ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. நான்காவது காலிறுதிப் போட்டியில் நேற்று இரவு இந்திய அணியும் பெல்ஜியமும் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் இந்திய அணி 1-0 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
ஹாக்கியைப் பொறுத்தவரைக்கும் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கிடையே எப்போதுமே பயங்கரமான ரைவல்ரி இருக்கும். 2016 ஜுனியர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பெல்ஜியமும் இந்தியாவுமே மோதியிருந்தன. இதில் இந்திய அணி 2-1 என வென்று உலகக்கோப்பையையும் கைப்பற்றியது. 2018 சீனியர் உலகக்கோப்பையில் பெல்ஜியம் கோப்பையை வென்றிருந்த போதும் இந்தியாவிற்கு எதிராக மட்டும் தோற்றிருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸிப் அரையிறுதியில் பெல்ஜியத்திடம் இந்தியா தோற்றிருந்தது. இதனால் இயல்பாகவே இரண்டு அணிகளும் மோதும் ஆட்டங்களின் மீது பெரிய எதிர்பார்ப்பு உண்டாகிவிடும். இந்த காலிறுதி போட்டிக்கும் அப்படியே!
புவனேஷ்வரின் கலிங்கா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. விவேக் தலைமையிலான இந்திய அணியில் ஃபார்வேர்ட் மனிந்தர் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக பாபி உள்ளே வந்திருந்தார்.
முதல் கால்பகுதி தொடங்கியது. முதல் 5 நிமிடங்களுக்கு பெல்ஜியமே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. பொசஷனை அவர்களிடமிருந்து பெறுவதற்கே இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தது. இந்த 5 நிமிட தடுமாற்றத்திற்கு பிறகு மெதுவாக இந்தியாவும் ஆட்டத்திற்குள் வர ஆரம்பித்தது. இதன்பிறகு, எந்த இடத்திலுமே இரண்டு அணிகளும் முழுமையாக விட்டுக் கொடுக்கவில்லை. சரிசமமாகவே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. முதல் கால்பகுதியில் கோல்கள் வரவே இல்லை. எந்த அணிக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் 0-0 என முடிவடைந்தது.
இரண்டாம் கால்பகுதி தொடங்கியதும் இந்தியாவிற்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இந்திய அணிக்காக இந்தத் தொடரில் சஞ்சய் 8 கோல்களை அடித்திருக்கிறார். இந்த 8 கோல்களில் 6 கோல்கள் பெனால்டி கார்னரில் வந்தவை.
ஸ்பெசலிஸ்ட் டிராக் ஃபிளிக்கரான சஞ்சய்தான் இந்த பெனால்டியையும் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேமாதிரியே சஞ்சய் பந்தை நிறுத்தி முன் நகர்ந்தும் வந்தார். நம்மை போன்றே பெல்ஜியம் வீரர்களும் சஞ்சய்தான் ஸ்ட்ரைக் செய்வார் என எதிர்பார்த்தனர். ஆனால், ட்விஸ்ட் கொடுத்தார். ஒரு ரவுண்ட் அடித்து பெல்ஜியமின் டிஃபண்டர்களை ஏமாற்றி பந்தை சர்தானந்த திவாரிக்கு மாற்றி விட அதை அவர் கச்சிதமாக போஸ்ட்டுக்குள் அடித்து கோலாக்கினார்.
சஞ்சய்யின் புத்திசாலித்தனத்திற்கும் திவாரியின் துல்லியமான ஷாட்டிற்கும் கிடைத்த வெற்றி இது. இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இதே கால்பகுதியில் பெல்ஜியத்திற்கும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை பெல்ஜியமின் டிராக் ஃப்ளிக்கர் வைடாக அடித்து சொதப்பினார்.
இந்தியாவின் முன்னிலையோடு முதல் பாதி முடிந்தது. மூன்றாம் கால்பகுதியிலும் இரண்டு அணிகளும் முட்டி மோதி கோலுக்கு முயன்றனர். ஆனால், ஒரு கோல் கூட வரவில்லை.
பரபரப்பான கடைசி 15 நிமிடங்கள் தொடங்கின. அந்த ஒரு கோலுக்காக பெல்ஜியம் கடுமையாக முயன்றது. இந்த கடைசி கால்பகுதியில் மட்டும் பெல்ஜியத்திற்கு இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. முதல் வாய்ப்பை ஸ்டாக்ப்ரக்ஸ் பெற்றுக் கொடுத்தார்.
ஸ்டாக்ப்ரக்ஸின் அண்ணன் கிரகரி 2016 ஜுனியர் உலகக்கோப்பையில் ஆடியவர். இந்தியாவுடன் அப்போது தோற்றதற்கு பழிவாங்கியே ஆக வேண்டும் என தீர்க்கமாக இருப்பவர். 'இந்தியா தோற்றே ஆக வேண்டும். அதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்' என அண்ணன் க்ரிகோரி ஸ்டாக்ப்ரக்ஸிற்கு போட்டிக்கு முன்பாக மெசேஜ் அனுப்பியிருந்தார்.
அதற்கேற்ப முக்கியமான கட்டத்தில் பெல்ஜியத்திற்கு ஒரு பெனால்டி வாய்ப்பை பெற்றுக்கொடுத்தார். ஆனால், இந்தியாவின் கோல் கீப்பரான பவன் இந்த பெனால்டியை மிக அருமையாகத் தடுத்தார்.
இதன்பிறகு, கடைசி சில நிமிடங்களில் பெல்ஜியம் வெறியோடு அட்டாக் செய்தது. இந்திய அணியின் யஷ்தீப் சிவாச்சுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. அவர் 5 நிமிடங்கள் வெளியே உட்கார வேண்டியிருந்தது. கோல் அடித்தே ஆக வேண்டும் என்பதால் கோல் கீப்பரே இல்லாமல் கூடுதல் வீரருடன் பெல்ஜியம் ஆட ஆரம்பித்தது.
கடைசி 2 நிமிடங்கள் மீதம் இருக்கையில் பெல்ஜியத்திற்கு மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. போட்டி உச்சக்கட்ட பரபரப்பை அடைந்தது. ஆனால், இந்த வாய்ப்பையும் இந்திய கோல் கீப்பர் பவன் அற்புதமாக தடுத்துக் கொடுத்தார்.
கடைசி 15 நிமிடங்கள் முழுவதுமே பெல்ஜியமின் அத்தனை வீரர்களுக்கும் இந்திய கோல் கீப்பர் பவனுக்கும் இடையிலான ஆட்டமாகவே இருந்தது. இரண்டு பெனால்டி வாய்ப்புகள் வட்டத்திற்குள் சில கிராஸ்கள் என அத்தனையையும் தடுத்து கொடுத்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஜெர்மனிக்கு எதிரான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் கடைசி சில நிமிடங்களில் ஸ்ரீஜேஷும் இப்படித்தான் அசாத்தியமாக சில சேவ்களை செய்திருப்பார்.
ஸ்ரீஜேஷின் அந்த தடுப்பு அரணே இந்தியாவிற்கு வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது. பவனின் பெர்ஃபாமன்ஸ் அந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியையும் ஸ்ரீஜேஷையும் ஞாபகப்படுத்திவிட்டது.
ஒரு வழியாக 90 நிமிடங்கள் முடிந்தது. இந்தியா 1-0 என பெல்ஜியமை வீழ்த்தியது. அரையிறுதிக்கும் முன்னேறியது. அரையிறுதியில் நாளை ஜெர்மனியை எதிர்கொள்ளவிருக்கிறது.
பெல்ஜியமின் உடைக்க முடியாத டிஃபன்ஸிற்கும் இந்தியாவின் உத்வேகமிக்க அட்டாக்கிற்கும் இடையேயான போட்டியாகவே இது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 21 வது நிமிடத்தில் இந்தியா கோல் அடித்த பிறகு 39 நிமிடங்களுக்கு அந்த ஒரு கோலை வைத்துக் கொண்டு டிஃபண்ட் செய்திருக்கிறது. ஹாக்கியில் ஒரு கோல் முன்னிலையெல்லாம் ஒரு விஷயமே இல்லை. கடைசி நிமிடத்தில் ஒரு பெனால்டி கார்னரில் எல்லாமே மாறிவிடும். ஆனால், இந்தியா அப்படி நிகழவிடாமல் தடுத்தது. இந்தியாவின் பலவீனமாக கூறப்பட்ட விஷயமே அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
source https://sports.vikatan.com/hockey/junior-wc-hockey-india-defeated-belgium-to-qualify-for-semi-finals
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக