பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 14-வது மேட்ச் டே, 'மிட்வீக்' போட்டிகளாக கடந்த இரு நாள்களாக நடந்து வருகிறது. புள்ளிப் பட்டியலில் டாப் 3 இடங்களில் இருக்கும் செல்சீ, மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் வெற்றிகளைப் பெற்று தங்கள் இடங்களைத் தக்கவைத்திருக்கின்றன. 14 போட்டிகளில் 33 புள்ளிகளோடு தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது செல்சீ. லிவர்பூல் வீரர் சலாவின் கோல் மழையும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எவர்டன் அணிக்கெதிராக 2 கோல்கள் அடித்து தன் கோல் கணக்கை 13-ஆக உயர்த்தியிருக்கிறார் அவர்.
கடைசி நிமிட கோல்கள்
நேற்று அதிகாலை நடந்த நியூகாசிள் யுனைடட் vs நார்விச் சிட்டி போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. 9-வது நிமிடத்திலேயே நியூகாசிள் வீரர் சியரன் கிளார்க் ரெட் கார்ட் பெற்றிருந்த போதும், 10 வீரர்களை வைத்துக்கொண்டு சமாளித்தது அந்த அணி. காலம் வில்சன் அடித்த பெனால்டி ஒருகட்டத்தில் அவர்களை வெற்றியை நோக்கியே கொண்டு சென்றது. ஆனால், 79-வது நிமிடத்தில் டீமு புக்கி கோலடித்து நார்விச்சுக்கு 1 புள்ளியைப் பெற்றுக்கொடுத்தார். அதேசமயம் இன்னொரு கடைசி கட்ட கோல், லீட்ஸ் யுனைடடுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில் கிறிஸ்டல் பேலஸ் வீரர் மார்க் குஹி ஹேண்ட் பால் செய்ய, கிடைத்த பெனால்டியை கோலாக்கினார் ரஃபினியா.
ஆறில் மூன்று டிரா
இன்று நடந்த 6 போட்டிகளில் மூன்று டிராவில் முடிந்தன. சௌதாம்ப்டன் vs லெஸ்டர் சிட்டி ஆட்டம் 2-2 என முடிந்தது. சௌதாம்ப்டன் சார்பில் யான் பெட்னரக், சே ஆடம்ஸ் ஆகியோர் முதல் பாதியில் கோல்கள் அடித்தனர். பிரண்டன் ரோட்ஜர்ஸின் அணிக்கு ஜானி எவான்ஸ் முதல் பாதியிலும், ஜேம்ஸ் மாடிசன் இரண்டாம் பாதியிலும் கோலடித்தனர். சாம்பியன்ஸ் லீக் இடத்துக்குப் போட்டியிடும் என்று கருதப்பட்ட லெஸ்டர், மோசமான டிஃபன்ஸின் விளைவாக இப்போது எட்டாவது இடத்தில் இருக்கிறது. நாளைய இரு போட்டிகள் முடிந்தால், பத்தாவது இடத்திற்குக்கூட தள்ளப்படலாம்.
வெஸ்ட் ஹாம் யுனைடட், பிரைட்டன் யுனைடட் அணிகளுக்கு எதிரான போட்டி 1-1 என முடிந்தது. தாமஸ் சூசக் ஐந்தாவது நிமிடத்தில் கோலடித்து வெஸ்ட் ஹாமுக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். அந்த அணி வெற்றியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, 89-வது நிமிடத்தில் கோலடித்து பிரைட்டனுக்கு 1 புள்ளியைப் பெற்றுக்கொடுத்தார் நீல் மாபே. தொடர்ந்து மூன்றாவது போட்டியாக வெற்றி பெறத் தவறியிருக்கிறது வெஸ்ட் ஹாம். வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் vs பர்ன்லி ஆட்டம் 0-0 என முடிந்தது.
ரசிகருக்காகத் தடைபட்ட ஆட்டம்
வாட்ஃபோர்ட், செல்சீ அணிகள் விகராஜ் ரோட் மைதானத்தில் மோதின. 13-வது நிமிடத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. திடீரென ஒரு ரசிகருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், வீரர்களும் போட்டியை நிறுத்தினர். இரு அணியின் மருத்துவர்களும் விரைந்து சென்று அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தனர். அதனால், ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட்டது. அதன்பிறகு தொடங்கிய போட்டியில், மேசன் மவுன்ட் அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றது செல்சீ.
43-வது நிமிடத்தில் செல்சீ நடுகள வீரர் ரூபென் லோஃப்டஸ் சீக் செய்த தவறைப் பயன்படுத்தி எம்மானுவேல் டென்னிஸ் கோலடித்தார். தொடர்ந்து கோலடிக்க முயற்சி செய்த செல்சீக்கு, ஹகிம் ஜியெச் மூலம் மீண்டும் முன்னிலை கிடைத்தது. அதனால் 1-2 என வெற்றி பெற்றது செல்சீ. ரீஸ் ஜேம்ஸ், பென் சில்வெல், என்கோலோ கான்டே, ஜார்ஜினியோ, ரொமேலு லுகாகு என பல முன்னணி வீரர்கள் காயத்தால் ஸ்டார்டிங் லெவனில் இடம்பெறாதபோதும் வெற்றியைப் பதிவு செய்துவிட்டது அந்த அணி. இதுவரை விளையாடிய 14 பிரீமியர் லீக் போட்டிகளில் பத்தில் வென்றிருக்கிறது.
பெர்னார்டோ சில்வா = கெவின் டி புருய்னா
மான்செஸ்டர் சிட்டி அணியின் ஸ்டார் பிளேயர் கெவின் டி புருய்னா இந்த சீசனில் பெரிதாக விளையாடவில்லை. தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டுவருகிறார். ஆனால், அவர் இடத்தில் இருந்து அனைத்தையும் சிறப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார் பெர்னார்டோ சில்வா. ஆஸ்டன் விலா அணியுடனான போட்டியில் கோலடித்து அசத்தினார் அவர். இந்த சீசனில் அவர் அடிக்கும் ஐந்தாவது கோல் இது. டிஃபண்டர் ரூபன் டியஸும் கோலடிக்க, முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது சிட்டி. இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆஸ்டன் விலா ஸ்டிரைக்கர் ஆலி வாட்கின்ஸ் கோலடித்தார். ஆனால், அதன்பிறகு இரண்டு அணிகளும் கோலடிக்கவில்லை. இறுதியில் 2-1 என வெற்றி பெற்றது மான்செஸ்டர் சிட்டி. அந்த அணியின் பயிற்சியாளர் பெப் கார்டியோலாவுக்கு இது 150-வது பிரீமியர் லீக் வெற்றி.
தொடரும் சலாவின் விஸ்வரூபம்!
எவர்டன், லிவர்பூல் அணிகள் மோதிய மெர்ஸிசைட் டெர்பியில் 4-1 என அபார வெற்றி பெற்றது லிவர்பூல். கேப்டன் ஜோர்டன் ஹெண்டர்சன் ஒன்பதாவது நிமிடத்திலேயே கோலடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். பத்து நிமிடங்கள் கழித்து முகமது சலா கோலடிக்கு அசிஸ்டும் செய்தார் அவர். 38-வது நிமிடத்தில் டெமாராய் கிரே கோலடித்து எவர்டன் அணிக்கு கொஞ்சம் உயிரளித்தார். ஆனால், இரண்டாவது பாதியில் முகமது சலா ஒரு கோலும், டியோகா ஜோடா ஒரு கோலும் அடித்து லிவர்பூலுக்கு மாபெரும் டெர்பி வெற்றியைப் பரிசளித்தனர். இதுவரை இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 13 கோல்கள் அடித்திருக்கிறார் சலா. அதுபோக, 8 அசிஸ்ட்கள் வேறு!
நாளை அதிகாலை நடக்கும் போட்டிகள்: டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் vs பிரென்ட்ஃபோர்ட்; மான்செஸ்டர் யுனைடட் vs ஆர்செனல்
source https://sports.vikatan.com/football/premier-league-gameweek-14-round-up
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக