Ad

சனி, 27 நவம்பர், 2021

பனீர் பட்டர் மசாலா | பணியாரம் பேன்கேக் | ஹல்வா பூரி சோலே - ஸ்வீட் அண்டு ஸ்பைசி வீக் எண்ட் ரெசிப்பீஸ்

வெரைட்டியான உணவுகளைத் தேடித்தேடிச் சாப்பிடும் உணவுப் பிரியர்களுக்கானது இந்த வீக் எண்டு ஸ்பெஷல் மெனு. கொஞ்சம் புதிதாகவும் வேண்டும், பழகிய சுவையிலும் இருக்க வேண்டும் என விரும்புவோர் இந்த ஐட்டங்களை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த வீக் எண்டு விருந்து உங்களுக்கு ஸ்வீட் அண்டு ஸ்பைசியாக அமையட்டும்.

தேவையானவை:

மைதா மாவு - 250 கிராம்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
எக் ரீப்ளேசர் - ஒன்றரை டீஸ்பூன் (ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்)
உப்பு - கால் டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
மோர் - 250 மில்லி
பால் - சிறிதளவு
எண்ணெய்/வெண்ணெய் - சிறிதளவு
ப்ளூபெர்ரி பழங்கள் - சிறிதளவு (விருப்பப்பட்டால்)
சாக்லேட் சாஸ் / ரோஸ்பெர்ரி சாஸ் - பரிமாற (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

பணியாரம் பேன்கேக்

செய்முறை:

எக் ரீப்ளேசரை ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, உப்பு, மோர், பேக்கிங் சோடா அனைத்தையும் சேர்த்து, கரைத்து வைத்திருக்கும் எக் ரீப்ளேசரையும் சேர்த்துக் கலக்கவும். மாவு பணியார பதத்துக்கு வர சிறிது பாலைச் சேர்க்கவும். அடுப்பில் பணியாரக்கல்லை வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும், ஒரு கரண்டி மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் கால் பாகத்துக்கு மட்டும் ஊற்றவும். இதன் மேல் ப்ளூபெர்ரி பழங்களைச் சேர்க்கவும். இனி ஒரு பக்க மாவு வெந்ததும், ஸ்கியூவரால் (பணியார கம்பி) திருப்பி லேசாக எண்ணெய் தெளித்து வேக விடவும். வெந்ததும் சாஸ் ஊற்றி பரிமாறவும்.

* முட்டையை விரும்பாத வெஜ் பிரியர்களுக்காக எக் ரீப்ளேசரை சேர்க்கிறோம். மாவு உப்பி வர இது உதவும்.

தேவையானவை:

ரவை - 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
நெய் - 2-3 டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் - 500 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சைப்பழம் (கிஸ்மிஸ்பழம்) - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
பூசணி விதைகள் - அலங்கரிக்க‌

அல்வா செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சைப்பழம் (கிஸ்மிஸ்) சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். இதே வாணலியில் ரவை சேர்த்து குறைந்த தீயில் நிறம் மாறும் அளவுக்கு வறுக்கவும். நல்ல வாசனை வரும்போது, பால் சேர்த்துக் கலக்கிக்கொண்டே, ஃபுட் கலரை சேர்த்துக் கலக்கவும். கெட்டியானதும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும், சர்க்கரை கரைந்து அல்வா ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து பூசணி விதைகள் தூவி, தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

அல்வா

பூரி செய்ய‌ தேவையானவை:

கோதுமை மாவு - 250 கிராம்
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க‌

செய்முறை:

வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு கலந்து சிறிது சிறிதாகத் தண்ணீரைச் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசையவும். இதைச் சிறிய உருண்டைகளாகப் பிரித்து உருட்டி தேய்த்து எண்ணெயில் பூரிகளாகச் சுட்டெடுக்கவும்.

சோலே செய்ய‌ தேவையானவை:

கொண்டைக்கடலை - 500 கிராம் (ஊற வைத்து உப்புப் போட்டு வேக வைக்கவும்)
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (ஸ்லைஸ்களாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க‌
உப்பு - தேவையான அளவு

ஹல்வா பூரி சோலே

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுப்பை அணைத்து ஆறவிட்டு, கலவையை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைக்கவும். இனி அடுப்பில் வாணலியை வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிய விடவும். இதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக சில நிமிடம் வதக்கவும். இதில் அரைத்து வைத்திருக்கும் வெங்காயக் கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கி தீயை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். கிரேவியின் பச்சை வாசனை போனதும் வெந்த கொண்டைக்கடலையைச் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். வட இந்தியாவில் இந்த இரண்டு சைட் டிஷ்கள்தான் பூரிக்கு மிக பிரபலம்.

தேவையானவை:

பனீர் - 12 க்யூப்ஸ்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1 (அரை நிலா வடிவத்துக்கு நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
முந்திரி - 8 (வெந்நீரில் சிறிது ஊறப்போட்டு அரைத்த பேஸ்ட்)
கஸூரி மேத்தி - 1 டீஸ்பூன் (காய்ந்த வெந்தய இலைகள்)
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு

பனீர் பட்டர் மசாலா

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி, அடுப்பை அணைத்து ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போக வதக்கி, அரைத்த வெங்காயம், தக்காளி விழுது சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். பிறகு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து சிம்மில் வைத்து வேக விடவும். பிறகு, பனீரை சேர்த்து எட்டு நிமிடம் கழித்து, முந்திரி விழுது, கஸூரி மேத்தியைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். இந்த மலாசாவை சப்பாத்தி, நான், ரொட்டி ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



source https://www.vikatan.com/food/recipes/paneer-butter-masala-pan-cake-halwa-puri-sweet-and-spicy-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக