Ad

திங்கள், 29 நவம்பர், 2021

பிக்பேஷ் லீகின் `Player of the tournament' - மெல்பெர்ன் அணியைக் கட்டிக் காத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!

ஆஸ்திரேலியாவின் WBBL சீசன் 7 நடந்து முடிந்திருக்கிறது. பெண்களுக்கான இந்தத் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி கோப்பையை வென்றிருக்கிறது. இதில், இந்திய ரசிகர்கள் சந்தோஷப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமில்லை. ஆனால் இந்த சீசனில் மெல்பெர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக ஆடிய இந்திய பெண்கள் டி20 அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் 'Player of the tournament' விருதை வென்றிருக்கிறார். இது நிச்சயமாக இந்திய ரசிகர்களை மகிழ்வடைய செய்யும் செய்தியாகவே அமைந்திருக்கிறது.

பெண்கள் கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத முகம் ஹர்மன்ப்ரீத் கவுர். கடைசி பத்தாண்டுகளில் இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவராக உருவெடுத்து நிற்கிறார். இந்திய அணியின் கேப்டனாகவும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால், சமீபமாக தனிப்பட்ட முறையில் அவரது ஃபார்ம் என்பது ரொம்பவே சுமாராகத்தான் இருந்து வந்தது.

2017 ஓடிஐ உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 171 ரன்களை அடித்து வெளுத்திருப்பார். ஹர்மன்ப்ரீத்தின் கரியரில் மட்டுமில்லை. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக முக்கிய இன்னிங்ஸ்களுள் ஒன்றாக அது அமைந்திருந்தது. ஆனால், அதன்பிறகு இப்போது வரை ஓடிஐ போட்டிகளில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

டி20 போட்டிகளை பொறுத்தவரைக்கும் கடைசியாக 2018 இல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதமடித்திருந்தார். அந்த மிகச்சிறந்த இன்னிங்ஸிற்கு பிறகு இப்போது வரை சர்வதேச டி20 போட்டிகளில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு அரைசதத்தை கூட அடிக்கவில்லை.

ஹர்மன்ப்ரீத் கவுர்

சதம் மற்றும் அரைசதம் மட்டுமே ஒரு வீரர்/வீராங்கனையின் ஃபார்மை நிர்ணயித்து விடாது. அணிக்கு பிரயோஜனப்படும் வகையில் தாக்கம் ஏற்பட்டுத்தும் சிறிய இன்னிங்ஸ்கள் கூட போற்றத்தக்கவைதான். ஆனால், ஹர்மன்ப்ரீத் கவுரிடமிருந்து பெரிதாக அப்படிப்பட்ட இன்னிங்ஸ்களும் வந்திருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு இன்னிங்ஸ்களைத்தான் ஆடியிருந்தார்.

2020 தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. அந்தத் தொடரில் மொத்தமாகவே வெறும் 30 ரன்களை மட்டுமே கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்திருந்தார். இறுதிப்போட்டியின் மோசமான தோல்விக்கு ஹர்மன்ப்ரீத் கவுரும் முக்கிய காரணமாக அமைந்தார். கொரோனா, லாக்டௌன் இந்தப் பிரச்னைகளெல்லாம் முடிந்த பிறகு இந்தியா இப்போது வரை மூன்று சர்வதேச தொடர்களில் ஆடியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உள்ளூர் தொடர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப்பயணங்கள் என மூன்று தொடரிலுமே ஹர்மன்ப்ரீத் கவுர் சொல்லிக் கொள்ளுமளவுக்கு பெர்ஃபார்ம் செய்திருக்கவில்லை.

எதிர்பாராத இடர்களும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு எதிராக இருந்தன. கொரோனா இரண்டாம் அலையின் போது ஹர்மன்ப்ரீத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு வந்தவர் தொடர்ச்சியாகக் காயங்களினால் அவதியுற்றார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு தொடர்களிலுமே ஹர்மன்ப்ரீத் முழுமையாக ஆடியிருக்கவில்லை. நன்றாகத் தொடங்கிய இங்கிலாந்தின் 'The Hundred' தொடரிலிருந்தும் காயம் காரணமாக இடையிலேயே வெளியேறினார். தொடர்ச்சியான காயங்களும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஃபார்முக்கு திரும்புவதற்கு இடையூறாக அமைந்தது.

இந்நிலையில்தான், ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் தொடர் தொடங்கியது. இந்தியாவிலிருந்து பிக்பேஷ் தொடரில் ஆடிய முதல் வீராங்கனை எனும் பெருமையை பெற்றவர் ஹர்மன்ப்ரீத் கவுர். ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக அவர் பிக்பேஷ் லீகுக்குச் செல்லவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் ஆடிய சிட்னி தண்டர்ஸ் அவரைக் கழட்டிவிடவே மெல்பெர்ன் ரெனகேட்ஸ் அணி சீசன் 7 க்காக அவரை ஒப்பந்தம் செய்தது. ஆஸ்திரேலிய தொடரை முடித்த கையோடு அப்படியே மெல்பெர்ன் ரெனகேட்ஸ் அணியோடு இணைந்தார்.

ஹர்மன்ப்ரீத் கவுர்

மெல்பெர்ன் ரெனகேட்ஸ் அணி இதுவரை சாம்பியன் ஆனதே இல்லை. மற்ற சீசன்களில் ரொம்பவே சுமாராக ஆடிய அணி 2018, 2019 சீசன்களில் ப்ளே ஆஃப்ஸ் வரை முன்னேறியிருந்தது. ஆனால், மீண்டும் கடந்த சீசனில் ஏழாவது இடத்திற்கு கீழிறங்கியது.

ஏற்ற இறக்கமாக பெர்ஃபார்ம் செய்து வந்த அந்த அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் இந்த சீசனில் கேம் சேஞ்சராக மாறினார். சமீபமாக ஃபார்மிலேயே இல்லாத ஹர்மன்ப்ரீத் கவுர் மெல்பெர்ன் அணிக்காக சூறாவளியாக சுழன்றடிப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

இந்த சீசனில் மட்டும் 406 ரன்களை எடுத்திருக்கிறார். பேட்டிங்கில் மட்டுமில்லை பௌலிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மெல்பெர்ன் அணிக்காக இந்த சீசனில் அதிக ரன்களை அடித்தவரும் அவரே. அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பவரும் அவரே.

ஒரு ஆல்ரவுண்டராக மிகச்சிறப்பான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடினார்.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக 46 பந்துகளில் 73 ரன்களை அடித்திருப்பார். அதே ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 31 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பார். ப்ரிஸ்பேனுக்கு எதிராக அடித்த 65 ரன்களும் சிட்னி தண்டருக்கு எதிராக அடித்த 81 ரன்கள் என பல முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடினார். பௌலிங்கிலும் ஆஃப் ஸ்பின்னராக பவர்ப்ளே, மிடில், டெத் என மூன்று பகுதிகளிலும் சிறப்பாக வீசி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.

HarmanPreet Kaur

மெல்பெர்ன் அணி ப்ளே ஆஃப்ஸ் வரை முன்னேறியதற்கு ஹர்மன்ப்ரீத் கவுரே மிக முக்கிய காரணமாக இருந்தார். இதன்காரணமாக 'Player of the tournament' விருது ஹர்மன்ப்ரீத் கவுருக்கே வழங்கப்பட்டது. பெத் மூனி, சோஃபி டிவைன் போன்றோரை தாண்டி நடுவர்களின் பார்வை ஹர்மன்ப்ரீத் மீதே விழுந்திருந்தது. இந்த சீசனில் சிறப்பாக ஆடிய வீராங்கனைகளை வைத்து உருவாக்கப்பட்ட ப்ளேயிங் லெவனிலும் ஹர்மன்ப்ரீத்திற்கு இடம் கொடுக்கப்பட்டது. இந்தியா சார்பில் அந்த ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்த ஒரே வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கவுர் மட்டுமே இருந்தார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் ஃபார்முக்குத் திரும்பியதில் மெல்பெர்ன் மட்டுமில்லை, இந்திய அணியுமே பயங்கர உற்சாகத்திலேயே இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகக்கோப்பை தொடர்கள் நடைபெறவிருக்கும் நிலையில், ஹர்மன்ப்ரீத்தின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கும் வகையிலேயே இருந்தது. பிக்பேஷ் மூலம் ஹர்மன்ப்ரீத் கவுர் கொடுத்திருக்கும் கம்பேக் இந்திய அணிக்கும் லிமிடெட் ஓவர்களில் பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.


source https://sports.vikatan.com/cricket/harmanpreet-kaur-gave-comeback-by-winning-the-player-of-the-tournament-in-wbbl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக