Ad

வியாழன், 25 நவம்பர், 2021

மைல்ஸ்டோன் மனிதர்கள்-16: ‘கிருஷ்ணபவன் ஃபுட்ஸ்'-ன் வெற்றிப் பின்னணி!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் பிரமாண்டமாக விரிந்து கிடக்கிறது, கிருஷ்ணபவன் மசாலாக்கள், பொடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை. திட்டமிட்டு கட்டமைப்பை உருவாக்கியதில் தொடங்கி, பெண்கள் உரிய பாதுகாப்பாக பணியாற்றுவது வரை பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார் ராதேஷ்.

ராதேஷ்

இந்த தொழிற்சாலையில் 280-க்கும் மேற்பட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்படுகின்றன. பல நவீன எந்திரங்கள் உள்ளே இயங்கினாலும் எங்கு தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் பெண்களே அந்த வேலைகளை எடுத்துச் செய்கிறார்கள்.

Also Read: திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள்-15: `3-ல் தொடங்கி 350 வகைப் பொருட்கள்'- `கிருஷ்ணாபவன் ஃபுட்ஸ்' ராதேஷ்

ராகி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், கோதுமை, அரிசி, கடலை, உளுந்து, முளைகட்டிய ராகி, பச்சைப்பயிறு, தினை, குதிரைவாலி போன்ற தானியங்களின் மாவுகள் கிருஷ்ணபவனில் தயாராகின்றன. சிவப்பு அரிசியில் இடியாப்பம், கொளுக்கட்டை மாவுகளும் கிடைக்கின்றன. சிறுதானிய புட்டு மாவு, அரிசி வகைகள், குருணை வகைகள், அடை, பக்கோடா, உப்புமா மாவுகள், குளோப் ஜாமுன் மிக்ஸ், சத்துமாவுகள், பருப்பு சாதப் பொடி, எள்ளு, கொள்ளுசாதப் பொடிகள், பேஸ்ட்கள், இட்லி பொடிகள், மசாலாப் பொடிகள், சூப், பானப் பொடிகள், ஐஸ்கிரீம் மிக்ஸ்கள், பஞ்சாப் மசாலா பப்பட்ஸ், வத்தல்கள், வடகங்கள், விதைகள் என எல்லா வகையான உணவுப் பொருள்களும் கிருஷ்ணபவனில் தயாராகிறது.

கிருஷ்ணபவன் மசாலாக்கள்

"எல்லாமே பரிசார்த்த முயற்சிகள்ல தொடங்கினதுதான். ஒரு பொருளை மார்க்கெட்டுக்குக் கொண்டு வர்றதுக்கு முன்னாடி நாங்க வீட்டுல பயன்படுத்துவோம். நண்பர்களுக்கும் கொடுத்து கருத்துக் கேட்போம். அவங்க சொல்ற மாற்றங்களை செஞ்சு கடைசியாத்தான் கடைகளுக்குக் கொண்டு வருவோம். சமீபத்துல அதிரச மாவு கொண்டு வந்தோம். கடைகாரங்களே 'எங்க வீட்டுல செஞ்சு பார்த்தோம் சார்... ரொம்ப நல்லா வந்துச்சு'ன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க.

நிறைய செய்யவேண்டியிருக்குன்னு எந்திரங்களை நம்பலே. வீட்டுல எப்படி முறுக்குக்கு மாவு அரைப்போமோ அப்படித்தான் இங்கேயும் அரைப்போம். தானியங்களைக் கழுவி காயவைத்துப் பதப்படுத்துறதை பெண்கள் அவங்க வீட்டுல செய்ற மாதிரிதான் இங்கேயும் செய்வாங்க. பேக்கிங் செய்ய மட்டும் அதிநவீன எந்திரங்களை வாங்கி வச்சிருக்கோம்..." என்கிறார் ராதேஷ்.

ராதேஷ்

வணிகம் வளரத் தொடங்கியதும் ராதேஷ் உலகம் முழுவதும் பயணித்து அனுபவங்களைத் திரட்டத் தொடங்கிவிட்டார். சர்வதேச கண்காட்சிகள், தொழில் நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிட்டு தன் தொழில் சூழலுக்குப் பொருத்தமான எந்திரங்களை வாங்கி வந்துவிடுவார்.

Also Read: திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 13: இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு... வினோத் கண் மருத்துவமனை!

தொழிற்சாலையின் மொத்த இடத்தையும் பகுதி பகுதியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் வகைபிரித்து மாவுகள், பொடிகள் தயாராகின்றன. ஒரு பக்கம் பிரமாண்டமான ஒரு கிச்சனில் எல்லோருக்கும் உணவு தயாராகிறது. யாரேனும் பேக்டரியைப் பார்க்க வந்துவிட்டால், ஒரு பஜ்ஜி மாவு பாக்கெட்டைப் பிரித்து அருகிலிருக்கும் மரத்தில் இரண்டு வாழைக்காயைப் பறித்து பஜ்ஜி போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள்.

கிருஷ்ணபவன் மசாலாக்கள்

"எங்க தயாரிப்புகள்ல மில்க் ஷேக்ஸ், ஐஸ்கிரீம் வகைகளுக்கு நல்ல பேரு இருக்கு. மார்க்கெட்டிங், பேக்கிங்ன்னு மொத்தம் 500 பேர் எங்க நிறுவனத்தோட பின்னணியில இருக்காங்க. எந்தப் பொருள்லயும் துளியளவுகூட பிரிசர்வேட்டிவ் சேக்கிறதில்லைங்கிறதுல ஆரம்பம் முதல் இப்போ வரைக்கும் உறுதியா இருக்கோம். அதேமாதிரி நிறமிகளையும் தவிர்க்கிறோம். எங்க தயாரிப்புகளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அதுதான் எங்க தர நிர்ணயம். எங்கவீட்டுக் குழந்தைகளுக்கு நாங்க கொடுக்கிறோம். அதுதான் நாங்க தர்ற நம்பிக்கை.

எனக்கு இறைநம்பிக்கை அதிகம். பெரிசா ஆசைப்படமாட்டேன். எது நமக்கு விதிக்கப்பட்டிருக்கோ அது நடக்கும்ன்னு நம்புறவன். என்னை இயக்கிக்கிட்டு போற பாதையில நான் போய்க்கிட்டிருக்கேன். கிருஷ்ணபவன்ங்கிற பேரை நம்பி மக்கள் எங்கள் பொருள்களை வாங்குறாங்க. அந்த நம்பிக்கைக்கு உண்மையா இருக்கனும்ன்னு நினைக்கிறேன். ஆரம்பத்துல பரோட்டா மிக்ஸ் கொண்டு வந்தோம். அதுக்கு பெரிய பிசினஸ் இருந்துச்சு. ஒரு கட்டத்துல அது உடம்புக்கு நல்லதில்லைன்னு புரிஞ்சுச்சு... அந்த புராடக்டை அப்படியே நிறுத்திட்டோம். கடைகாரங்களுக்கு ஏன் நிறுத்தினோம்ன்னு புரிய வச்சோம். அது எங்க மேல இருக்கிற மரியாதையையும் நம்பிக்கையையும் அதிகமாக்குச்சு. நான் என்னவெல்லாம் சாப்பிட விரும்புறோனே அதையெல்லாம் விற்பனைக்குக் கொண்டு வந்தோம்.

கிருஷ்ணபவன் மசாலாக்கள்

தரத்துல நாங்க என்னைக்கும் சமரசம் பண்ணிக்கிட்டதில்லை. அதுதான் எங்களை 1500க்கும் மேற்பட்ட கடைகாரங்ககிட்ட கொண்டுபோய் சேர்த்திருக்கு. அதை எக்காலமும் காப்பாத்தணுங்கிறதுதான் எங்க நோக்கம்" என்கிறார் ராதேஷ்.

Also Read: திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 11: வாழைப் பொருள்களை மதிப்புக்கூட்டி சாதித்த சிவகுமார் - சசிரேகா!

ராதேஷின் மகன் பாலாஜி எம்பிஏ முடித்திருக்கிறார். அவரும் அப்பாவுக்கு நிர்வாகத்தில் உதவுகிறார். திருச்சியில் நான்கு லாட்ஜ்கள் இருக்கின்றன, தவிர, முத்தரசன்நல்லூரில் ஜெயேந்திரர் 15 நாள் தங்கி பூஜை செய்த வீட்டை வாங்கி கல்யாண மண்டபமாக மாற்றியிருக்கிறார் ராதேஷ்.

கிருஷ்ணபவன்

அறமும் நுகர்வோர் மீதான அக்கறையும் நழுவாமல் விழுமியங்களோடு தொழில் செய்யும் நிறுவனங்கள் காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். கிருஷ்ணபவன் நிறுவனமும் அப்படித்தான்!



source https://www.vikatan.com/business/miscellaneous/trichy-milestone-manidhargal-series-part-16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக