Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

பாலியல் தொல்லை; பணம் கேட்டு மிரட்டிய கும்பல்! - ஆத்தூர் மாணவி விவகாரத்தில் நடந்ததென்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கருமந்துறை பகுதியில் உள்ளது அந்த தனியார் பள்ளி. இப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 22-ம் தேதி வீட்டில் இருந்தபோது பிளேடால் கையை அறுத்துக் கொண்டதோடு, தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு பதறிப்போன பெற்றோர், உடனே அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பெற்றோர்கள் எவ்வளவோ கேட்டும் தற்கொலைக்கான காரணத்தைச் சொல்லாமல் மெளனமாக இருந்துவந்த மாணவி, மருத்துவர்களின் கவுன்சிலிங்கின் போது ஆசிரியர் ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களைச் சொல்லி வெடித்து அழுதுள்ளார். அதனையடுத்து போலீஸார், மாணவியிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.

கராத்தே மாஸ்டர் ராஜா

விசாரணயில், பள்ளியின் கராத்தே மாஸ்டரான ராஜா (46), சம்பந்தப்பட்ட மாணவி 8-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. ஆரம்பத்தில் இது மாணவிக்கு புரியாயமல் போக, ஒருகட்டத்தில் மாஸ்டரின் தொல்லை எல்லை மீறியிருக்கிறது. அப்போதே பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீபன் தேவராஜிடம் மாணவி புகாரளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பிறகும் கராத்தே மாஸ்டரின் அத்துமீறல் அதிகமாகியிருக்கிறது. இதில் உடைந்துபோன மாணவி, விஷயத்தை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

போலீஸார் விசாரித்து வந்த அதேவேளையில், இந்த விஷயம் காட்டூத்தீயாய் ஊர்மக்களிடம் பரவ, கராத்தே மாஸ்டர் ராஜாவை அடித்து துவைத்தெடுத்து ஊர்மக்களே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் ராஜாவை போக்சோ சட்ட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே மாணவி சொல்லியிருந்தபோதும், கராத்தே மாஸ்டர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக பள்ளியின் முதல்வர் ஸ்டீபன் தேவராஜையும் போலீஸார் கைது செய்தனர்.

Also Read: ஈரோடு: `1098’ சைல்டு ஹெல்ப்லைனுக்கு வந்த அழைப்பு! - பாலியல் புகாரால் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

இந்நிலையில், கராத்தே மாஸ்டர் ராஜாவை போலீஸார் கைது செய்வதற்கு முன், நவம்பர் 27-ம் தேதி காலை 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று ராஜாவை புத்திரகவுண்டன்பாளையம் சந்தைப்பேட்டை பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த ராஜாவை அந்தக் கும்பல் மிளகாய்ப்பொடித் தூவி காரில் கடத்திச் சென்று, வெள்ளிமலை பகுதியில் வைத்து தாக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த விஷயத்தை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது கராத்தே மாஸ்டர் ராஜா சொல்லியுள்ளார். அதையடுத்து கராத்தே மாஸ்டரை கடத்திச்சென்று தாக்கிய 8 பேர் கொண்ட கும்பல் மீது ஏத்தாப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாலியல் தொல்லை

இதுகுறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “நாலு வருஷத்துக்கு முன்னாடி சம்பந்தப்பட்ட அந்த கராத்தே மாஸ்டர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துருக்காரு. ‘கோயமுத்தூர் மாணவிக்கு நடந்த கொடுமைக்குப் பின்னாடி, எனக்கு நேர்ந்த தொந்தரவுகளையும் சொல்லணும்’னு சொல்லி மாணவி புகார் கொடுத்தாங்க. நாங்க என்னன்னு விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்குள் மன அழுத்தத்தில் மாணவி தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டுட்டாங்க. சம்பந்தப்பட்ட கராத்தே மாஸ்டரை மாணவிக்கு வேண்டப்பட்ட உறவினர்கள் சிலர் அடிச்சி, இழுத்துவந்து ஸ்டேஷன்ல ஒப்படைச்சாங்க. மத்தபடி இந்த விவகாரத்துல பணம் கேட்டு மிரட்டுனதா எதுவும் இல்லை. இருந்தாலும், கராத்தே மாஸ்டரை எதுக்காக அடிச்சீங்கன்னு 8 பேர் மேல கேஸ் போட்ருக்கோம். இனிமேல் தான் கராத்தே மாஸ்டர் போனுக்கு யார் நம்பர்ல இருந்து போன் வந்துச்சி, யார் யாரெல்லாம் அடிச்சாங்க!... என்ன காரணம் என விசாரிக்கணும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/karate-master-who-sexually-harassed-a-student-got-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக