Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

நீலகிரி: பொக்லைன் இயந்திரத்துக்கு போர்வை; மலையைக் குடையும் காட்டேஜ் நிர்வாகம்! -பின்னணி என்ன?

நாட்டின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட நீலகிரி பல்லுயிர் பெருக்க மண்டலம், தென்னிந்தியாவின் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அரியவகை விலங்குகள், பறவைகள் தாவரங்கள் போன்றவற்றின் கடைசிப் புகலிடமாக விளங்கி வரக்கூடிய இந்த மலைத்தொடர்களில் அதிகரித்துவரும் மக்கள் தொகைப் பெருக்கம், வளர்ச்சிப் பணிகள், காடழிப்பு, பெருகி வரும் கட்டுமானங்கள் போன்ற பல காரணிகளால் சூழலியலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

போர்வை போர்த்தி இயக்கப்படும் பொக்லைன்

அதிலும் குறிப்பாக நீலகிரி மலையில் கட்டுப்பாடுகள் இன்றி இரவு பகலாக மலைகளைக் குடைந்து வந்த ஜே.சி.பி மற்றும் பொக்லைன் இயந்திரங்களால் நில அமைப்பியலில் மாற்றம் செய்யப்பட்டு பெரிய அளவிலான நிலச்சரிவு மற்றும் மண் அரிப்பு அபாயம் ஏற்பட்டு வந்தன. இதனை கருத்தில் கொண்டே நீலகிரியின் முன்னாள் ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா, ஜே.சி.பி, பொக்லைன் இயந்திரங்களை இயக்க தடை விதித்தார். அனுமதி வழங்கும் முறைகளையும் கடுமையாக்கினார். இருப்பினும் சொகுசு விடுதிகளுக்காக மலைகளில் தனியார் சாலைகள் அமைக்க சட்டவிரோதமாக பல இடங்களில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும் மினி பொக்லைன் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு அதனைக் கொண்டு மலைகளைக் குடைந்து வருகின்றனர்.

Also Read: இடைவிடாத மழை; அடுத்தடுத்து விழும் மரங்கள் - நிலச்சரிவு அபாயத்தில் நீலகிரி!

இந்த நிலையில், தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட அதிகரட்டி பேரூராட்சி நெடிகாடு பகுதியில் கட்டப்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதி ஒன்றுக்கு சாலை அமைப்பதற்காக மினி பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் உள்ளூர் மக்களின் பார்வையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது பிளாஸ்டிக் தார்பாலினைக் கொண்டு போர்வையைப் போல போர்த்தி மறைத்து இயக்கி வந்தனர். இந்தச் செயல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது.

போர்வை போர்த்தி இயக்கப்படும் பொக்லைன்

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஊட்டி ஜனார்த்தனன், "நீலகிரியின் இயற்கையை பாதுகாக்க அரசு பல தடைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தாலும், அவற்றை மீறுவதற்கும் பேராசைக் கொண்ட சில அரசு அதிகாரிகளே தனியாருக்கு சாதகமா இருக்கிறார்கள். ஊழல் அதிகாரிகளிடம் பணம் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் தான் இந்த செயல்‌. தனியாருக்கு ஆதரவாக செயல்பட்டு இயற்கையை செயலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கடுமையாக்க வேண்டும்" என்றார் கொதிப்புடன்.

இந்த விவகாரம் குறித்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினியிடம் பேசினோம், "ஒரு சில இடங்களில் மினி பொக்லைன் இயந்திரத்தை இயக்க அனுமதி கொடுத்திருக்கிறோம். குறிப்பிட்ட அந்த பகுதிக்கு அனுமதி இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறோம். விதி மீறல் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/illegal-construction-controversy-near-cunoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக