பெட்ரோலிய தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காகவும், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்திய அரசாங்கம் தனது கையிருப்பிலிருக்கும் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வெளியில் எடுக்க முடிவு செய்திருக்கிறது. சர்வதேச அளவில் நிகழ்ந்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் மாற்றுவழியாக, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் கையிருப்பிலிருக்கும் குறிப்பிட்ட அளவு பெட்ரோலியத்தை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100 கடந்து விற்பனை செய்யப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் ஓரளவுக்கு வரியைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும், பெட்ரோல், டீசலின் விலை நாளுக்குநாள் எகிறிக்கொண்டுதான் செல்கிறது. இதற்கு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் முக்கியக் காரணமாக இருக்கிறது.
Also Read: பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகள் எவ்வளவு? | Doubt of Common Man
ஒபெக் நாடுகள்:-
கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் முற்றிலுமாக முடங்கிப்போனது. போக்குவரத்து, தொழிற்சாலைகள் என அனைத்தும் தடைப்பட்டன. உலக நாடுகளின் கச்சா எண்ணெய் பயன்பாடு கணிசமாகக் குறைந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதியை உலகநாடுகளும் வெகுவாக குறைத்துக்கொண்டன. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, வரலாறு காணாத அளவுக்கு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதன்காரணமாக, பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான (OPEC - Organization of the Petroleum Exporting Countries) ஒபெக், உலகச்சூழலுக்கு தகுந்தாற்போல கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டது.
இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. உலகநாடுகளின் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்திக்கொள்ளப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றன. போக்குவரத்து, தொழிற்சாலைகள் என அனைத்தும் மீண்டும் செயல்படத்தொடங்க, இயக்கத்துக்கு மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் தேவையும் வழக்கம்போல அதிகரித்தது.
ஆனால், சூழலுக்கு ஏற்றாற்போல, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய ஒபெக் கூட்டமைப்பு நாடுகள் மிகவும் குறைந்த அளவு மட்டுமே உற்பத்தியை அதிகப்படுத்தின. இதனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்தது. பெட்ரோலிய இறக்குமதி நாடுகளுக்கு, தேவைக்கும் குறைவான அளவு கச்சா எண்ணெயை, மிக அதிக விலைகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.
ஒபெக்கிடம் உலக நாடுகளின் கோரிக்கை:-
இந்த நிலையில், பெட்ரோல் இறக்குமதியை அதிகளவு நம்பியிருக்கும் நாடுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒபெக் கூட்டமைப்பிடம், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டன. ஆனால், ஒபெக் கூட்டமைப்பு நாடுகள் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டன. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்குச் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்வதேசச் சந்தையில் அதன்விலையும் தொடர்ந்து உயர்ந்தது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடுகளில், பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துகொண்டே சென்றது.
அமெரிக்காவின் வேண்டுகோள்:-
கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு மாற்றுவழியைத்தேடிய அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் ஆலோசனை நடத்தியது. பின்னர், `அதிகரித்துக்கொண்டிருக்கும் விலையைக் கட்டுப்படுத்தவேண்டுமென்றால் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் தங்களிடம் கையிருப்பிலிருக்கும் கச்சா எண்ணெயை விடுவிக்கவேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தது. அதுமட்டுமல்லாமல், தங்களிடம் கையிருப்பிலிருக்கும் கச்சா எண்ணெயில் , 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை விடுவிப்பதாகவும் அமெரிக்கா அதிரடியாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவின் வேண்டுகோளை ஜப்பான் ஏற்றுக்கொண்டது. சீனா விரைவில் ஆலோசனை செய்து முடிவெடுப்பதாகக் கூறியது. இந்த நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்தியாவும் தனது கையிருப்பிலிருக்கும் கச்சா எண்ணெயை விடுவிக்க முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மத்திய அரசின் அறிக்கை:-
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``கச்சா எண்ணெய்யின் விலை நியாயமானதாகவும், பொறுப்பானதாகவும் சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்பட வேண்டும் என இந்தியா உறுதியாக நம்புகிறது. ஆனால், கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகள், தேவையைவிட மிகக்குறைவான அளவில் கச்சா எண்ணெயை உற்பத்திசெய்கிறது. இப்படி, செயற்கையான முறையில் தேவையை அதிகரித்து, விலையை உயர்த்தி விநியோகிப்பதால், கடுமையான எதிர்மறை விளைவுகள் ஏற்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்திய அரசின் கச்சா எண்ணெய் கையிருப்பிலிருந்து 50 லட்சம் பேரல்களை விடுவிக்க முடிவுசெய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் கையிருப்பு:-
இந்தியாவில் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளின் மூன்று இடங்களில் நிலத்துக்கடியில், அவசர தேவைகளுக்காகக் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மொத்தமாக 3.8 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சேகரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றிலிருந்து தற்போது 50 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் விடுவிக்கப்பட இருக்கிறது. இந்த பணி இன்னும், ஒரு வாரத்திலிருந்து பத்து நாள்களுக்குள் தொடங்கும் என மத்திய அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் இது முதல்முறை:-
நாட்டின் பாதுகாப்பு போன்ற அவசரக்கால தேவைக்காக, இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கச்சா எண்ணெயை, இதுபோன்று மாற்றுத் தேவைக்காக இந்திய அரசாங்கம் விடுப்பது இதுவே முதல்முறை. இப்படி, கச்சா எண்ணெயை இருப்பிலிருந்து பொதுப்பயன்பாட்டுக்கு விடுவதன்மூலம், கச்சா எண்ணெய் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என இந்தியா போன்ற, எண்ணெய் இறக்குமதியைப் பெருமளவு சார்ந்திருக்கும் இதர நாடுகள் நம்புகின்றன. உலக அளவில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றாம் இடம் வகிக்கிறது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
Also Read: `குறைக்கப்படுமா வாட் வரி?!’ - பெட்ரோல் விலை அரசியலை திமுக-வுக்கு எதிராக திருப்பும் பாஜக, அதிமுக!
source https://www.vikatan.com/government-and-politics/politics/why-india-and-us-are-releasing-their-oil-reserves
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக