Ad

வியாழன், 25 நவம்பர், 2021

Doctor Vikatan: மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடலாமா?

மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடலாமா? பழங்கள் குளிர்ச்சியை அதிகரிக்குமா? எந்தப் பழங்களை எவ்வளவு சாப்பிடலாம்?

- சர்வேஷ் (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``மழைக்காலத்திலும் தாராளமாகப் பழங்கள் சாப்பிடலாம். ஆனால், பழங்களை எப்போதும் உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் பழங்கள் சாப்பிடலாம். அல்லது மாலை 4 மணிவாக்கில் சாப்பிடலாம். இரவு 8 மணிக்கு டின்னர் சாப்பிடுகிறீர்கள் என்றால் அதையடுத்த ஒன்றரை மணி நேரம் கழித்து பழம் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடுவதால் குளிர்ச்சி அதிகரிக்காது. ஆனால், குளிரவைத்த பழங்களையோ, ஐஸ்க்ரீம் மேல் ஃப்ரூட் சாலட்டாகவோ வைத்துச் சாப்பிடக் கூடாது.

Also Read: Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் லெகின்ஸ் அணியலாமா?

குளிர்காலத்தில் நம் செரிமான இயக்கம் சற்று மந்தமாக இருக்கும் என்பதால் எப்போதும் ஃப்ரெஷ்ஷான உணவுகளையும் வெதுவெதுப்பான அல்லது அறைவெப்ப நிலையில் உள்ள உணவுகளையும் மட்டும் சாப்பிடவும்.

பழங்களைப் பொறுத்தவரை அந்தந்த சீஸனில் கிடைப்பவற்றை சாப்பிடலாம். நீரிழிவு பாதிப்பு இல்லாதவர்கள் ஆப்பிள், திராட்சை, பப்பாளி, மாதுளை போன்றவற்றைச் சாப்பிடலாம். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை ஒரு நபர், ஒரு நாளைக்கு 400 கிராம் அளவுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ளச் சொல்கிறது. எனவே, 200 கிராம் காய்கறிகள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் மீதி 200 கிராம் அளவுக்கு பழங்கள் சாப்பிடலாம். முடிந்தவரை பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் சிறந்தது. ஜூஸாகவோ, மில்க் ஷேக்காகவோ மாற்ற வேண்டாம்.

பப்பாளி

Also Read: Doctor Vikatan: டை அடித்தால் சருமம் கறுத்துப்போகுமா?

விலை உயர்ந்த வெளிநாட்டுப் பழங்கள்தான் சத்தானவை என நினைக்க வேண்டாம். உங்கள் பகுதியில் அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் நாட்டுப் பழங்களிலேயே உங்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். நீரிழிவு உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரை அளவைப் பார்த்து அதற்கேற்ப மருத்துவரின் ஆலோசனையோடு குறிப்பிட்ட சில பழங்களை மட்டும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்ளலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/can-we-eat-fruits-during-rainy-season

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக