Ad

ஞாயிறு, 28 நவம்பர், 2021

"என் படத்துல கண்டிப்பா ஒர்க் பண்றேன்னு சொல்லியிருந்தார். ஆனா..." - சிவசங்கர் மாஸ்டர் குறித்து நவீன்

தமிழ், தெலுங்கில் நடன இயக்குநராக பிரபலமானவர், கே. சிவசங்கர். நடன மாஸ்டராக மட்டுமின்றி நடிகராகவும் முத்திரை பதித்தவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

சமீபத்தில் இவர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே' தொடரில் நடன இயக்குநராக நடித்திருந்தார். சிவசங்கர் மாஸ்டருடன் நடித்த அனுபவம் குறித்து அந்தத் தொடரின் நாயகன் நவீன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

நவீன், சிவசங்கர்

"சிவசங்கர் மாஸ்டர் கூட ரொம்ப நாளா ஒர்க் பண்ணனும் என்கிற ஆசை எனக்கு இருந்துச்சு. எதார்த்தமா சீரியல் மூலமா அந்த வாய்ப்பு அமைஞ்சது. அவர் ரொம்ப சீனியரா இருப்பார். அவ்வளவு எளிமையா இருந்தார். கதைப்படி எனக்கு டான்ஸ் கற்றுக் கொள்ள விருப்பம் இல்லாம போவேன்... அவர் எனக்கு கற்றுக் கொடுப்பார். அவரை நான் அடிக்கிற மாதிரியெல்லாம் சீன் வரும். வயதில் மூத்தவரா இருந்தாலும் எதையும் பெருசா எடுத்துக்காம நடிச்சார். 'இது நடிப்புதான் கண்ணு ஒண்ணுமில்லை நீ சும்மா பண்ணுன்னு' ரொம்ப கம்பர்டபுளா ஃபீல் பண்ண வெச்சார்.

அவர் கூட பத்து நாள் ஒர்க் பண்ணினேன். பல விஷயங்கள் பற்றி மணிக்கணக்கா ரெண்டு பேரும் பேசியிருக்கோம். 'நான் கண்டிப்பா சினிமா பண்ணுவேன் சார். என் படத்துக்கு நீங்கதான் கோரியோகிராப் பண்ணனும்'னு சொன்னேன். 'அதனால என்ன கண்ணு... கண்டிப்பா பண்றேன்'னு சொன்னார். வெளியூரில் ஷூட்டிங்கிற்காக இருக்கிறதனால அவர் முகத்தை கடைசியா பார்க்க முடியலை. அவரோட சிரிச்ச முகம் என் மனசுல அப்படியே பதிஞ்சிருக்கு. அவரை மாதிரியே இமிடேட் பண்ணி நடிச்சு காட்டினேன். அதை ரொம்ப ரசிச்சு என்ஜாய் பண்ணினார். அவரை ஆரம்பத்தில் நல்ல நடன இயக்குநராகத்தான் தெரியும். ஆனா, அவர் கூட ஒர்க் பண்ணினப்போதான் அவர் நல்ல ஆர்ட்டிஸ்ட்னு தெரிஞ்சது. டைமிங் காமெடியில் அவரை அடிச்சுக்க முடியாது.

நவீன், சிவசங்கர்

அவரோட சீன் முடிஞ்சு போனதுக்கு அப்புறம் டைரக்டர்கிட்ட ஃபோன் பண்ணி, 'நாள், சம்பளம் பற்றிலாம் யோசிக்காதீங்க... இந்த டீம் கூட ஒர்க் பண்ண எனக்கு பிடிச்சிருக்கு... கண்டிப்பா திருப்பி கூப்பிடுங்க'ன்னு சொல்லியிருக்கார்.

அவரோட திடீர் மறைவை ஏற்றுக்கொள்ள முடியலை. ஒரு நல்ல மனிதரை இழந்துட்டோம்னு நிச்சயம் வருத்தமா இருக்கு. அவரோட ஆன்மா சாந்தியடையணும்னு இறைவனை வேண்டிக்கிறேன்" என்றார் நவீன்.



source https://cinema.vikatan.com/television/idhayathai-thirudathey-serial-fame-naveen-shares-his-memory-about-dance-master-sivasankar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக