Ad

ஞாயிறு, 28 நவம்பர், 2021

யூரோ டூர் - 16: அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை முதல் சர்வாதிகாரி வரை... ஜோசப் ஸ்டாலின் கதை!

'அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்பதுபோல ஸ்டாலினுக்குத் தெரியாமல் ஓர் எறும்புகூட ஊர்ந்து போக முடியாதவாறு சோவியத் ராஜ்ஜியம் ஸ்டாலினின் இரும்புக்கரங்களால் கட்டுப்படுத்தப்பட்டது. ஸ்டாலினின் ரகசியப் படை சோவியத் ஒன்றியத்தின் தூணிலும் இருந்தது, துரும்பிலும் இருந்தது. Czar மன்னர்களின் குழப்பமான முடியாட்சியைத் தொடர்ந்து, முதல் உலகப்போரில் கடும் அடி வாங்கிய ரஷ்யா, ஸ்டாலின் எனும் ஒற்றை மனிதனால் மெல்ல மெல்ல துளிர்த்தெழுந்தது.
கிட்டத்தட்ட இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தைப் போன்ற பெரும் அமைப்பாக இருந்த அன்றைய சோவியத் ஒன்றியத்தை, ஒன் மேன் ஆர்மியாகக் கட்டியெழுப்பிய ஸ்டாலின் எனும் இரும்பு மனிதனை, இன்றும் பெரும்பாலான ரஷ்யர்கள் Uncle Joe-வாகவே பார்க்கிறார்கள். 1930கள் மற்றும் 40களில் அவர் எழுதிய ரஷ்ய வரலாறு, உலகம் சுழலும் வரை அழிக்கமுடியாத அசாத்திய சரித்திரம். கார்ல் மார்க்ஸ் போட்ட விதை, லெனினால் நீரூற்றப்பட்டு, ஸ்டாலினால் உரமிடப்பட்டு, சோவியத் ஒன்றியம் எனும் ஆல விருட்சமாக அன்று கிளை பரப்பியது. அதன் விளைவாகவே இன்றும் அமெரிக்கா போன்ற பெரும் வல்லரசுகளுக்கே சவால் விடும் நிலைக்கு ரஷ்யா வளர்ந்து நிற்கிறது.

நவீனத்தின் அசுரப் பாய்ச்சல்!

தேசம் நவீனமயம் ஆகாவிட்டால் கம்யூனிசம் தோல்வியடையும் என்ற அச்சம் ஸ்டாலினுக்கு இருந்தது. எனவே, நாட்டை தொழில்மயமாக்குவதற்கு தொடர்ச்சியான பல ஐந்தாண்டுத் திட்டங்களைத் தொடங்கினார். நிலக்கரி, எண்ணெய், எஃகு போன்ற பல உற்பத்திகள் அதிவேகமாக வளர்ந்து ரஷ்ய தொழில்துறை வேகமாக விரிவடைந்தது. நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. உக்ரேனியர்களின் உதவியுடன் ரஷ்யர்கள் பல பிரமாண்ட தொழிற்சாலைகளை ஆரம்பித்தனர். தொழில்நுட்பத்தில் அடித்து ஆடிய ரஷ்யர்கள் பல அசத்தலான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டனர்.
வல்லரசாகத் திகழ்வதற்கு வலுவான ராணுவம் அவசியம். சோவியத் ஒன்றியத்தின் ராணுவமும் ஸ்டாலினால் பலப்படுத்தப்பட்டது. பல போர் விமானங்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் உருவாக்கப்பட்டன. ராணுவம் பெரிதாக வளர்ந்தது. மற்றுமொரு போரை சந்தித்தால், அதில் சோவியத் யூனியன் எக்காரணம் கொண்டும் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் மிகவும் உறுதியாக இருந்தார். அதே போலவே அதன்பின் மூண்ட இரண்டாம் உலகப்போரில் சொல்லி அடித்தது சோவியத் ரஷ்யா.

விவசாயத்தை அழித்த கூட்டுப்பண்ணை!

சர்ச்சைக்குரிய பல நிகழ்வுகளும் ஸ்டாலின் காலத்தில் நடந்தன. விவசாயத்தில் கொண்டுவரப்பட்ட கூட்டுமயமாக்கல் திட்டம் கிராமப்புறங்களில் கணிசமான எதிர்ப்பைச் சந்தித்தது. குறிப்பாக உக்ரைன் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது. 1929-ம் ஆண்டில் ஜோசப் ஸ்டாலினின் 'The Year of the Great Break' என்ற நூல் பிரசுரமானது. அப்போது சோவியத் ரஷ்யாவில் விவசாய கூட்டுமயமாக்கல் ஒரு பெரிய அளவிலான செயல்முறையாக மாறியது. 'Kulaks' என்று அழைக்கப்பட்ட வசதி படைத்த விவசாயிகளின் வர்க்கத்தை கலைக்க வேண்டும் என்று எண்ணிய ஸ்டாலின், Kolkhozes எனும் திட்டத்தை அறிமுகம் செய்தார். பணக்கார வர்க்கத்திடமிருந்து நிலங்களைப் பிடுங்கி, அவற்றைப் பலருக்கும் பகிர்ந்தளிப்பதன் மூலம் வேளாண்மை புரட்சியை உண்டு பண்ணலாம் என எண்ணினார். இது சோஷலிச சித்தாந்தத்தில் ஒரு மைல்கல்லாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், யானைக்கும் அடி சறுக்கியது.

விவசாயத்தை அழித்த கூட்டுப்பண்ணை!

ரஷ்ய விவசாயிகளின் பழைய மரபுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மில்லியன் கணக்கான குலாக்கள் தங்கள் பண்ணைகளை இழந்து, பெரிய கூட்டுப் பண்ணைகளில் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சட்டங்களை எதிர்த்தவர்கள் ஒன்று சுடப்பட்டனர்; அல்லது சைபீரியாவில் உள்ள கட்டாய தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு பட்டினியிலும் உறைபனியிலும் அவதிப்பட்டு பலர் இறந்தனர்.

கூட்டு விவசாயத் திட்டமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சோவியத் யூனியன் முழுவதும் உற்பத்தி சரிந்து பஞ்சம் வெடித்து 10 மில்லியன் மக்களைக் கொன்றது. 1933 காலப்பகுதியில் ரஷ்யாவை உலுக்கிய பஞ்சத்தில் மக்கள் அடுத்தவர்களை அடித்து உண்ணும் அவலத்துக்கு ஆளாகினர். வரலாற்றிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட மிகக்கொடிய பஞ்சமாக இது குறிப்பிடப்படுகிறது.

வெளிச்சத்துக்குப் பின்னால் இருட்டடிப்பு செய்யப்பட்ட உண்மைகள்!
சோவியத் ரஷ்யாவின் விரைவான வளர்ச்சிக்கு கொடுக்கப்பட்ட விலை, கோடிக்கணக்கான மனித உயிர்கள்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்த ஸ்டாலின் ஆட்சியில் கொன்று குவிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இன்றுவரை உலகம் அறியாத பரம ரகசியம். வெளியே சொல்லப்பட்ட கணக்கின் படி கிட்டத்தட்ட 14 மில்லியன் மக்களின் வாழ்க்கை Soviet gulag-க்கில் முடிவடைந்தன. மொத்தம் 30 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.

Joseph Stalin | ஜோசப் ஸ்டாலின்

அரசியல் கைதிகள். சோவியத் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், திருட்டு போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள், சோவியத் அதிகாரிகளைப் பற்றி தவறாகப் பேசியதால் சிறை பிடிக்கப்பட்ட சாதாரண மனிதர்கள் என இந்த குலாக்கிற்கு கைதிகள் எங்கிருந்து, எப்படி வந்தாலும், அவர்களின் விதி ஒரே மாதிரியே முடிந்தது. மைனஸ் டிகிரி குளிரில், வடதுருவ உறைபனியில், குறைந்த உணவோடு, எந்தவித சுகாதார வசதிகளும் இல்லாத இடத்தில், மிருகங்களைப் போல அவர்கள் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். சுருக்கமாகச் சொன்னால், அங்கு அடைபட்ட கைதிகள் தமது மரணத்திற்காக தாமே உழைத்தனர். ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் அளவுக்கு இன்றுவரை வெளியே அறியப்படாத, ஆனால் அதைவிட அதிக மனித உயிர்களைக் குடித்த Soviet Gulag, ஸ்டாலின் உருவாக்கிய ஒரு செயற்கை நரகம்!

சித்திரவதைக் கூடம் குலாக்!

Soviet Gulag என அழைக்கப்படும் கட்டாயத் தொழிலாளர் முகாம்கள், 1919களில் குற்றவாளிகளையும், குலாஸ் என்று அழைக்கப்பட்ட வசதி படைத்த விவசாயிகளையும், அரசியல் கைதிகளையும் அடைத்து வைக்க லெனினால் உருவாக்கப்பட்டது. லெனின் மறைந்தபின் அந்த இடத்துக்கு வந்த ஸ்டாலின், முதல் வேலையாக இந்த Gulag-களின் அளவை அதிகரித்து, அதில் கைதிகளின் எண்ணிக்கையையும் கூட்டினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நிறைந்திருந்த அந்த முகாம்களில், பெண்களும் குழந்தைகளும் மிகக்கொடூரமான முறையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளானார்கள். வருடத்துக்கு ஒரு தடவையே இவர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன. எனவே இறந்து போனவர்களின் உடலிலிருந்து உடையை எடுத்துப் பயன்படுத்தினர். கடும் குளிரில் போதிய ஆடைகள் இல்லாமலே பலர் இங்கு உயிர் நீத்தனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை, அதுவும் மிகவும் குறைந்த அளவே உணவு கொடுக்கப்பட்டது. அதனால் மக்கள் தம் கண்ணில் படும் உயிரினங்கள், பூச்சிகள் என எல்லாவற்றையும் பிடித்து உண்டனர். உயிர் வாழ்வதற்கான போராட்டம் அழுகிய மீன்களைக்கூட விட்டு வைக்கவிடவில்லை.

Joseph Stalin | ஜோசப் ஸ்டாலின்

மக்கள் தம் சக்திக்கு மீறி மிகக் கடினமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் என, வருடம் முழுதும் உழைத்து உழைத்து, இறுதியில் ஓய்ந்து போனார்கள். சுகாதாரமோ, பாதுகாப்போ இல்லாத சூழலில், கடும் பனிப்பொழிவில், கை கால், காது, விரல் என அங்கங்களை இழந்து, சிகிச்சை உதவியும் இன்றி, அணு அணுவாக உயிரைவிட்டனர். தண்டனைக் காலம் முடிந்த சில கைதிகள் விடுதலை செய்யப்பட்டாலும், பலரது வாழ்வு அங்கேயே பலியிடப்பட்டது.

அடிமைகளின் வியர்வையும் குருதியும்!

சோவியத் ரஷ்யாவை நவீனப்படுத்தி, ஏனைய மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக முன்னேற்றுவதற்கு, செலவில்லாத மனித வளம், அளவில்லாத உழைப்பு என மிகவும் லாபகரமானதும், விரைவானதுமான வழியாக இது தென்பட்டது. எனவே Gulag கைதிகள் வயல்கள், தொழிற்சாலைகள், நெடுஞ்சாலை நிர்மாணம் என சோவியத் தொழிற்புரட்சிக்குத் தேவையான அனைத்து உற்பத்தித் துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

உலகையே அசர வைத்த சோவியத் ஒன்றியத்தின் மிகப் பெரிய பொறியியல் சாதனைகள் அனைத்தின் பின்னாலும் இந்த Gulag அடிமைகளின் வியர்வையும், குருதியும் உறைந்திருக்கிறது. Moscow Volga Canal, The White sea Canal மற்றும் ரஷ்யாவின் மிகப்பெரிய kolyma highway போன்ற அனைத்தும், ஆயிரக்கணக்கான குலாப் கைதிகளின் கல்லறைகளின் மீது கட்டப்பட்டன.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னரே குலாக் அமைப்பின் அத்தனை விவரங்களும் அடங்கிய கோப்புகள் ரகசியமாக சீல் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டன. இன்றுவரை குலாக் பற்றிய உண்மை நிலவரங்கள் ரஷ்யாவிற்கு மட்டுமே வெளிச்சம்.

வரமா, சாபமா?

ஸ்டாலினைத் தட்டிக் கேட்க யாருமே துணியவில்லை. அவரது கொள்கைகள் பிடிக்காத இரண்டாவது மனைவி தற்கொலை செய்துகொண்டார். ஒரு முறை ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசி முடித்ததும் தொடர்ச்சியாக 11 நிமிடங்களுக்கு மேல் கைத்தட்டல் ஒலித்தது. அங்கிருந்த யாருமே நிறுத்துவதாயில்லை. ‘அடடே அவ்வளவு சுவாரஸ்யமான பேச்சா?’ என்றால், அதுதான் இல்லை. கைதட்டுவதை முதலில் நிறுத்துபவர் கதி அதோ கதிதான். கடைசியில் ஒரு பேப்பர் ஆலையின் அதிபர் சிறிது துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, முதலில் கை தட்டுவதை நிறுத்தினார். அவரின் அடுத்த நாள் காலை Gulag சிறைச்சாலையில் சிறப்பாக விடிந்தது என்பது இங்கே பெட்டிச் செய்தி.

ஸ்டாலின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார் என்பதும் இதுவரை பலரும் அறிந்திராத கொசுறுச் செய்தி. அவரது Gulag கொலைகள் மற்றும் ஏனைய சட்டத்துக்கு புறம்பான செயற்பாடுகள் மேற்கத்திய உலகில் பரவலாக அறியப்படுவதற்கு முன்பு, இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பங்காற்றியதற்காக 1945 மற்றும் 1948 ஆகிய இரண்டு ஆண்டுகளும் இந்தப் பரிந்துரை நிகழ்ந்தது.

ஜோசப் ஸ்டாலின்

'பாதிரியாராக வரவேண்டும்' என்ற கனவில் செமினரிக்குதன் தாயினால் அனுப்பப்பட்ட ஒரு கெட்டிக்கார மாணவன், பிற்காலத்தில் உலகின் வரலாற்றுப் பக்கங்களை நிறைத்த இரும்பு மனிதனாக மாறியது சோவியத்தின் வரமா அல்லது சாபமா என்பது, இன்றுவரை விவாதிக்கப்படும் ஒரு கேள்வி.
சோவியத் யூனியனில் கம்யூனிசம் கொடிகட்டி ஆளத் தொடங்கிய அதேவேளையில், ஐரோப்பாவின் மற்றுமொரு பக்கத்தில் இன்னுமொரு தீவிர அரசியல் சித்தாந்தம் படரத் தொடங்கியது. முதல் உலகப் போரில் பலவீனமடைந்த ஒரு தேசத்திலிருந்து, ஐரோப்பாவையே கலங்கடித்த ஒரு சர்வாதிகாரி வெளிப்பட்டார். ஒரு தலைவனையும், அத்தலைவனை கண்மூடித் தானமாக பின்பற்றும் ஒரு சமூகமும் உருவானது. யார் அந்த தலைவர்? சோஷலிசத்துக்கு எதிராக உருவான அந்தப் புதிய சித்தாந்தம் என்ன? அடுத்த வாரம் பார்க்கலாமா?!

யூரோ டூர் போலாமா?!


source https://www.vikatan.com/social-affairs/international/euro-tour-16-from-nobel-prize-for-peace-nomination-to-dictator-the-story-of-joseph-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக