Ad

திங்கள், 29 நவம்பர், 2021

குளம் போலக் காட்சியளிக்கும் குடியிருப்பு பகுதிகள்; நோய் அபாயத்தில் மக்கள் -மழைவெள்ள பாதிப்பு நிலவரம்

பல்லாவரம்:-

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. பல்லாவரம் சந்தை வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அதேபோல, பழைய பல்லாவரத்திலிருக்கும் திருவள்ளுவர் நகரில், மழை நீரோடு, கழிவு நீரும் சேர்ந்து தேங்கி நிற்பதால், மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வேலைக்கு செல்லும் செல்பவர்கள், தேங்கி நிற்கும் கழிவு நீரில் நடந்து செல்கின்றனர். மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கியிருப்பதால், மழைக்கால நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சப்படுகின்றனர்.

பல்லாவரம்
பல்லாவரம்
பல்லாவரம்
பல்லாவரம்

மேலும் வெள்ள நீர்சூழ்ந்திருக்கும் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாவரத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துகொண்டிருக்கும் அதிகாரிகள், பல்லாவரம் பகுதியில் மட்டும் ஆய்வு மேற்கொண்டு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். நோய் அபாயம் ஏற்படும் முன்னர் இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா அரசு அதிகாரிகள் என்பது அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- ஜீவா கணேஷ்

(மாணவப் பத்திரிகையாளர்)

வேளச்சேரி:-

வேளச்சேரியை அடுத்திருக்கும் பெரும்பாக்கம் பிரதான சாலையில் நேற்று பெய்த கன மழை காரணமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கியிருப்பதால், காவல்துறையினர் சாலையைத் தற்காலிகமாக மூடியிருக்கின்றனர். இருப்பினும் வேலைக்குச் செல்லும் மக்கள் தேங்கிய தண்ணீரில் சாகசம் செய்தபடி கடந்து செல்கின்றனர். பெரும்பாக்கம் பிரதான சாலை பல ஐடி நிறுவனங்கள் மற்றும் குளோபல் மருத்துவமனை போன்ற சில முக்கிய இடங்களை இணைக்கும் வழியாக இருக்கிறது. மேலும் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளும் சாலை நெடுகிலும் இருக்கின்றன. அதேபோல, கட்டடப் பணிகளும் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருக்கின்றன. தண்ணீர் அதிக நேரம் தேங்கிய காரணத்தால் சாலையின் தடுப்புச் சுவரும் சேதமடைந்திருக்கிறது.

பெரும்பாக்கம்
பெரும்பாக்கம்
பெரும்பாக்கம்
பெரும்பாக்கம்
பெரும்பாக்கம்

மேலும், சில இடங்களில் மின்சாரக் கம்பிகள் நடைபயணிகளுக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றன. அதனால், சமூக ஆர்வலர்கள் சாலையை மக்களுக்கு ஏதுவான வழியில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் நீரை வெளியேற்ற போதிய வடிகால் இல்லாததுதான் மழை நீர் தேங்கி நிற்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும் முழு முனைப்புடன் களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

- சுஷ்மிதா

(மாணவப் பத்திரிகையாளர்)

திருநீர்மலை:-

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் மண்டலத்துக்கு உட்பட்ட திருநீர்மலை பகுதி, கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மீட்பு படையினர் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரையும், பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருநீர்மலை பகுதியில் ஒவ்வொரு முறை கனமழை பெய்யும் போதும், தாங்கள்கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

- மாணவப் பத்திரிகையாளர்

கடலூர்:-

கடலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத்தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பண்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்பட்டாம்பாக்கம் பகுதியில், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேல்பட்டாம்பாக்கம், திரௌபதி அம்மன் கோயில் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், குளம் நிரம்பியிருக்கிறது. ஆனால், குளம் சரியாகத் தூர்வாராமலும் குளத்தின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும், குளம் நிரம்பிக் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்திருப்பதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை என்று பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்திருக்கும் மழைநீரைச் சரிசெய்ய வேண்டும் என்றும், குளத்தைத் தூர்வாரி, ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றவேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

- வெ.தயாநிதி

(மாணவப் பத்திரிகையாளர்)



source https://www.vikatan.com/news/tamilnadu/news-about-rain-flood-in-various-places

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக