Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய இளைஞர்; உயிரிழந்த பாதிக்கப்பட்ட பெண்! -12 வருடங்களுக்குப் பின் நீதி

விழுப்புரம் மாவட்டம், முகையூர் அருகே உள்ளது அந்திலி கிராமம். கடந்த 2009 -ம் ஆண்டு, இந்த கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய பெண்ணும், பழவியாபாரி சுரேஷ் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணிடம், "உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்" என்று ஆசை வார்த்தைகளை கூறி, நெருங்கி பழகி வந்திருக்கிறார் சுரேஷ். இந்நிலையில் கர்ப்பம் அடைந்த அந்த இளம் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுரேஷிடம் மன்றாடி கேட்டபோதும் அவர், திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அப்பெண், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிந்து விசாரித்துள்ளனர் காவல்துறையினர். இந்நிலையில், திருக்கோயிலூர் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.

Also Read: தொடரும் பாலியல் குற்றங்கள்... பலியாகும் பள்ளி மாணவிகள்! - ‘‘என் மக சாவுக்கு நீதி கிடைக்கணும்!’’

இதனிடையே அந்த பெண், பிரசவத்திற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையிலேயே பிறந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அப்பெண்ணும், ஒரு வாரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

நீதிமன்ற வளாகம் - விழுப்புரம்

இது தொடர்பான வழக்கு, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து சாட்சிகளின் விசாரணைகள் முடிந்த நிலையில், நேற்று (30.11.2021) அதிரடி தீர்ப்பை அறிவித்துள்ளார் நீதிபதி சாந்தி. இளம் பெண்ணை ஏமாற்றிய சுரேஷூக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையும், 25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளார். இந்த தீர்ப்பை தொடர்ந்து, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சுரேஷ்.



source https://www.vikatan.com/news/judiciary/villupuram-womens-court-has-sentenced-a-man-to-7-years-in-prison-for-cheating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக