்டிருக்கும் புதிய சிப்பானது, நம்மிடமிருந்து வரும் ஒலிக்கேற்ப நம்முடைய உடல்நிலையைக் கணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது குவால்காம். உதாரணத்திற்கு ஆஸ்துமா நோயாளி ஒருவர் இருமினால் அதற்கேற்ப கணித்துச் செயல்படும் வகையில் இதன் AI வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.

குவால்காமின் புதிய சிப்பில் இருக்கும் கேமரா வசதிகள்

கேமரா:

கேமரா பெஃர்பாமன்ஸை மேம்படுத்துவதில் கொஞ்சம் அதிகமாகவே அக்கறை காட்டியிருக்கிறது குவால்காம். ஸ்னாப்டிராகன் சைட் என்ற புதிய தொழில்நுட்பத்தை தன்னுடைய ப்ளாக்ஷிப் சிப்பில் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்திருக்கிறது குவால்காம். நொடிக்கு 3.2 GB தகவலை ப்ராசஸ் செய்யும் திறனுடன் புதிய சிப் இருக்கிறதாம். அதாவது 108 MP கேமராவில் புகைப்படம் எடுத்தால் நொடிக்கு 30 புகைப்படங்களை இந்தச் சிப்பால் எடுக்க முடியுமாம். 30 FPS-ல் 8K வீடியோவை எடுத்துக் கொண்டே 64 MP புகைப்படத்தையும் எடுக்கும் அளவுக்குத் திறனைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது குவால்காம். மேலும், 4K வீடியோவை Bokeh effect-ஓடு எடுக்கும் வசதியையும் இந்தச் சிப்பில் கொடுத்திருக்கிறது குவால்காம்.

குவால்காமின் புதிய சிப்பில் சர்ச்சைக்குரிய கேமரா அம்சம் ஒன்றும் இருப்பதாகப் புகாரளிக்கிறார்கள் டெக் ஆர்வலர்கள். எப்போதும் பயன்பாட்டிலேயே இருக்கும் வகையில் 'ஆல்வேஸ் - ஆன்' கேமரா வசதியையும் இந்த சிப்பில் கொடுத்திருக்கிறது குவால்காம். எப்போதும் கேமரா பயன்பாட்டிலேயே இருப்பது என்பது பாதுகாப்பு சர்ச்சையை ஏற்படுத்தும் விஷயம் தான். ஆனால், பாதுகாப்பு அம்சத்திற்காகவே இந்த வசதியை நாங்கள் அளித்துள்ளோம் எனக் கூறியுள்ளது குவால்காம். நாம் பயன்படுத்தினால் மட்டுமே, நம்முடைய முகம் தெரிந்தால் மட்டுமே மொபைலைப் பயன்படுத்த முடியும். வேறு முகம் தெரிந்தால் மொபைல் தானாகவே லாக் ஆகி விடும். இப்படி சில பாதுகாப்பு வசதிகளைக் கொடுப்பதற்காகவே அந்த வசதியோடு புதிய சிப்பை உருவாக்கியிருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது குவால்காம். மேலும், தேவையென்றால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையில்லை என்றால் இந்த வசதியை ஆஃப் செய்யும் வசதியையும் அளித்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்:

இதில் குவால்காம் முதல் முறையாகப் பாதுகாப்புக்காகத் தனியாக 'Trust Management என்ஜின்'-ஐ பயன்படுத்தியிருக்கிறது குவால்காம். தற்போது நம்முடைய பல ஆவணங்களை டிஜிட்டலாகவே பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். நம்முடைய ஓட்டுநர் உரிமத்தில் இருந்து ஆதார் கார்டு வரை பல ஆவணங்கள் டிஜிட்டலாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அப்படியான டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் மற்ற டிஜிட்டல் விஷயங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான புதிய முன்னெடுப்பாக ஆண்ட்ராய்ட் ரெடி SE (Android Ready Secure Element) என்ற வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள். அந்த வசதியினைக் கொண்ட முதல் சிப்பாக உருவாகியிருக்கிறது புதிய ஸ்னாப்டிராகன் 8 Gen 1. கூடுதலாக Intergrated SIM (iSIM) கார்டு வசதியையும் கொண்டிருக்கிறது இந்த புதிய சிப். இதன் மூலம் தனியாக ஒரு சிம்மின் தேவையின்றி இந்த சிப்பில் இருக்கும் iSIM-ஐ கொண்டே செல்லுலார் நெட்வொர்க்கைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்திருக்கிறது குவால்காம்.

ஸ்னாப்டிராகன் 8 Gen 1-ல் இருக்கும் சிறப்பம்சங்கள்

எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்த டிசம்பர் மாத இறுதிக்குள்ளே கூட குவால்காமின் ப்ளாக்ஷிப் சிப்பைக் கொண்டு புதிய மொபைல் போன்கள் வெளியாகலாம். அதில் முதல் மொபைலாக ஷாவ்மி 12 வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மி மட்டுமின்றி, ரியல்மீ, ஓப்போ, விவோ, ஒன்பிளஸ், ரெட்மீ மற்றும் சோனி உள்ளிட்ட பல நிறுவனங்களும் தங்களுடைய ப்ளாக்ஷிப் மாடல்களில் குவால்காமின் இந்தப் புதிய சிப்பைப் பயன்படுத்தவிருக்கின்றன.

மேற்கூறிய அம்சங்கள் அனைத்துமே, இந்த புதிய சிப்பானது எவ்வளவு திறனுடன் இருக்கிறது என்பதைக் குறிப்பிடுவதற்காக மட்டுமே. இந்த வசதிகளைப் பயன்படுத்தும் வகையிலான் ஸ்மார்ட்போன்களும், அதனையொத்த சேவைகளும் பயன்பாட்டுக்கு வரும் போது தான் முழுமையாக மேற்கூறிய வசதிகளை நாம் பயன்படுத்த முடியும். மேலும், முந்தைய சிப்பின் அப்டேட்டாகவே பல வசதிகளை புதிய சிப்பில் அளித்திருக்கிறது குவால்காம். தற்போது சந்தையில் இருக்கும் கூகுள் டென்சார் மற்றும் ஆப்பிள் A-சீரிஸ் சிப்களை விட பெர்ஃபாமன்ஸில் சிறப்பாக இருக்கிறது என்று புதிய ஸ்னாப்டிராகன் 8-க் கூற முடியாது. எனினும், இந்தப் புதிய சிப்பின் மூலமாக கடுமையாகப் போட்டியிட முயன்று கொண்டிருக்கிறது குவால்காம்.



source https://www.vikatan.com/technology/tech-news/features-in-qualcomms-new-snapdragon-8-gen-1-processor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக