Ad

வெள்ளி, 26 நவம்பர், 2021

கரூர்: ஆற்றை கடந்து சுடுகாட்டுக்கு இறுதிப்பயணம்! - புலம்பும் மக்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் கல்லடை ஊராட்சியில் வரும் மேல வெளியூரில் இறந்த சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்ய ஒரு சரியான பாதை இல்லாமல், ஆற்று வழியே கடந்து செல்லும் அவல நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

ஆற்றை கடந்து இறுதியாத்திரை

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது அதிக மழை பெய்து ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் சூழ்நிலையில், ஆற்றுக்குள் இறங்கி சடலத்தை எடுத்துச் செல்லும் ஆபத்தான நிலை உள்ளதாக அந்த பகுதி மக்கள் புலம்புகின்றனர். மேலும், அவ்வாறு ஆற்றுக்குள் இறங்கி செல்லும் பொழுது ஆட்களை இழுத்துச்செல்லும் அபாயமும், ஆபத்தும் உள்ளதாக மக்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

ஆற்றை கடந்து இறுதியாத்திரை

இதுகுறித்து பேசிய மக்கள், "கல்லடை குளத்திலிருந்து வரும் தண்ணீர் மேலேவெளியூரில் உள்ள காட்டு வாய்க்கால் வழியாக, பேரூர் குளத்தை அடைந்து, அங்கிருந்து வாய்க்காலை சென்றடையும். மேலவெளியூர் கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. அதில், சுமார் 400 பேர் வசித்து வருகிறோம். எங்களுக்கென்று தனியாக மயானம் இல்லை. எங்க கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளாக இதே நிலையில் வாய்க்காலில் இறங்கி சுடுகாட்டுப் பாதையை கடக்க வேண்டியுள்ளது. அவ்வாறு அங்கு கடந்து சென்ற பிறகு, அங்கு சடலத்தை எரிப்பதற்கு அல்லது புதைப்பதற்கு எரி மேடையோ அல்லது மண்டபமோ என்று எந்தவித வசதியும் அங்கு இல்லை. இந்த சூழ்நிலையில், கல்லடை கிராமம், மேலே வெளியூரைச் சேர்ந்த அமிர்தம் என்பவர் இயற்கை எய்தினார். அவரின் சடலத்தை எடுத்துக்கொண்டு நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லும் வழியில், வாய்க்காலை கடந்து செல்ல ரொம்ப சிரமப்பட்டோம். அந்த வாய்க்காலில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகிறது. அந்த தண்ணீருக்குள் இறங்கி சென்று அவரை நல்லடக்கம் செய்தோம். இப்படி மழைகாலத்தில் ஒவ்வொரு முறையும்ஆபத்தான நிலையில் நாங்கஆற்றை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே, அரசு இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுடுகாட்டிற்கு செல்வதற்கு சரியான சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். வாய்க்காலை கடப்பதற்கு பாலம் ஒன்று அமைத்து கொடுக்க வேண்டும். எங்க கிராமதுக்கு சுடுகாடு அமைத்து தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/for-final-rituals-peoples-are-crossing-the-river-in-dangerous-way

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக