Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

மேடம் ஷகிலா 43: பெண் நட்புக்கு பெண்களே அஞ்சுவது ஏன்? ஆண் - பெண் நட்பிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

பதின்வயதில் 'அன்புள்ள சிநேகிதியே' எனும் தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பானது. சித்ரா பானர்ஜி திவாகருணி எழுதிய Sister of my Heart என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட இந்த சீரியல் சிறுவயது முதல் ஒன்றாக வளரும் ஒரே வயதுடைய இரண்டு பெண்களை சுற்றி பின்னப்பட்ட முக்கோணக் காதல் கதையை போன்றது. தோழிக்கும், சகோதரிக்கும் இடையில் ஒரு மெல்லியக் கோடு இருக்கிறது என்றும் பெண்களின் நட்பு எவ்வளவு ஆத்மார்த்தமானது என்றும் உணர்த்திய முதல் நினைவு இந்தத் தொலைக்காட்சி சீரியல்தான். அப்போதிருந்தே பெண் நண்பர்கள் மீது அளவில்லாத ப்ரியம் இருந்தாலும் பதின் வயதில் தோழிகளுடன் ஏற்பட்ட சிறு பிணக்குகள் ஆண் நண்பர்களே பழகுவதற்கு எளிதானவர்கள் என்றும் யோசிக்க வைத்திருக்கிறது. சூழ்நிலையும், வயதும் மாறும்போது நட்பு பற்றிய பார்வையும், புரிதலும் மாறிக் கொண்டே இருக்கிறது.

மேடம் ஷகிலா 43

கறுப்பு – வெள்ளை திரைப்படங்கள் காலம் முதலே இரண்டு பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருக்கும் கதை என்றாலே இருவரும் ஒரே ஆணை காதலிப்பது போலவும் அல்லது ஒரு முக்கோண காதல் கதையாகவும் பெரும்பாலும் இருக்கும். அதே சமயம் இரண்டு ஆண்கள் நண்பர்களாக இருக்கும் திரைப்படங்கள் என்றால் நட்பை போற்றுவதாக அமையும். தமிழ்த் திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், பட்டிமன்றங்கள், நம் வீடுகள் என எங்கு பார்த்தாலும் இரண்டு பெண்கள் சேர்ந்து ஓர் இடத்தில் இருக்கவே முடியாது, பெண்களின் நட்புக்கு ஆயுள் குறைவு, பெண்கள் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் பெண்களின் நட்பு பற்றி எண்ணற்ற கட்டுக் கதைகளை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

பெண்களின் நட்புக்கு ஆயுள் குறைவு என்கின்றனர். அது சாத்தியமில்லாமல் போவதற்கான காரணங்களில் ஒன்று, பெண்கள் எந்த முடிவையும் தன் குடும்பத்தை சார்ந்தே எடுக்க வேண்டி உள்ளது. இன்று 35 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களுக்கு பள்ளி நாள்கள் முதலே தங்கள் தோழிகளை வீட்டிற்கு அழைத்து வரக் கூட பல குடும்பங்களில் கட்டுப்பாடுகள் இருந்தன. வீட்டிலிருந்து தொலைபேசியில் தோழிகளுடன் பேசுவதற்கு அனுமதி கிடைப்பதும் அரிது. அதேபோல் முன்பு எட்டாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும்கூட பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அவார்களுக்கெல்லாம் குடும்பம் மற்றும் உறவினர்களைக் கடந்து வெளியுலக நட்பு என்பது அதிக அளவு சாத்தியமில்லை. பெண்களின் நட்பைக் குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் ஆழமாக பல ஆண்டுகளுக்கு கொண்டு செல்வது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம்.

குடும்பத்தினரின் மீதும், மற்ற காரணங்கள் மீதும் பழி போடுவது சரியா? பெண்கள் தங்களுக்குள் நட்பைத் தொடர முடியாமல் போவதற்கு வேறு காரணங்கள் இல்லையா?

நல்ல தோழிகளாக இருக்கும் இருவருக்குள் சண்டை எழுவதற்கான காரணங்கள் சில சமயங்களில் மிக சாதாரண விஷயங்களாகக் கூட இருக்கும். வாய் தவறிய சில சொற்கள், காப்பாற்ற முடியாத வாக்குறுதிகள், பல சமயங்களில் பொறாமை என்று வயது மற்றும் குணத்திற்கு ஏற்றாற் போல் காரணங்கள் மாறுப்படும். தங்களது நண்பர்களிடம் சண்டை இட்டுக் கொள்வது, பொறாமைப்படுவது, பேசிக் கொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஆண்களுக்கும் உண்டு. ஆனால் ஆண்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். பெண்களுக்கு இந்த வட்டம் மிகச் சிறியது. மிக நெருங்கிய தோழிகள் என்று ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அதனால் அவர்களுக்குள் பிரச்னைகள் எழும்போது அது மிகப் பெரியதாக தெரிகிறது.

மேடம் ஷகிலா
சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர் வீட்டில் குடியிருந்த பெண் மிகவும் நட்புடன் பழகினார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலையில் இருந்தார். புதிதாகக் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்திருந்த அவருக்கு நகரத்தின் அடுக்கு மாடி குடியிருப்பு வாழ்க்கை முறை பற்றி தெரியாது. அந்த நகரத்தில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் அதற்காக அவருக்கு உதவி தேவைப்பட்டது.

ஆரம்பத்தில் மிக அன்பாக இருந்தார். மிகவும் உரிமை எடுத்துக் கொண்டு பேசுவார். எப்போதும் உடன் இருக்க விரும்புவார். சில நாள்களிலேயே அவருக்கு பொறாமை உண்டானது. அதை வெளிக்காட்டாமல் நன்றாக பேசிக் கொண்டே வெளியே தவறாக பேச ஆரம்பித்தார். உச்சபட்சமாக அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மற்றவர்களை பற்றி தவறாகக் கட்டுக்கதைகள் கூறிவிட்டு அவற்றையெல்லாம் என்மூலம் தெரிந்து கொண்டதாகச் சொல்லிவிட்டார். இவை எல்லாவற்றிற்கும் இளம் வயதில் திருமணம் செய்தது, கணவர் வெளிநாட்டில் இருப்பது, நகர வாழ்க்கையில் தனியாகக் குடும்பத்தையும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பினால் ஏற்படும் மன அழுத்தம், இளம் வயது தனிமை எனப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதெல்லாம் புரிந்தாலும் அவரால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். அதற்கு பிறகு பெண்கள் நட்புடன் நெருங்கிப் பழகினாலே இன்றுவரை அச்சம் ஏற்படுகிறது.

தோழி ஒருத்தி ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த தனது அனுபவ பதிவு ஒன்றை ஒரு ஆன்லைன் பத்திரிக்கை வெளியிட்டது. அதை கண்ட நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த பெண் எழுத்தாளர் ஒருவர் தோழியின் பதிவில் குற்றம் கண்டுபிடித்து ட்ரோல் செய்ய ஆரம்பித்தார். தோழி அதை கண்டுகொள்ளவே இல்லை. பொறாமையின் உச்சத்தில் ஒருகட்டத்தில் தோழியை ப்ளாக் செய்துவிட்டார்.

அக்கா ஒருவர் தனது பள்ளி நண்பனுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு பேசினார். தினமும் வாட்ஸ்அப்பில் அக்காவின் படங்களை பார்த்து அவரது உடைகள் பற்றிய பேச்சு வந்தபோது என்னுடைய தேர்வு என்று என் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது நண்பர் அக்காவிடம் என்னுடைய எண்ணை வாங்கி கால் செய்தார். உடைத் தேர்வு என்பது வெறும் சாக்கு மட்டுமே. முதல் முறையாக இதுபோன்று ஒரு சம்பவம் நடக்கும்போது அதை எப்படி அணுகுவது என்று தெரியாமல் அக்காவின் நண்பரிடம் வேலை இருப்பதாகச் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டேன். அக்கா தனது நண்பருடன் மீண்டும் பேசுவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் பள்ளியில் உடன் படித்த நண்பர் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே இருப்பார்கள் என்று நம்புவது அபத்தம். அவர் பழகுவது அவரது விருப்பம் சார்ந்தது என்றாலும் பிற பெண்களை கேட்காமல் மற்றவர்களது தொடர்பு எண்களை கொடுப்பது, மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவது தவறு. இதேபோல் தோழிகள் பலரும் தங்களுடைய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள கணக்குகளின் பாஸ்வேர்டை தங்கள் கணவர் அல்லது காதலரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களை மட்டுமே நம்பி அவர்களுடன் பகிர்ந்துகொண்ட விஷயங்களை அவர்களது வீட்டு ஆண்களை பார்க்கச் செய்வது பெண்கள் தங்கள் பெண் நண்பர்களுக்குச் செய்யும் துரோகம்.

சமூக வலைதளங்களின் பலனாக பெண்களுக்கு விரிவான நட்பு வட்டம் சாத்தியமாகி இருக்கின்றது. பெண்கள் தங்கள் ரசனை, அரசியல் சார்ந்து இயங்கும் பெண்களுடன் நேரடியாக நட்பு வைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் சாமனிய பெண்கள் முற்போக்கு பேசும் பெண்களுடன் பழகும்போது அவர்களைச் சார்ந்தவர்கள் பயப்படுகின்றனர். தங்கள் வீட்டுப் பெண்கள் எப்போதும் தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்கள் சிறிது வெளிப்படையாகப் பேசும், பழகும், முற்போக்கான, சுதந்திரமான பெண்களை கண்டால் அஞ்சுகின்றனர். தங்கள் வீட்டு ஆண்களிடம் ’நல்ல பெயர்’(?!) வாங்க வேண்டும் என விரும்பும் பெண்கள், பெண்ணியவாதிகளை கேலி செய்வதாக பெண்ணியத்தையும், இத்தனை ஆண்டுகால பெண்ணுரிமை போராட்டங்களையும் அவமதிக்கின்றனர். பலர் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே இதை செய்கின்றனர்.

மேடம் ஷகிலா
ஆண்கள் உலகில் “சர்வைவ்“ ஆவதற்கு ஆண்களுக்குப் பிடித்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது துயரம். எந்தப் பாலினமாக இருந்தாலும் அவரவர் சுயமரியாதை மற்றும் சுதந்திரத்துடன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். ஆனால் பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக முதலில் விட்டுக் கொடுப்பது நட்பாக இருக்கின்றது.

இது போன்ற அனுபவங்கள் ஒன்றிரண்டு எல்லோருக்கும் ஏற்படும் என்றாலும் அவற்றால் உண்டாகும் மன உளைச்சலும், நேர விரயமும் அதிகம்.

இந்தச் சந்தர்பங்களில் ஆண்களின் நட்பில் இவ்வளவு பிரச்னைகள் இருக்காது என்று எண்ணியதுண்டு. ஆனால் வளர்ந்த சூழல் காரணமாக ஆண்களிடம் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசிவிட முடிந்ததில்லை. இன்னொரு பக்கம் நண்பர்களாக பழகுபவர்கள் சில நாள்களிலேயே அதை காதலாக புரிந்துக் கொண்டு அணுகுவதும் உண்டு. சகோதரராக நினைத்து பழகி, அண்ணா என்று அழைத்த நண்பர்கள் கூட அதை காதல் உறவாக நினைத்துக் கொண்ட கதைகள் கிட்டத்தட்ட எல்லா பெண்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அனுபவம். மேலும் சமூகத்தில் ஆண் – பெண் நட்பு பற்றிய புரிதல் தவறாக இருப்பதால் அதை வெளிப்படையாக தொடர வழியில்லாமல் போகிறது.

ஆண் நண்பர்களிடம் இருக்கும் பிரச்னை அவர்கள் வீட்டில் பெண் நண்பர்களை அறிமுகம் செய்து வைக்க பெரும்பாலும் தயங்குவார்கள். அவர்கள் வீட்டில் உள்ள பெண்களே நன்றாகப் பழகக் கூடியவர்களாக இருந்தாலும் இவர்கள் அந்தப் பெண்கள் மேல் பழிப்போட்டு பெண்களின் நட்பு ஏதோ செய்யக்கூடாத காரியம் போல் மறைத்து வைத்துக் கொள்வார்கள். சமூகம் இத்தனை காலமும் ஏற்படுத்தி வைத்திருக்கும் தவறான கருத்துகள் இதற்கு ஒரு முக்கிய காரணம். இன்னொன்று இந்த வெளிப்படைத்தன்மை இல்லாத ஆண்களுக்கு தங்களுடன் நட்பாக பழகும் பெண்களிடம் ஏதோ ஒரு தருணத்தில் “அட்வாண்டேஜ்” எடுத்துக் கொள்ளலாம் என்கிற சிறு எண்ணம் மனதில் இருக்கிறது. அது தன்னுடைய பெண் நண்பர் என்று ஒருவரை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள தடையாக இருக்கிறது.

சமீபமாக பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு ஆண் நண்பர்களுடன்தான் ”கம்ஃபர்ட் ஜோன்” உருவாகிறது என்றும், பிரச்னை இல்லாத நட்பு அமைகிறது என்றும் சொல்வதை கேட்கலாம். ஆண் நண்பர்கள் அதிகமாக நம்மை பற்றி மற்றவர்களிடம் பேச மாட்டார்கள், நமது வளர்ச்சியில் பொறாமைப்பட மாட்டார்கள் என்றெல்லாம் காரணங்கள் சொல்கிறார்கள். சாதாரணமாக ஒரு பெண் திடீரென்று முன்னேறினால் அவளை விட்டு விலகி நின்று பார்ப்பவர்களும், அவள் மேல் முதல் அவதூறை உருவாக்குபவர்களும் பெரும்பாலும் ஆண்கள்தான். குறிப்பாக அதுவரை அவளது நண்பர்களாக இருந்தவர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள்.

இது ஒவ்வொருவரின் அனுபவத்தை பொருத்தும் மாறுபடலாம். ஒவ்வொரு வளர்ச்சியின்போதும் உடன் இருந்து அரவணைத்து மகிழ்ந்தவர்கள் பெண்கள்.

என் அம்மா திருமணத்திற்கு பிறகு வெளியூருக்கு வந்தபோது அவருக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்தவர்கள் அவரது தோழிகள். இவ்வளவு காலமும் அந்த நட்பு மாறாமல் அந்த பெண்கள் தக்க வைத்து கொண்டிருக்கின்றனர். எங்கள் சிறுவயதில் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாத போது அம்மாவின் தோழிகள் வீட்டு வேலைகளில் உதவி செய்வது, பள்ளிக்கு உணவு சமைத்து கொடுத்தனப்புவது என உதவியாக இருந்தார்கள். வெவ்வேறு ஊர்கள் மாறிய பின்னும்கூட இன்றும் ஒருவருக்கொருவர் மனதளவில் உறுதுணையாக இருந்து வருவதெல்லாம் மிக அசாத்தியமாக தெரிகிறது. இன்றும் படிப்பு மற்றும் வேலை விஷயமாக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் பெரும்பாலும் பெண்களுக்கு அவர்களின் தோழிகள் பொருளாதார ரீதியாகவும், இடவசதி செய்து கொடுத்தும் உதவுகின்றனர். பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக இருப்பதற்கு பலவகையில் அவர்களது நண்பர்களே காரணமாக இருக்கின்றனர்.

நட்புக்கு பாலின பேதங்கள் கிடையாது. அவை உண்மையாக, நேர்மையாக இருக்கின்றனவா என்பது மட்டும்தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது.

பிகு : இரண்டு பெண்கள் நட்பாக பழகுவதற்கும், இரண்டு பெண்களிடையே காதல் உறவு ஏற்படுவதற்கும் உள்ள வித்தியாசம் பொது சமூகத்திற்கு புரிவதில்லை. இரண்டு பெண்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தால் அவர்களுக்குள் வேறு உறவுமுறை இருக்கிறது என்று சொல்லி “அவளா நீ” என்று கீழ்த்தரமாகக் கேலி செய்வது. அதேசமயம் இரண்டு பெண்கள் உண்மையில் காதலில் இருந்து அதை பொது சமூகத்தில் வெளிப்படையாக தெரிவித்தால் அவர்களால் கலாசாரத்திற்கு ஆபத்து என்று போர்க்கொடி பிடிப்பது என இன்னமும் இரண்டு ரத்த சம்பந்தம் இல்லாத பெண்களிடையே இருக்கும் உறவை ஒரு சமூகமாக சரியாக அணுகத் தெரியாமல் இருப்பது நாகரீகத்தின் அடையாளம் அல்ல.

- உரையாடுவோம்!



source https://www.vikatan.com/lifestyle/women/madam-shakeela-why-women-are-afraid-of-girl-boy-friendship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக