பெண்களிடமும் இளவயது ஆண்களிடமும் சமீபகாலமாக மாரடைப்பு விகிதம் அதிகரித்திருப்பது ஏன்?
- திலகா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
``பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது, ஆண்களுக்குதான் அந்த ஆபத்து அதிகம் என்பது பொதுவாகச் சொல்லப்படுவது. மெனோபாஸுக்கு முன்புவரை பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், ஆண்களுக்கு இள வயதிலேயே மாரடைப்பு ஏற்படலாம். வயதாக, ஆக அந்த ரிஸ்க் மேலும் அதிகரிக்கும். உலக அளவில் பெண்களின் இறப்புக்கு முதல் காரணமாக இருப்பது மாரடைப்பு மற்றும் இதய நோய்கள்.
சமீப காலமாக இளைஞர்களிடம் குறிப்பாக ஆண்களிடம் மாரடைப்பு விகிதம் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். ஸ்ட்ரெஸ் நிறைந்த வாழ்க்கை, சிகரெட், ஆல்கஹால் உள்ளிட்ட பழக்கங்கள் என இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தவிர இந்தியர்களின் மரபியலின் அடிப்படையிலும் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாறிப்போன நம் உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்றவையும் முக்கியமான காரணங்கள்.
Also Read: Doctor Vikatan: மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடலாமா?
`ஜிம் போனால் மாரடைப்பு வருமா' என்ற கேள்வியும் சமீப காலத்தில் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஜிம் போவதால் யாருக்கும் ஹார்ட் அட்டாக் வருவதில்லை. சம்பந்தப்பட்ட நபருக்கு குறைந்த அளவில் இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்திருக்கலாம். அந்த அடைப்பு 80 சதவிகிதமாக அதிகரித்த பிறகுதான் 100 சதவிகிதத்தைத் தொட வேண்டும் என்றில்லை. அது 30 சதவிகிதமாக இருக்கும்போதே திடீரென 100 சதவிகிதமாக தீவிரமாகலாம்.
எனவே, சரியான வழிகாட்டுதலோ, பயிற்சியோ இல்லாமல் திடீரென வொர்க் அவுட் செய்வது தவறான விஷயம். உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்கும் முன் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகளைத் தெரிந்துகொண்டு, ரிஸ்க் ஏதும் இருக்குமா என்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டு பிறகு ஆரம்பிக்கலாம்.
ஆரோக்கியமான இதயத்துக்கு உடற்பயிற்சியும், சரிவிகித உணவுப் பழக்கமும் மிக முக்கியம். மாரடைப்பு பாதிப்பில் பரம்பரைப் பின்னணியும் மிக முக்கியப் பங்கு வகிக்கும். உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் மூலமாக பரம்பரை பின்னணி ஆபத்தை நீக்க முடியாது என்றாலும், ஆபத்து வாய்ப்புகளைக் குறைக்க முடியும். பொரித்த உணவுகள் மற்றும் இனிப்புகளைத் தவிர்ப்பது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, தாவர உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவை முக்கியம். வொர்க் அவுட் என்றதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரம் செலவிட வேண்டும், சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் 40 முதல் 45 நிமிடங்கள், வாரத்தில் 5 நாள்களுக்காவது உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். மனநலம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
உடலுக்கும் மூளைக்கும் தொடர்புண்டு. மூளையைப் பாதிக்கும் விஷயங்கள் நிச்சயம் இதயத்தையும் பாதிக்கும். எனவே, மன அழுத்தம் தவிர்க்கும் விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
Also Read: Doctor Vikatan: `எனிமி' படத்தில் காட்டியதுபோல `பேஸ் மேக்கரை' ஹேக் செய்ய முடியுமா?
இதயத்தை அழுத்துவது போன்ற வலி, அது இடது கைக்குப் பரவுவது, வியர்வை, வாந்தி போன்றவை மாரடைப்புக்கான கிளாசிக் அறிகுறிகள். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை மூச்சு வாங்குதல், களைப்பாக உணர்தல், ஏதோ சரியாக இல்லாதது போன்ற உணர்வு ஆகியவை மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றை `ஏடிபிக்கல் சிம்ப்டம்ஸ்' (Atypical symptoms) என்கிறோம். நமக்கெல்லாம் மாரடைப்பு வராது என்ற அலட்சியமும், அடுத்தவர் நலனுக்கு கொடுக்கும் அக்கறையை தன் ஆரோக்கியத்தில் காட்டாதததும் பெண்களுக்கு ரிஸ்க்காக அமையலாம். வழக்கமான அறிகுறிகள் தவிர்த்து இப்படி ஏதேனும் அசாதாரணத்தை உணரும் பெண்கள் உடனே மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/why-there-is-sudden-rise-cardiac-arrest-problem-in-women-and-young-men
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக