Ad

ஞாயிறு, 28 நவம்பர், 2021

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எப்படி உள்ளது?! - விரிவான அலசல்

தமிழகத்தில் சமீப காலமாக நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறதா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருக்கிறது. ஆளுங்கட்சி பிரமுகர்கள் அத்துமீறி நடந்துகொள்வது, சிறுவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது என சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், காவல் நிலையங்களில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

துப்பாக்கி முனையில் கைதுசெய்த போலீஸ்

போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள், இளைஞர்கள், செயின் பறிப்பு, ஆடு திருடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு சிறைச்சாலை, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளுக்கு போய்வரும்போது சமூகத்தில் சர்வசாதாரணம் என்பது போன்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்கள், பலே ஆசாமிகளுடன் தொடர்பு ஏற்பட்டு, க்ரைம் நெட் வொர்க்கில் இணைகிறார்கள். அங்கு, கூலிப்படையாக செயல்பட அனைத்துவித பயிற்சிகளையும் முடித்த பின்னர் கிரிமினல்களாக வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கடந்த சில நாள்களில் மட்டும் தமிழகத்தை அதிரவைத்த குற்றச்சம்பவங்கள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்:-

வேலூர்:

வேலூரில் கட்டாக்கத்தியுடன் பைக்கில் பிஸியான ரோட்டில் மூன்று பேர்வந்திருக்கிறார்கள். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இருவர். 20 வயதுக்காரர் ஒருவர். சாலையோரம் பச்சைக்குத்திக் கொண்டிருந்தவரிடம் இந்த பைக் ஆசாமிகள் மாமூல் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அதை எதேச்சையாக அந்த பக்கம் காரில் வந்த மாவட்ட எஸ்.பி செல்வகுமார் பார்த்துவிட்டார். அவரைப் பார்த்ததும், பைக் ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். அவரும் அவர்களை விரட்டிப்பிடித்திருக்கிறார்.

வேலூர்

இதே வேலூரில், கஞ்சா போதைக்கு அடிமையான 17,18 மற்றும் 19 வயதுடைய மூன்று பேர், பெண் தகராறில் ஒரு இளைஞரை கொன்று புதைத்திருக்கின்றனர். அதேபோல, முன்விரோதம் காரணமாக 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆறு பேர், இளைஞர்கள் 2 பேரை படுகொலை செய்து உடலை எரித்து பாலாற்றில் வீசியிருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்து 15 நாள்களுக்கு மேலாகி விட்ட நிலையில், அந்த உடல்களை இன்னும் போலீஸ் கைப்பற்றவில்லையாம்.

தாம்பரம்:

தாம்பரத்தில் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார் சந்தேகத்தின் பேரில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர் பேன்ட்டில் பெரிய சைஸ் பட்டாக்கத்தியை மறைத்து வைத்திருந்தாராம். அதை போலீஸார் கைப்பற்றும் காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரல் ஆகிவருகின்றன.

மதுரை:

மதுரையிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து ஒன்றின் டிரைவரால், போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த தனியார் வாகனத்துக்கு வழி கொடுக்கமுடியவில்லை. அதனால், ஆத்திரமடைந்த கார் டிரைவர் அரசு பஸ்ஸை முந்தி சென்று மறித்து அரசு பேருந்து டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கி கையில் ரத்தக்காயம் ஏற்படுத்தியிருக்கிறார். அரசு பேருந்து கழக ஒட்டுநர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில்தான் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் பில்லா ஜெகன்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளரும், தி.மு.க ஒன்றிய பொறுப்பாளருமான ஒருவர், அரசு மருத்துவ கல்லூரி பல் டாக்டரை காரில் கடத்தி சென்று தோட்டத்தில் கட்டி வைத்து அரிவாள், உருட்டுக்கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதுதொடர்பாக, போலீஸார் அந்த தி.மு.க ஒன்றிய செயலாளரை கைது செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு, இதே அமைச்சரின் உதவியாளர் ஒருவர் டிராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்துவிட்டு, பிறகு மன்னிப்பு கேட்டார். அமைச்சர் பெயரைச் சொல்லி, இன்னொரு பிரமுகர் அரசு சுற்றுலா மாளிகையில் அறைகேட்டு கலாட்டா செய்து அங்கிருந்த அரசு ஊழியரை தாக்கினார்.

* கரூர்:

கரூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஏன் அவரை குறிவைத்து மோதிக்கொன்றார்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

* திருச்சி:

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்.எஸ்.ஐ பூமிநாதனை ஆடு திருடும் கும்பலை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் நான்கு பேர், கொடூரமாக வெட்டிக்கொன்றனர்.

இப்படியாக கடந்த சில நாள்களில் மட்டும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் அரங்கேறிய சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் என்ன? என்று பல்வேறு தரப்பினரை விசாரித்தோம்!

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக நம்மிடம் பேசுகையில், ``திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆடு வளர்ப்பவர்கள் அவற்றை இரவில் வீடுகளில் கட்டி வைக்கமாட்டார்கள். சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். இளஞ்சூடு இருக்கும் தார் ரோடுகளில் அவை படுத்திருக்கும். ஆடுகளை குறிவைத்து திருடும் கும்பலை சேர்ந்த இளைஞர்கள் பைக்கில் வந்து அள்ளிப்போட்டுக்கொண்டு தப்பிவிடுவார்கள். குறிப்பிட்ட சில கசாப்பு கடைகளில் ஒரு ஆட்டை ரூ.2000-க்கு விற்றுவிடுவார்கள். ஆடுகளை சந்தையில் வாங்கினால் விலை மிக அதிகம். கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் அன்றாட ஊதாரி செலவுக்காகவும் ஆடுகளை திருடுகிறார்கள். போலீஸாரிடம் புகார் போனால், எங்கே போய் ஆடுகளை கண்டுபிடிப்பார்கள். யாராவது மாட்டினால் அவர்களை விடச் சொல்லி அரசியல் அழுத்தம் வரும்'' என்றார்.

மத்திய மாவட்டங்களில், 12 வயதிலிருந்து 18 வயது வரையிலான சிறுவர்களை கஞ்சா, அபின் போதைக்கு அடிமையாக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதும், போதைப்பொருள்களை பைக்கில் கடத்துவதும் என கூலிப்படையினர் அவர்களை தவறான வழியில் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

போதை பொருள்

இதற்கிடையே, நவம்பர் 24-ம் தேதியன்று தமிழக அரசு புதிய அரசு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை அவர்களின் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மத மோதல் ஜாதி மோதல், அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாதிரி பல்வேறு காலகட்டங்களில் கைதிகள் விடுவிப்பது நடந்திருந்தாலும், தற்போதைய தி.மு.கழக அரசு எப்படி இந்த முடிவை செயல்படுத்தப்போகிறது? என்று எதிர்க்கட்சியினர் காத்திருக்கின்றனர்.

Also Read: வழிதவறிய மற்றொரு காவலர்; அரை மணி நேர தாமதம் - ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ; நடந்தது என்ன?

மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனரும் வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் பேசுகையில், ``சிறுவர்கள் சினிமாவில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளை பார்த்து தடம்மாறுகிறார்கள். என்னிடம் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அழைத்துவந்தார்கள். பட்டாக்கத்தி ஒன்றை அவன் வைத்திருந்தானாம். போதைக்கு அடிமையானவன். நான் அந்த மாணவனின் பெற்றோரிடம் பேசினேன். பள்ளி ஆசிரியர்களிடமும் பேசினேன். பிறகு, அந்த மாணவனிடம் பேசியபோது, தவறான சகவாசத்தால் இப்படி ஆகிவிட்டேன். திருந்திவிடுகிறேன் என்று அழுதான். அவனை சட்டப்படி பார்த்தால், போலீஸுல் ஒப்படைத்திருக்கவேண்டும்.

ஹென்றி டிபேன்

அப்படி செய்திருந்தால் அவன் பயங்கர கிரிமினலாக மாறிவிட வாய்ப்பு உண்டு. அதை யோசித்த நான் கவுன்சிலிங் செய்து அனுப்பினேன். பள்ளி தரப்பில் ஒரு வாரம் சஸ்பெண்டு மட்டும் செய்தார்கள். வீட்டில் நல்ல அரவணைப்பையும், கண்காணிப்பையும் தரச் சொன்னேன். இப்போது அவன் மனம்திருந்தி நல்லபடியாக நடந்து வருகிறான். க்ரைம் சம்பவங்களில் தெரியாமல் நுழையும் மாணவர்கள், இளைஞர்களை சட்டப்படி தண்டிக்காமல் கவுன்சிலிங் செய்தால் நிச்சியம் அவர்கள் திருந்துவார்கள். இந்த மாதிரி சிறுவர்களுக்கு போதை பழக்கத்தை ஏற்படுத்தி க்ரைம் செயல்களில் ஈடுபட வைக்கும ரௌடி கும்பல் வெளியே நடமாடுகிறது. அவர்களுக்கு அரசியல் தொடர்பு இருக்கிறது. அந்த மாதிரி ஆட்களை எந்த அரசியல் கட்சியும் வளர்த்துவிடக்கூடாது. நமது சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான், க்ரைம் சம்பவங்கள் குறையும் '' என்றார்.

Also Read: கத்தியுடன் சுற்றிய சிறுவர்கள்; துப்பாக்கிமுனையில் பிடித்த வேலூர் எஸ்.பி! - நடந்தது என்ன?

கடைசியாக, சென்னை டி.ஜி.பி. அலுவலக உயர் அதிகாரியிடம் பேசியபோது, ``தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும், அதற்கு முந்தைய காலகட்டத்திலும் தமிழகத்தில் நடந்த கொலை சம்பவங்களின் புள்ளிவிவரங்களை பார்த்தாலே, நீங்கள் புரிந்துகொள்ளலாம். பெரிய அளவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கவில்லை. ரௌடிகள், கூலிப்படையினர் தொடர்புடைய கொலைகளின் எண்ணிக்கை குறைவுதான். முன்விரோதம், குடும்ப வன்முறை, திருமணம் தாண்டிய உறவு உள்ளிட்ட தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகத்தான் கொலைகள் அதிகம் நடந்துள்ளன. ரௌடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் படு ஸ்பீடாக இந்த அரசு எடுத்து வருகிறது. அண்மையில், காஞ்சிபுரம், தூத்துக்குடியில் இரண்டு ரௌடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். மதுரையில் ஒரு ரௌடியை காலில் சுட்டு பிடித்துள்ளனர். இனி ரோந்து போகும்போது, போலீஸார் கையில் துப்பாக்கியுடன் போகவேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.

டி.ஜி.பி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

உங்களுக்கு ஒரு புள்ளிவிவரங்களை சொல்றேன்.. 2019 வருடம் செப்டம்பர் வரையில் தமிழகத்தில் 1269 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. 2020(செப்டம்பர் வரை) 1203, 2021(செப்டம்பர் வரை) 1223 கொலைகள் நடந்துள்ளன. தி.மு.கழக ஆட்சி வந்த பிறகு, 2021 (மே முதல் செப்டம்பர் வரை) 697 கொலைகள் நடந்துள்ளன. இதுவே அதற்கு முந்தைய 2020-ல் (மே முதல் செப்டம்பர் வரை) 758 கொலைகள் நடந்துள்ளன. 2019-ம் வருடம் (மே முதல் செப்டம்பர் வரை) 715 கொலைகள் நடந்துள்ளன '' என்றார்.

இவர் இப்படி சொன்னாலும், போதை பழக்கங்களால் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீர் அழிவதோடு, க்ரைம் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. செல்போன், ஆன்லைன், சமூக வளைதங்களில் மூலமாக அப்பாவி ஏழைப் பெண்களை மிரட்டுவது, பாலியல் தொந்தரவு தருவது என்று க்ரைம் செயல்களிலும் இளைஞர்கள் இறங்குகிறார்கள். இதையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.



source https://www.vikatan.com/government-and-politics/politics/an-detailed-analysis-on-crime-rate-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக