Ad

திங்கள், 29 நவம்பர், 2021

ஓமிக்ரான்: ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு குணமானவர்களையும் பாதிக்குமா புது வேரியன்ட்? - FAQ

கொரோனாவின் மூன்றாவது அலை வருமா என்ற பதற்றம் நீடித்து, ஒரு கட்டத்தில் `கொரோனாவாவது... ஒண்ணாவது' என்ற அளவுக்கு அதை மக்கள் மறந்தே போகும் நிலை ஆரம்பமானது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது என கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கிட்டத்தட்ட மறந்தேபோயிருந்த வேளையில், `வந்துட்டேன்னு சொல்லு.... நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்று வந்து நின்றது ஓமிக்ரான் எனும் உருமாறிய புதிய கொரோனா வைரஸ். `கவலையளிக்கும் உருமாற்றமாக' இதை அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டிருக்கும் நிலையில், ஓமிக்ரான் இந்தியாவுக்குள் நுழைந்துவிடாதபடி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அறிவித்திருக்கின்றன ஒன்றிய மற்றும் மாநில அரசுகள்.

வைரஸ் ஏன் அடிக்கடி தன்னை உருமாற்றிக் கொள்கிறது, புதிதாக உருமாறியிருக்கும் ஓமிக்ரான் வைரஸ் எப்படிப்பட்டது, அதன் பரவும் தன்மையும் பாதிப்பும் எப்படியிருக்கும்.... அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

வைரஸ் ஏன் அடிக்கடி உருமாறுகிறது?

எந்த ஒரு வைரஸும் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உருமாறிக்கொண்டே இருப்பதுதான் இயல்பு. அப்படி உலகிலுள்ள அனைத்து வைரஸ்களும் தம்மை உருமாற்றிக்கொண்டே இருப்பதால்தான் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி உருமாறுவதால் அந்த வைரஸ் அழியாமலிருப்பதுடன், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவவும் செய்கிறது.

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

கோவிட் வைரஸின் உருமாற்றம் எப்போது நிற்கும்?

கோவிட் வைரஸ் என்றில்லை, எந்த ஒரு வைரஸும் இந்த உலகில் இருக்கும் கடைசிநொடி வரை தன்னை உருமாற்றிக்கொண்டேதான் இருக்கும். அதுதான் அதன் இயல்பு.

வைரஸின் உருமாற்றம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்?

அது குறிப்பிட்ட அந்த உருமாற்றத்தைப் பொறுத்தது. சிலவகை உருமாற்றங்கள் ஆபத்தில்லாதவை. சில உருமாற்றங்கள் உண்மையில் மோசமானவை. இன்னும் சில இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கலாம். எனவே எந்த வைரஸ், எத்தகைய உருமாற்றம் என்பது தெரியாமல் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது.

இப்போது உருமாற்றமடைந்து பரவத் தொடங்கியிருக்கும் ஓமிக்ரான் வைரஸ் எந்தவகையில் வித்தியாசமானது?

ஓமிக்ரான் வைரஸானது அதிகபட்சமாக உருமாற்றமடைந்த வகையைச் சேர்ந்தது. அதாவது 50க்கும் மேலான உருமாற்றங்களைக் கண்டது இது. இதில் 32 உருமாற்றங்கள் வைரஸின் ஸ்பைக் புரதத்திலும், 10 உருமாற்றங்கள் ரிசப்டார் பைண்டிங் டொமைனிலுமாக முக்கியமான பகுதிகளில் நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் கவலைக்குரியதாகவும் இருக்கிறது.

ஓமிக்ரான் வைரஸின் பரவும் தன்மை தீவிரமாக இருக்குமா?

இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடியது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதன் தீவிரம் எப்படியிருக்கும் என்பதை இன்னும் 2 முதல் 3 வாரங்கள் பொறுத்திருந்து பார்த்துதான் சொல்ல முடியும்.

தடுப்பூசியின் செயல்திறனைத் தாண்டியும் இதன் பாதிப்பு இருக்குமா?

வைரஸின் உருமாற்ற எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது அது தடுப்பூசியின் செயல்திறனை சற்று குறைக்கலாம் என்றே தெரிகிறது. அது எந்தளவுக்கு குறையும் என்பதை உறுதியாகச் சொல்ல இன்னும் நிறைய ஆய்வுகள் தேவை.

People queue up for COVID-19 vaccine

Also Read: மிதமான காற்றில் வேகமாகப் பரவுமா கொரோனா வைரஸ்? ஐஐடி ஆய்வும் விளக்கமும்

ஆனால் அதையும் மீறி, ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் தடுப்பூசிகள், புதியவகை ஓமிக்ரான் வைரஸுக்கு எதிராகவும் ஓரளவு செயல்திறன் கொண்டவை என்றே நம்பப்படுகின்றன. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும் இனியும் தாமதிக்காமல் செலுத்திக்கொள்வதுதான் பாதுகாப்பானது.

ஓமிக்ரான் வைரஸ் தொற்றுக்கும் ஏற்கெனவே பின்பற்றப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பலனளிக்குமா?

ஏற்கெனவே கோவிட் தொற்றுக்குக் கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளும், ரெம்டெசிவிர் மருந்தும், மோல்னுபிராவிர் மருந்தும் பலனளிக்கும். அதே நேரத்தில் மோனோகுளோனல் ஆன்டிபாடி மருந்துகள் இந்த உருமாற்ற வைரஸ் தொற்றுக்கு முழுமையான பலன்களைத் தராமல் போகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு குணமானவர்களையும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் ஓமிக்ரான் வைரஸ் பாதிக்க வாய்ப்பிருக்கிறதா?

கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமானவர்களுக்கும் சரி, தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் சரி.... உடலில் குறிப்பிட்ட அளவுக்கு நோய் எதிர்ப்பாற்றல் உருவாகியிருக்கும். ஆனாலும் ஓமிக்ரான் வைரஸின் உருமாற்றத்தை வைத்துப் பார்க்கும்போது அது தொற்று வந்து குணமானவர்களையும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் மீண்டும் தாக்கவும் வாய்ப்புகள் உண்டு. இன்னும் 2 முதல் 3 வாரங்கள் கழித்தே எதையும் முழுமையாகச் சொல்ல முடியும்.

COVID-19 screening in Mumbai

Also Read: 30 முறை உருமாறிய கொரோனா வைரஸ்; அதிவேகத்தில் பரவல்; இந்தியாவை நெருங்குகிறதா அடுத்த அலை?

ஓமிக்ரான் வைரஸை உலக சுகாதார நிறுவனம், `கவலைக்குரிய உருமாற்றமாக' அறிவித்திருப்பது ஏன்?

உண்மைதான். அதன் உருமாற்றமானது வைரஸின் மிக முக்கியமான பகுதிகளில் நிகழ்ந்திருப்பதாலேயே இப்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர இது உலகம் முழுக்கப் பரவும் தன்மை கொண்டது என்ற கணிப்பின் அடிப்படையிலும் அப்படிக் குறிப்பிடப்படுகிறது. இதுவரை 12 நாடுகளில் நூற்றுக்கும் மேலான நபர்களை பாதித்திருக்கிறது. ஏற்கெனவே சொன்னதுபோல இன்னும் ஒன்றிரண்டு வாரங்கள் கழித்துதான் இதன் தீவிரம் எப்படியிருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அடுத்தடுத்த உருமாற்ற வைரஸ் தொற்று பாதிப்புகளிலிருந்து காக்குமா?

பூஸ்டர் டோஸ் என்பது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடும். ஆனால் அது ஓமிக்ரான் உருமாற்ற வைரஸ் விஷயத்தில் எந்தளவுக்குப் பலன் தரும் என்பது தெரியாது. பூஸ்டர் போடுவதைக் காட்டிலும் முக்கியமானது தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது. ஒரு டோஸ் தடுப்பூசிகூட செலுத்திக்கொள்ளாத நபர்கள் இந்தியாவில் இன்னும் ஏராளமானோர் இருக்கிறார்கள். எனவே நம்முடைய இலக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது அல்ல.... ஒரு தவணைகூட போட்டுக்கொள்ளாதவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைப்பதுதான்.



source https://www.vikatan.com/health/healthy/infectious-disease-expert-answers-your-questions-on-new-covid-omicron-variant

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக