எல் சால்வடோர் நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதற்கு முன்னர் கேள்விப்படவில்லை என்றாலும், கடந்த சில மாதங்களில் ஒரு முறையாவது இந்த நாட்டின் பெயரைச் செய்திகளில் கேட்டிருப்பீர்கள். பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா ஒன்றைக் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்த சட்டம் அமலுக்கும் வந்திருக்கிறது. உலகின் பல நாடுகள் பிட் காயின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றன. அதாவது அந்நாட்டில் பிட்காயின் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதனை அதிகாரப்பூர்வ நாணயமாக எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. பிட் காயினை அதிகாரப்பூர்வாக அங்கீகரித்த முதல் மற்றும் ஒரே நாடு எல் சால்வடோர்தான். எல் சால்வடோருக்கென்று தனியாக அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்று கிடையாது. அமெரிக்க டாலர்களைத்தான் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்தி வந்து கொண்டிருந்தது எல் சால்வடோர்.
பிட்காயினை எல் சால்வடோரின் அதிகாரப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கக் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருகிறார் அந்நாட்டின் ஜனாதிபதி நயீப் புக்கேல். அதனைத் தொடர்ந்து 90 நாட்களில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அந்தச் சட்டம் எல் சால்வடோரில் நடைமுறைக்கு வருகிறது. பிட்காயினைப் பயன்படுத்துவதற்கு 'சிவோ' (Chivo) என்ற செயலி ஒன்றையும் அறிமுகம் செய்கிறது நயீப் புக்கேல் தலைமையிலான எல் சால்வடோர் அரசு. இந்தச் செயலியின் மூலம் பிட்காயினாகவோ அல்லது அதற்கு இணையான அமெரிக்க டாலர் கொண்ட பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். சால்வடோரின் குடிமகன் என்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையைக் கொண்டு சிவோ செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
பிட்காயினைப் பயன்படுத்த விரும்பும் மக்களுக்கு 30 டாலருக்கு இணையான பிட்காயின் இலவசமாக அளித்திருக்கிறது எல் சால்வடோர். இந்த மொத்தத் திட்டத்திற்கும் 203 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக ஒதுக்கியிருக்கிறது அரசு. இதுவரை 26 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு 550 பிட்காயின்களை வாங்கியிருக்கிறது எல் சால்வடோர். ஆனால், அரசின் (நயீப் புக்கேலின்) இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு இருக்கிறதா எனக் கேட்டால், கொஞ்சம்கூட இல்லை என்றுதான் கூறவேண்டும். எல் சால்வடோர் அரசின் பிட்காயின் குறித்த இந்த நடவடிக்கைகளுக்கு மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 70 சதவிகித மக்கள் எதிர்ப்பையே தெரிவித்திருக்கிறார்கள். 80 சதவிகிதம் மக்கள் அரசின் இந்த அறிவிப்பின்மீது பயத்தையும் அதிருப்தியையும் தெரிவித்திருக்கிறார்கள்.
அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்ப்புக்கொடி ஏந்தியும் கடந்த செப்டம்பர் மாதம் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள் எல் சால்வடோர் மக்கள். ஆனால், எல் சால்வடோர் அரசுதான் எதற்கும் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.
பிட்காயின்களுக்கோ மற்ற கிரிப்டோகரண்ஸிக்களுக்கோ எந்த விதமான பாதுகாப்பு விதிமுறைகளோ நெறிமுறைகளோ கிடையாது. அவை முழுவதுமாக தனிப்பட்ட நபர்களால் உருவாக்கப்படுபவை. மேலும், அவற்றின் நிலைத்தன்மை என்பது எப்போதும் கேள்விக்குறியே. 2009-ல் முதன் முதலில் உருவாக்கப்பட்ட பிட்காயின்கள் தொடர்ந்து கடந்த பத்து வருடங்களில் பல ஆயிரம் டாலர்கள் மதிப்பு கூடியிருக்கிறது. எதன் அடிப்படையில் தன் மதிப்பு உயர்ந்தது, பிட் காயினுக்கு என உள்ளார்ந்த மதிப்பு உள்ளதா என்று கேட்டால் அதுவும் கிடையாது. கடந்த ஏப்ரல் மாதம் 64,000 என அதிகபட்ச உயரத்தைத் தொட்டது பிட்காயினின் மதிப்பு. தற்போது 57,000 என்ற அளவில் பிட்காயின் சந்தையில் வர்த்தகமாகி வருகிறது. நிலையான மதிப்பு இல்லாத பொருட்களில் பிட்காயினுக்கே முதலிடம்.
Also Read: வெறிகொண்டு உயரும் பிட்காயின் மதிப்பு... முதலீடு செய்யலாமா? #Bitcoin
இப்படி இருக்கும் பட்சத்தில் பிட்காயினை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என எச்சரித்திருக்கிறது சர்வதேச IMF (International Monetary Fund) அமைப்பு. உலகின் நாடுகளின் பொருளாதார நிலையைக் கவனித்து வரும் இந்த அமைப்பு பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த வேண்டாம் என எல் சால்வடோரிடம் தெரிவித்திருக்கிறது.
IMF-ன் ஆலோசனை, மக்களின் போராட்டம் என அனைத்தையும் புறந்தள்ளிவிட்டுப் புதிய பிட்காயின் நகரம் ஒன்றைக் கட்டியெழுப்பத் திட்டமிட்டு வருகிறார் எல் சால்வடோரின் ஜனாதிபதி. எல் சால்வடோரில் இருக்கும் எரிமலை ஒன்றின் அருகில் பிட்காயின் போன்றே வடிவத்துடன் இந்த நகரத்தை வடிவமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் அவர். எரிமலையின் அருகில் இருப்பதால் அங்கிருக்கும் புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்த பிட்காயின்களை மைனிங் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் நயீப் புக்கேல்.
source https://www.vikatan.com/government-and-politics/international/el-salvador-first-country-to-approve-bitcoin-as-legal-tender
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக