2008-ம் நவம்பர் 26ம் தேதியை மும்பை மக்களால் எப்போதும் மறக்க முடியாது. யாருமே எதிர்பாராத நிலையில் திடீரென பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நவீன துப்பாக்கிகளுடன் தென் மும்பையின் முக்கிய இடங்களில் புகுந்து சரமாரியாக சுட்டனர். லஷ்கர் இ தொய்பா தீவிர அமைப்பை சேர்ந்த அந்த தீவிரவாதிகள் மும்பைக்கு அருகில் உள்ள கராச்சி துறைமுகத்தில் இருந்து சேட்டிலைட் போன்களுடன் மும்பைக்கு படகுகளில் வந்து சேர்ந்தனர். தென் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சி.எஸ்.டி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, யூதர்களின் வழிபாட்டுத்தலம் போன்ற இடங்களில் தானியங்கி துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் புகுந்தது கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர்.
இரவு 9.30 மணிக்கு படகில் வந்து இறங்கியவுடன் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்தனர். 10 தீவிரவாதிகளும் நவீன முறையில் பயிற்சியளிக்கப்பட்டு தற்கொலைப் படையினராக அனுப்பிவைக்கப்பட்டனர். மும்பை போலீஸார் தீவிரவாதிகளை எதிர்த்து போராடினர். ஆனால் போலீஸார் எந்த விதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் வழக்கமாக ஓரிரு தீவிரவாதிகள்தான் இருப்பார்கள் என்று கருதி சென்றனர். இதனால் மும்பை போலீஸார் முக்கிய அதிகாரிகளை இந்த சண்டையில் இழந்தனர். தேசிய பாதுகாப்பு படை மற்றும் மும்பை போலீஸார் இணைந்து வெறும் 10 தீவிரவாதிகளை எதிர்த்து 3 நாட்கள் போராடினர். அதன் பிறகே 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார். அவருக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கியதை தொடர்ந்து புனே சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
அஜ்மல் கசாப்பை சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் தனது உயிரை பணயம் வைத்து பிடித்தார். தன்னிடம் இருந்த லத்தியை மட்டும் ஆயுதமாக வைத்து பிடித்தார். கசாப், சப் இன்ஸ்பெக்டரை 5 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டார். அப்படியும் தீவிரவாதியை விடாமல் பிடித்தார். இறுதியில் மற்ற போலீஸார் வந்து கசாப்பை பிடித்தனர். இதில் கசாப்பை பிடித்த சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் உயிர் தியாகம் செய்தார். தீவிரவாதிகளின் 3 நாள் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 166 பேர் உயிரிழந்தனர். மேலும் 238 பேர் காயம் அடைந்தனர்.
1993-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் துணையுடன் மும்பையில் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு அடுத்தபடியாக மும்பையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக 2008-ம் ஆண்டு தாக்குதல் கருதப்படுகிறது. 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளை நாடுகளை சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தால் மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல், மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ்தேவ் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இத்தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான லஷ்கர் இ தொய்பா தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருக்கினர். அவர்களை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு இன்னும் முன் வரவில்லை. தீவிரவாதிகளுக்கு தொழில் நுட்ப ஆதரவு கொடுத்து தாக்குதலை நடத்த உதவியது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு. அதனை நிரூபிக்கும் வகையில் தீவிரவாதிகளின் தாக்குதல் இருந்தது.
இது குறித்து அப்போது அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், ``தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ராணுவ தாக்குதல் போன்று இருந்தது. தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மட்டும் உளவுத்துறை தெரிவித்திருந்தது. எப்போது என்பது தொடர்பாக குறிப்பிட்டு சொல்லவில்லை. 1993-ம் ஆண்டில் இருந்தே மும்பை தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சத்தில் இருந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இத்தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு மகாராஷ்டிராவில் தனி தீவிரவாத தடுப்பு படை அமைக்கப்பட்டது. மும்பை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இத்தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு மகாராஷ்டிராவில் உள்துறை செயலாளராக பதவியேற்ற சந்திரா ஐயங்கார் இது குறித்து கூறுகையில், ``இத்தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டனர். மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு போர்ஸ் ஒன் படை உருவாக்கப்பட்டதோடு பாதுகாப்பை பலப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
Also Read: மும்பை: ரயில் நிலையத்தில் பையை திருடிக்கொண்டு ஓடிய திருடன்! - விரட்டிச் சென்ற பயணிக்கு நேர்ந்த கதி
இத்தாக்குதல் சம்பவத்திற்கு மும்பை தீவிரவாதிகளின் எந்தவிதமான தாக்குதலையும் இதுவரை சந்திக்கவில்லை. இத்தாக்குதல் சம்பவத்தின்போது, இப்போது மும்பையில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தமிழ்செல்வம் தீவிரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அவரிடம் இது குறித்து கேட்டதற்கு, ``எனக்கு சி.எஸ்.டி.ரயில் நிலையத்தில் சரக்கு ஏற்றி அனுப்பும் பணி நடந்து வருகிறது. நான் கடைசி ரயிலில் சரக்குகளை ஏற்றி அனுப்பி விட்டு ஊழியரகளுக்கு சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்த போது ரயில் நிலையத்தின் முன்பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பயணிகள் கூச்சலிட்டபடி உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடினர். நானும் எனது ஊழியர்களும் உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம்” என்று கூறினார். மகாராஷ்டிராவில் உள்ள ஒரே தமிழ் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் ஆவார்.
source https://www.vikatan.com/news/india/26-11the-world-shaking-mumbai-attack-justice-not-available-for-13-years
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக